திங்கள், 12 ஜனவரி, 2026

சென்னை புத்தக திருவிழா அரங்குகளும் பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகளும்

முழுமையாக படியுங்கள் தங்களின் பேராதரவை வழங்குங்கள்!

KVTC அரங்கு எண் 659.

பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகள் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு அரங்கு.

 

மதி நிலையம் அரங்கு எண் F14, உயிர் பதிப்பகம் அரங்கு எண் 107.

Everlasting Efforts: A Review of Services to the Blind 

Dr. K. radhabai.

கதிர்வீச்சு மற்றும் அணு ஆற்றல் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள்

ஜி.வைத்தியநாதன் & வி.ராஜகோபால் தமிழில் முனைவர் வரதராஜ்.

பார்வையற்றோரின் வாழ்வில் நிலையான வளர்ச்சிக்கான அழியா அஸ்திவாரங்கள்

முனைவர் K. ராதாபாய் தமிழில் முனைவர் வரதராஜ்.

அனல் வீசும் பனித் துளிகள்

முனைவர் உ. மகேந்திரன்.

 

தமிழ் மண் பதிப்பகம் அரங்கு எண் 514, 515

தேனூறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும் 

கோவை இளஞ்சூரியன் என்கிற திருக்குறள் பொன்னுசாமி

 

போதி வனம் பதிப்பகம் அரங்கு எண் 263, 264.

குரல்களின் ஊடாக இலக்கிய உலகையும் மனிதர்களையும் வாசிப்பவனின் சில உரையாடல்களும் மதிப்பீடுகளும்  

முனைவர் ஞானகுரு.

 

பாரதி புத்தகாலயம் அரங்கு எண் F43

கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்

முனைவர் மு. முருகேசன்.

 

ஜீவா பதிப்பகம் அரங்கு எண் 172

பார்வையற்றோர் தன் மேம்பாடும் எதிர்நோக்கும் சவால்களும்

இந்தியாவில் பார்வையற்றோர்: கலை பண்பாடு களச்செயல்பாடுகள்

பார்வையற்றோர் நீங்கா நினைவுகளில் காரல்மார்க்ஸ் கண்ணன்

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.

தமிழ் வனம் பகுதி 1

தமிழ் வனம் பகுதி 2

அந்தகக்கவிப் பேரவை.

 

KVTC அரங்கு எண் 659-ல் உள்ள புத்தகங்களின் பட்டியல்

1. அந்தரத்தில் தொங்கும் நிலவு - சே.சரவணன்.

2. எங்கே எனது ஒளி - சே. சரவணன்.

3. வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம் - மு. ரமேஷ்.

4. தன்னடையாளங்களை எழுதி பார்த்தல் - மு. ரமேஷ்.

5. புத்தம் + திராவிடம் = சமூக நீதி - மு. ரமேஷ்.

6. தமிழ் சங்க மரபில் புத்த சங்க மரபு - மு. ரமேஷ்.

7. சங்க இலக்கியத்தில் நிலங்கள் குடிகள் வழிபாடுகள் - மு. ரமேஷ்.

8. சரித்திர விலாசம் - சுப்லாநாகராஜ்.

9. My First Impressions - காயத்திரி.

10. பூங்கொடி காதலி - சுப்லா நாகராஜன்.

11. பேசும் ஓவியம் - பா.மோகன்.

12. மணிமேகலைக் காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் - மு.ரமேஷ்.

13. சங்க இலக்கியத்தில் சமயங்களும் மெய்யியல் கூறுகளும் - மு. ரமேஷ்.

14. குடைக்குள் கொடை - பா.சுமதி.

15. அனல் வீசும் பனித்துளிகள் - உ. மகேந்திரன்.

16. நிசப்த அலைகள் - தாஹிரா.

17. முப்பாவில் முப்பால் - பா. மோகன்.

18. இருள் என்பது குறைந்த ஒளியே - அ. வெங்கடேஷ்.

19. மணிமேகலை காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை - மு. ரமேஷ்.

20. நாச்சியார் பிள்ளைத்தமிழ் - பா. மோகன்.

21. தேனூறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும் - இளஞ்சூரியன்.

22. சாஸ்தா பிறப்பு - சாரதா வேணுகோபால்.

23. திருக்குறளும் மணிமேகலையும் - மு. ரமேஷ்.

24. காத்திருப்பு - வே. சுகுமாரன்.

25. காட்டுவாத்துகள் - வே. சுகுமாரன்.

26. எங்கிருந்து வந்தாள் - வே. சுகுமாரன்.

27. நெருப்பு நிஜங்கள் - வே. சுகுமாரன்.

28. நியாயங்கள் காயப்படுவதா? - வே. சுகுமாரன்.

29. தொல் பனுவல்களும் பன்முக நோக்கும் - கு. பத்மநாபன்.

30. உயிர்க்காடு - கு. பத்மநாபன்.

31. காதல் மெய்ப்பட - அற்புதம்.

32. நெஞ்சில் நிறைந்தவை - அற்புதம்.

33. தனித்துவம் பேணிடாத் தமிழர் - அற்புதம்.

34. கதிர்வீச்சு மற்றும் அணு ஆற்றல் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள் - வரதராஜ்.

35. Everlasting Efforts: A Review of Services to the Blind - Dr. K. radhabai.

36. கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள் - மு. முருகேசன்.

37. புன்னகை அரும்புகள் - நா. ஆனந்தி

38. என் விழிக்கொரு தீபம் - நா. ஆனந்தி

39. பார்வையற்றோர் தன் மேம்பாடும் எதிர்நோக்கும் சவால்களும் - CSGAB.

40. இந்தியாவில் பார்வையற்றோர்: கலை பண்பாடு களச்செயல்பாடுகள் - CSGAB.

41. பார்வையற்றோர் நீங்கா நினைவுகளில் காரல்மார்க்ஸ் கண்ணன் - CSGAB.

42. தமிழ் வனம் பகுதி 1  - அந்தகக்கவிப் பேரவை.

43. தமிழ் வனம் பகுதி 2 - அந்தகக்கவிப் பேரவை.

 

KVTC அரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சில புத்தகங்கள் விற்பணைக்கு உள்ளன. எனவே, பொதுவாக விற்பனைக்காக உள்ள புத்தகங்களின் அரங்குகளை முதலில் குறிப்பிட்டுள்ளேன்.

புத்தகங்களை வாங்கி படித்து தங்களின் மேலான ஆதரவை வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி.

சேதுபாண்டி

 


வெள்ளி, 9 ஜனவரி, 2026

திருவாசகம் என்னும் தேனில் திருக்குறள் என்னும் கனிகள்!

கோவை இளஞ்சூரியன் என்கிற திருக்குறள் பொன்னுசாமி ஐயா அவர்களுடைய தேனூறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும் என்ற நூலினைப் படித்து, மலரில் தேனுண்ட வண்டுகள் மயங்கிக் கிடப்பது போல, மனமுருகி மயங்கி மகிழ்ந்து திளைத்தேன். திருவாசகம் என்னும் தேனில் திருக்குறள் என்னும் கனிகளைத் தோய்த்து நம்மைச் சுவைக்கச் செய்துள்ள பாங்கு போற்றுதற்குரியது.

தனது ஏழாவது வயதில் மஞ்சள் காமாலையால் கண் பார்வையை முழுமையாக இழந்த திருக்குறள் பொன்னுசாமி ஐயா அவர்கள், பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்துள்ளார். போதிய வழிகாட்டுதல் இன்மை, பொருளாதார வசதியின்மை போன்றவற்றால் இவரால் கல்லூரி கல்வியைத் தொடர இயலாமல் போனது. 


திருக்குறள் பொன்னுசாமி அவர்களின் புகைப்படம்


1981-ஆம் ஆண்டு ஓர் பஞ்சாலையில் பணிக்குச் சேர்ந்தவர் 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். ஏறக்குறைய கடந்த 45 ஆண்டுகளாக உடன் பணிபுரிந்த நண்பர்கள் சிலரின் உதவியுடனும், வானொலி உதவியுடனும், பிரெயில் புத்தகங்கள் மூலமாகவும் தானே முயன்று கற்று, உதடுகள் ஒட்டாத திருக்குறள் எத்தனை, திருவள்ளுவர் திருக்குறளில் எத்தனை இடங்களில் தேவர், கயவர், சான்றோர் போன்ற உயர்திணைகளையும்; யானை, புலி போன்ற விலங்குகளையும்; காகம், மயில் போன்ற பறவைகளையும் உவமையாகப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறித்து ஆழமான ஆய்வினை மேற்கொண்டு, கல்லூரி மாணவர்களிடையேயும், வானொலி போன்ற ஊடகங்களிலும் தொடர்ந்து ஆய்வுரை நிகழ்த்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் உரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படித் திருக்குறளில் ஆழங்கால்பட்ட இவர், திருவாசகத்தால் ஈர்க்கப்பட்டுத் திருவாசகத்தில் தனது ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கியதன் விளைவாக, மாணிக்கவாசகர் தன்னைத் தாழ்த்திப் பணிந்திடப் பல பாடல்களில் தன்னை 'நாயேன்' என்று குறிப்பிட்டுப் பாடியதைக் கண்டதும் அதையே ஓர் ஆய்வாக மேற்கொண்டுள்ளார். திருவாசகத்தில் எத்தனை இடங்களில் 'நாய்' என்ற சொல் வருகிறது என்று குறிப்பெடுத்து, அந்தப் பாடல்களைத் தொகுத்து வரிசைப்படுத்தி அதற்குப் பொருள் வழங்கி, 'நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகன்' என்ற பொருண்மையில் வடிவமைத்துள்ளார்.

·       நாயிற் கடையாய்க்  கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

·       தான் அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை

·       கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை

·       நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்

·       செய்வது அறியாச் சிறுநாயேன் செம்பொற் பாதமலர் காணாப்

இப்படி மாணிக்கவாசகர் தன்னை 'நாயேன்' என்று தாழ்த்திப் பணிந்து போற்றிப் பாடிய பாடல்களைத் தொகுத்துப் பொருளுடன் அறியத் தந்துள்ள ஆசிரியரின் முயற்சி போற்றுதற்குரியது. மேலும், திருக்குறளில் 'நாய்' என்ற சொல்லை வள்ளுவப் பேராசான் பயன்படுத்தியுள்ளாரா என்பதையும் ஆய்ந்து நமக்கு அறியத் தந்துள்ளார். திருவாசகத்தில் 'நாய்' என்ற சொல் இடம்பெறாத பதிகங்களில் உள்ள தெரிவு செய்த பாடல்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பொருளுரைத்துள்ள பாங்கு நம்மை வியக்கச் செய்கிறது.


நூலின் முகப்பு படம்

 

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை

மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்

நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த

அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

 இப்பதிகத்தில் மாணிக்கவாசகர் தீவினைகளிலிருந்து விடுபட்டு, மெய்யுணர்வினை இறையருளால் பெற்று பிறப்பு அறுபட உதவியதாகக்கூறுகிறார்.

 திருக்குறளில் திருவள்ளுவர்ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டாம் ”, என்கிறார்.

 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

 குறள் 357.

 

செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த

பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்

புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா

அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

 

மாணிக்கவாசகர் இங்கு “ பழுத்த மனத்தடியார் ” என்று மெய்யடியாரையும் தன்னை “ அழுக்கு மனத்தடியேன் ” என்றும் குறிப்பிட்டு,மனதில் அழுக்கான மாசு இருந்தால், தான் மெய்யடியாரோடு சேர இயலாத நிலையைத் தெரிவித்துள்ளார்.

 திருக்குறளில் திருவள்ளுவரும், " தன் மனதில் மாசு இல்லாமல் இருந்தால்தான், அறச்செயலைச் செய்திட இயலும் ”, என்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

குறள் 34.

இப்படித் தேனூறும் திருவாசகத்தையும் வான்புகழ் வள்ளுவத்தையும் ஒருசேரச் சமைத்து விருந்து படைத்திட்ட ஆசிரியரின் ஆய்வுப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்! என்று சொல்லி வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

இந்த புத்தகம் சென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 514, 515 (தமிழ் மண் பதிப்பகம்) மற்றும் பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் அரங்கு எண் 659-ல் கிடைக்கும்.

 

நூல் வெளியீட்டு விழா சிறப்புரை

நூலின் ஆசிரியர் திருக்குறள் பொன்னுசாமி அவர்களைத் தொடர்பு கொள்ள – 9655440080

நன்றி.

இவண்

சேதுபாண்டி 

செவ்வாய், 6 ஜனவரி, 2026

பெற்றோரின் அறிவுரையும் மீறப்பட வேண்டியதே!

கடந்த ஆண்டு புத்தகத்திருவிழாவில் தனது சிறுகதைத் தொகுப்பின் மூலம் எங்கே எனது ஒளி என்று சமூகத்திடம் தனது உரிமைக் குரலை எழுப்பிய பேராசிரியர் சரவணன் அவர்கள், தற்போது அந்தரத்தில் தொங்கும் நிலவு என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியலை வாசகரின் இதையத்தில் விதைக்க முற்பட்டு வென்றிருப்பதை கவிதைகளுக்குள் பயணிக்கும் ஒவ்வொருவராலும் உணரமுடியும். வெண்நிலவு முதல் கடலலை வரையிலும், தேங்காய் முதல் தெருநாய் வரையிலும் என அனைத்தையும் உவமையாக, ுதாரணமாக பயன்படுத்தி, அன்பு, ஆசை, இறக்கம், ஈதல், காதல், கருணை, பரிவு, பாசம், கோபம், துணிவு என பல்வேறு உணர்வு நிலைகளை நம் உள்ளத்துக்குள் கடத்தி, நம்மை கவிதைக்குள் கரைந்துப்போகச்செய்கிறார் கவிஞர். இவருடைய கவிதை வரிகளைப் மேலோட்டமாக படிக்கும் பொழுது ஒரு பொருள் கிடைக்கிறது, மீண்டும் படித்தால் மற்றொரு பொருள் புலனாகிறது, ஆழ்ந்து படித்தால் அத்தனையும் பொய்யாகி தேடலைத் தூண்டி வரிகளினூடே வாழ்வை ரசிக்க பணிக்கச் செய்கிறது.


நூலின் அட்டைப்படம்


என்னைப் புரிந்து கொண்டதற்கு நன்றி என்ற கவிதையில் ஈற்றெழுத்தின் வேறுபாடு காட்டி, அதிகாரத்தின் அடையாளத்தையும், அடிமையின் அடையாளத்தையும் உணர்த்தி, தப்பி பிழைப்பதன் பதைபதைப்பயும், மன்னிப்பின் மகத்துவத்தையும் அறிய செய்கிறார் ஆசிரியர்.

பொரியப் போட்டு மீனப் பிடிக்கிற இந்த காலத்தில் ஒருவேளைச் சோற கண்ணுல காட்டிக் கல்வியைக் கொடுத்த காமராசரை என்னன்னு சொல்வது.

கல்விக்கடவுள் சரஸ்வதி என்று சொல்லிப் பழகிய உங்களுக்கு கல்விக்கடவுள் காமராசர் என்று நான் சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்வது உங்களுக்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

என்ற கவிதையின் மூலம் ஐயா காமராசர் அவர்கள் தமிழகத்தில் ஏற்படுத்திய கல்விப் புரட்சியை புலப்படுத்தி, அவர் கடவுள் நிலைக்கு கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார் கவிஞர்.

உச்சிவெய்யில் வேளை வெளியே செல்லாதே என்று அம்மா சொல்கிறாள்.

உச்சியில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதே என்று அப்பா சொல்கிறார். இரண்டும் அபாயகரமானதுதான்.

தெரிந்தே துணிகிறேன் வாழவேண்டும் என்பதற்காக.

வாழ்வை வசப்படுத்த சில நேரங்களில் பெற்றோரின் அறிவுரையும் மீறப்பட வேண்டியதே என்பதை உணர்த்தும் வகையில் வரையப்பட்டுள்ள "எதிர்கொள்ளுதல்" என்ற இந்த கவிதை எழுத்தாளரின் துணிவிற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு.

வர்ணித்தல் என்ற கவிதையில்

"சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று ஒளிவீசும் ஒரு கண்ணாடிதான் நிலவு என்பதை அறிந்தபின், தெளிவாகப் புரிந்தது உன்னைச் சார்ந்துதான் நான் இருக்க வேண்டும் என்ற அடிமைத்தனத்தை நயமாக நீ எனக்கு கற்பித்துக் கொண்டு இருக்கிறாய் என்று".

என்ற இந்த கவிதயைப் படித்ததும் அதிர்ந்து வியந்து மகிழ்ந்தேன். இதன் மூலம் பெண்ணை நிலவாக வர்ணித்த சங்க கால புலவர்கள் முதல் இக்கால கவிஞர்கள் வரை அனைவரையும் தனது அறச்சொல்லால் அறைந்து பாலின சமத்துவத்தை பரைச்சாற்றியுள்ளார் பேராசிரியர். இப்படியாக கவிஞரின் ஒவ்வொரு கவிதையிலும் பல்வேறு புதுமைகள் புதைந்து கிடப்பதை படிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் உணர முடியும்.

17 ஆகஸ்டு 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் 45-வது ஆண்டுவிழா மலரில் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள "பாவம் செய்தான் முன்பு" என தொடங்கும்  கவிதையை வழங்கியிருந்தார் பேராசிரியர் சரவணன். அந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆண்டு மலரை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்திய சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், தனது சிறப்புரை தொடக்கத்தில் நான் இந்த புத்தகத்தைச் சற்று புரட்டி பார்த்துக்கொண்டிருந்தேன். இதில் சரவணன் என்பவர் எழுதியுள்ள கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. நான் அதை வாசிக்கிறேன் கேளுங்கள்

“பாவம் செய்தான் முன்பு மாற்றுத்திறனாளியாய்ப் பிறந்தான் பின்பு.

பாவம் செய்தால் இதுதான் நிலைமை என்று பகர்ந்தாய் பலர்முன் நின்று. உனது வயிறை வளர்க்க எங்களது பிறப்பை இழிவு செய்தாய்.

நீ சொன்ன பொய்களால் மனமுடைந்து மாண்டான் என் நண்பன் ஒருத்தன். அவனது பாவப்பட்டச் சடலத்திற்கு எரியூட்ட யாருமில்லை.

கொஞ்சம் உன்னுடைய சொற்களைக் கொடு என் நண்பனின் சடலத்தை எரித்து விடுகிறேன்”.

இப்படிப்பட்ட சொற்கள் எந்த அளவிற்கு கொடூரமானது. அவருக்குள் எந்த அளவிற்கு வேதனை இருந்திருந்தால் இந்த வலி மிகுந்த வலிமையான வரிகள் பிறந்திருக்கும் என்று கூறி தனது கருத்துக்களைப் பகிர்ந்து பாராட்டினார்.

இப்படி தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி, எழுத்தாளராக, பேச்சாளராக, கவிஞராக, சிறந்த ஆய்வாளராக வளர்ந்து வரும் பேராசிரியர் சரவணன் அவர்கள் மெம்மேலும் பல சாதனைகளைப் புரிந்து, பல உயர்வுகளை அடைந்து வாழ்வில் வெற்றிவாகைச்சூட மனமார வாழ்த்துகிறேன்.

இந்த புத்தகத்தை நண்பர்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புத்தகத்தை வாங்க மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்வதற்கான

கவிஞர் சரவணன் அவர்களின் தொடர்பு எண்

8680855285

நன்றி.

இவண்

சேதுபாண்டி 

வெள்ளி, 31 ஜனவரி, 2025

இந்தியர் அனைவரும் உடன் பிறந்தவர்கள் அந்த ஒருவரைத் தவிர!

இந்த புத்தக திருவிழாவில் எழுத்தாளர் நிர்மல் அவர்களின் மக்களாகிய நாம் என்ற புத்தகம் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக பார்வையற்றோர் உள்ளிட்ட ஊனமுற்றோர் படித்து மகிழ்ந்து கொண்டாடி தீர்த்த "சகாக்கள்: நிகரானவர்கள் ஆனால் வேறானவர்கள்" என்ற புத்தகத்தின் ஆசிரியர் நிர்மல் அவர்கள் தான் இந்த புத்தகத்தையும் எழுதியுள்ளார். 

மக்களாகிய நாம் என்ற பெயரைக் கேட்டதும் இந்த நூல் மக்களின் உரிமை, ஒழுக்கம் அல்லது சட்டம் என்று ஏதோ ஒன்றைக் குறித்ததாக இருக்கும் என்று யூகித்திருப்போம். நிச்சயமாக நம்முடைய யூகத்தின்படி இது ஒரு மக்களுக்கான புத்தகம் தான். ஆனால், வாழ்வியல் விதிமுறைகளையோ, ஒழுக்க நெறிமுறைகளையோ, சட்ட நுனுக்கங்களையோ இந்த புத்தகம் பேசவில்லை. இது அனைத்தையும்விட உயர்வான ஒரு பதத்தை நமக்குள் விதைக்க புத்தகத்திற்குள் நம்மை அழைத்து செல்லும் நூலின் ஆசிரியர், ஏறக்குறைய எப்போதும் நம்மால் சிந்திக்கப்படாத  இந்திய அரசியலமைப்பு சாசன முகவுரையை நமக்குள் விதைக்க முயற்சித்துள்ளார். ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சட்டங்கள், அவை உருவான விதம், கடவுள் தந்த சட்டம், பாம்பு தந்த சட்டம் என பல சுவாரசியமான செய்திகளைக் கூறி நம்மை வியற்பிக்குள்ளாக்குகிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக, பிறக்கும்போது நடக்கவும் பேசவும் இயலாத ஒருவன், தனது விடாமுயற்சியால் எப்படி ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி, சட்டத்திட்டங்களை வடிவமைத்தான் என்ற செய்தியை அறியும்போது உள்ளுக்குள் ஒரு உத்வேகம் பிறப்பதை உணர முடிகிறது. இப்படியாக உலகெங்கும் சட்டங்கள் பிறந்த வரலாற்றையும், அதற்கான முகவுரைகளின் சாராம்சத்தையும் படிக்க படிக்க நம்மால் புத்தகத்தைவிட்டு நீங்க இயலாது. முழுமையாக தனியார் மயமாக்கப்பட்ட நாடு எது, முழுமையாக அரசுடைமையாக்கப்பட்ட நாடு எது, முழுமையான பொதுவுடைமை நாடு எது, உலக நாடுகளின் அரசியல் சாசன முகவுரைக்கும், இந்திய நாட்டின் அரசியல் சாசன முகவுரைக்கும் எத்தகைய ஒற்றுமை வேற்றுமை உள்ளன, இந்திய அரசியலமைப்பின் உருவாக்கத்தின் போது இந்தியாவை அதுவரை ஆண்டுக்கொண்டிருந்த பிரிட்டீஷாரின் மனநிலை எப்படி இருந்தது, பல்வேறு சாதிகளும் மதங்களும் நிறைந்திருந்த நாட்டில் எப்படி ஒரு வலுவான கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது, என்ற பல்வேறு அறிய தகவல்களை அடுக்கடுக்காக எடுத்துரைக்கும் நூலின் ஆசிரியரது உழைப்பு போற்றுதற்குரியது.

சமத்துவம், சகோதரத்துவம் போன்ற சொற்களின் ஆழத்தை ஆசிரியர் ஆய்ந்து அறிய முற்பட்ட போது எனக்கு என்னுடைய பள்ளி காலம் நினைவிற்கு வந்தது.

பள்ளிக்கூடத்தில் கொடி ஏற்றிய உடன் 

இந்தியா என் தாய் நாடு

இந்தியர் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள் 

என்ற உறுதி மொழி ஒவ்வொரு நாளும் மாணவ தலைவன் சொல்ல மற்ற மாணவர்கள் சொல்லுவது வழக்கம். அப்படி ஒருநாள் கூடுகை முடிந்த உடன், மாணவ தலைவனை சில மாணவர்கள் சூழ்ந்துக்கொண்டு, இந்தியர் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள் என்று சொல்ட்ரியே நீ என்ன பாக்கிஸ்தான் பொண்ண கல்யாணம் பண்ணிக்குவியா? நீ அந்த வரியை சொல்லும்போதெல்லாம் நான் அந்த ஒருத்தியைத் தவிர என்று என் மனசுக்குள்ளேயே சொல்லிக்குவேன் தெரியுமா என்று கேட்டு அவனை ஓட்டியதை மறக்க இயலாது.

சகோதரத்துவத்தை வலுவாக உணர்த்த ஆசிரியரின் தேடலுக்கு அவருடைய தமிழாசிரியர் மூலம் விடைகிடைத்ததை அறியும் போது மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும் ஏற்பட்டது. நமது வள்ளுவரும், அவ்வையும் நமக்கு கற்பித்த அந்த ஒரு ஒப்பற்ற பதத்தை நாம் அறிந்துக்கொண்டால் இந்திய அரசியலமைப்பு சாசன முகவுரையின் முத்தாய்ப்பான கருத்தை உணர்ந்திடலாம்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள், அதனை தொகுத்த விதம், எடுத்துரைத்திருக்கும் திறன் ஆகியவற்றைப் பார்க்கும்பொழுது ஆசிரியரின் அயராத உழைப்பு, தொடர்ச்சியான வாசிப்பு, தீவிர தேடல், ஆழ்ந்த ஆய்வு என அனைத்தும் புலப்படுகிறது. பல்வேறு அறிய தகவல்களை உள்ளடக்கிய இந்த புத்தகத்தை அனைவரும் தவராமல் வாங்கி வாசித்தால் ஓர் புதிய அனுபவம் கிடைப்பது நிச்சயம்.

நூலினை வாங்க

https://tinyurl.com/Makkalagiya-Naam


நன்றி

சேது பாண்டி 

வியாழன், 16 ஜனவரி, 2025

சூரியனை போலீஸ் மாமா எப்பம்மா கண்டுபிடிப்பாரு?

சூரியனை போலீஸ் மாமா எப்பம்மா கண்டுபிடிப்பாரு?

இந்த புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் சரவணன் அவர்களுடைய எங்கே எனது ஒளி என்ற சிறுகதை தொகுப்பினை வானவில் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இவருடைய சிறுகதை ஒன்றை பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் ஆண்டு மலரில் படித்து வியந்து மகிழ்ந்திருக்கிறேன். எனவே, இவருடைய சிறுகதை புத்தகத்தை உடனே படித்துவிட வேண்டும் என்ற ஆவலில் வாங்கி படிக்க தொடங்கினேன். ஒரு பார்வையற்றவன் தடையின்றி பயணிக்க ஒரு வழிகாட்டிக் கோல் எப்படி உதவுமோ அப்படி இவருடைய எழுத்து நடை என்னை உத்வேகத்துடன் இந்த புத்தகத்தில் பயணிக்க செய்தது.

இந்த சமுதாயத்தால் பலவகையில் புறக்கணிக்கப்படும் ஒரு பார்வையற்றவனை அந்த நாளில் அவனுக்கு நடந்த ஒரு நிகழ்வு அதிகப்படியாக பாதித்திருந்தது.. இந்த நிலையில் கோயிலுக்கு செல்ல நினைத்த அவன் பல தடைகளைக் கடந்து கோயிலுக்குள் செல்கிறான். அங்கிருந்த ஒருவர் அறிவுறுத்தியபடி, ஒரு கையில் கயிறையும், மறு கையில் வழிகாட்டிக் கோலையும் பிடித்தவனாய் தீபாராதனையை ஏற்றுக்கொண்டிருந்த காமாட்சியை வணங்கினான். அதன் பிறகு என்ன நடந்தது, அவன் கோயிலுக்கு வருவதற்கு முன்பு அந்த நாளில் அவனுக்கு என்ன நடந்தது என்பதை நான் சொல்வதைக் காட்டிலும் கதையைப் படிக்கும்போது உங்களால் உணர்வுப்பூர்வமாக உணர முடியும்.  காமாட்சி அம்மன் கோயிலில் கறுகிய நிலையில் பிணமாக கிடந்த உடலை அப்புறப்படுத்த உதவிக் கேட்ட பணியாலரைக் கண்டுக் கொள்ளாமல் அனைவரும் அருகில் செல்ல அஞ்சி அறுவருப்புடன் நின்றுகொண்டிருந்த நேரத்தில், தனது வழிகாட்டிக் கோலை மடித்து வைத்துக் கொண்டு அந்த உடலை அந்த பணியாலருடன் தன் கைகளால் தூக்கிக் கொண்டு போனதன் மூலம் முதல் கதையிலேயே தனது சவுக்கைச் சுழற்றியிருக்கிறார் ஆசிரியர்.

மார்ச் மாதம் பேய்களின் மாதம் நீங்க எல்லோரும் ஜெபம் செய்தால் பேயிடம் இருந்து கர்த்தர் நம்மை காப்பாற்றுவார் என்று மூட நம்பிக்கையை விதைக்கும் ஆசிரியர், அதனைக் கேட்டு பேயின் அச்சத்தில் இருக்கும் தங்கராசுவிற்கு, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துரைக்கும் கருணாநிதி, கருணாநிதியின் பேச்சை ஏற்காத தங்கராசுவிடம் பேய் ஆடிய ஆட்டம் என அடுத்த கதை படித்த போது நானும் கொஞ்சம் ஆடித்தான் போனேன்.

ஸ்டிக்கை பயன்படுத்த வெட்கப்படும் பார்வையற்ற பேராசிரியர் அரசு பேருந்தில் ஒரு பெண்ணிடம் வாங்கிய அறையின் மூலம் பார்வையற்றவருக்கு ஸ்டிக் எந்த அளவிற்கு அவசியம் என்பதையும், ஸ்டிக்கை தன் கண்களாக போற்றும் ஒரு பார்வையற்றவர் அதனைப் பயன்படுத்தும் போது ஒரு அரசன் குதிரையின் மீது அமர்ந்தபடி அதன் கடிவாளத்தைப் பிடித்தபடி பயணம் செய்யும்போது அந்த அரசனுக்கு எப்படியான உணர்வு ஏற்படுமோ அந்த ஒரு உணர்வும் பெருமிதமும் ஏற்படுவதாக கூறுவதன் மூலம் பார்வையற்றோரின் தற்சார்பும் சுயமறியாதையும் காக்கப்பட வெண்கோல் எந்த அளவிற்கு அவசியம் என்று உணர்த்தியிருப்பதை படித்து மகிழ்ந்தேன்.

பிள்ளை இல்லாத தம்பதியர் பிள்ளையைத் தத்து எடுக்க முடிவு செய்து காப்பகம் சென்ற போது அவர்களுடைய பொருளாதார நிலையால் அவர்களுக்கு பார்வையற்ற குழந்தையை பரிந்துரை செய்தது, தங்கள் நிலையை உணர்ந்து அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதன் விளைவாக அவர்கள் எதிர்கொண்ட வேதனைகள் எத்தகையது என்பதையும், தத்தெடுப்பதற்கு முன்பு அவர்களுடைய வேதனை எத்தகையது என்பதையும்  மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர். மற்றொரு கதையில் பார்வையில்லாமல் பிறந்த குழந்தையை கொல்லத்துடிக்கும் தன் தாயிடம் இருந்தும் மஞ்சள் காமாலை நோயிடமிருந்தும் தன் பிள்ளையைக் காக்கத் துடிக்கும் வருமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் தாயின் போராட்டத்தை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார்.

கண் தானம் செய்வதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ள கதையில், விளையாடிய குழந்தையின் முகத்தில் பட்ட சிமெண்ட் பிள்ளையின் கண்களை காயப்படுத்தி பார்வையை இழக்கும் அளவிற்கு பாதிக்கிறது. இதனை அறியாத அந்த குழந்தை எனக்கு ஏம்மா எல்லாம் இருட்டா தெரியிது என்று கேட்க, தங்களுக்குள் அழுதுக்கொண்டிருந்த பெற்றோர் தன் பிள்ளையிடம் எதைச் சொல்லி சமாலிப்பது என்று எண்ணியபடி, சூரியனை யாரோ திருடிக்கிட்டு போயிட்டாங்கம்மா போலீஸ் மாமா சீக்கிறமா சூரியனைக் கண்டுப்பிடிச்சி கொண்டு வந்துடுவாரு என்று சொல்லியதிலிருந்து அந்த குழந்தை தினம்தினம் போலீஸ் மாமா எப்பம்மா சூரியனைக் கண்டுப்பிடிப்பாரு என்று கேட்பதைக் கேட்ட அந்த பெற்றோரின் கண்ணீரோடு நமது கண்ணீரும் கலப்பதைத் தடுக்க இயலாது.

இன்றளவும் கழிவறை இல்லாத கிராமங்கள் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. இந்தச் சூழலில் காலைக் கடன்களை முடிக்க பொதுவாக பெண்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை பல கதைகள் மூலமும், அனுபவ பகிர்வுகளின்ன் மூலம்ும் அறிந்திருப்போம். ஆனால், ஒரு பார்வையற்ற பெண்ணின் நிலை குறித்து யாரும் சிந்தித்திருக்க மாட்டோம். ஏன் இந்த கதையில் அந்த பெண்ணின் தாய்கூட உணர்ந்திருக்கவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த பெண்ணிற்கு விடுமுறையில் விடுதியில் இருந்து வீட்டிற்கு போக மனமில்லை என்று தொடங்கும் கதையின் மூலம் கழிவறையின் அவசியத்தை கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று கூறுவதைவிட கழிவறை இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று கூறி படிப்பவர் உள்ளத்தில் உறையச்செெய்திருக்கிறார்.

கோடம்பாக்கம் மேம்பாலத்திற்கு அருகில் என்ற கதையில் பார்வையற்றோரின் பலகால போராட்ட உணர்வைக் குறித்தும், போராடுவதன் அவசியம் குறித்தும், அரசின் போக்கு, காவல்துறையின் ஒடுக்குமுறை, ஊடகங்களின் உலகம் என அனைத்தையும் அடுக்கடுக்காக எடுத்துரைத்துள்ளார். பார்வையற்றோரின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் போலீசிடம் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவனின் தாய், சார் அவன இந்த ராத்திரி நேரத்துல தொந்தரவு செய்யாதிங்க சார், அவனோட அப்பா போன வாரம்தான் செத்துபோனாரு. அவருக்கு கொள்ளிய போட்டுட்டு உடனே அவசர வேலையிருக்குனு சொல்லி கிளம்பி வந்துட்டான் சார் என்று சொல்லி அழுத போது அந்த போலீசுடன் சேர்த்து படிக்கும் நம் கண்களிலும் நீர் ததும்பியது.

திரு. விரல்மொழியர் என்பவருக்கு சிறந்த படைப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. அந்த விழாவில் பார்வையற்றோர் புத்தகங்களைப் படிப்பதற்காக எத்தகைய போராட்டங்களைச் சந்திக்கிறோம் என்பதை மிகச் சிறப்பாக குறிப்பிடுகிறார். படித்து காட்டச் சொல்லி கேட்கும் பார்வையற்ற பெண்ணிடம், உங்களுக்கு வேண்டியதை நான் செய்கிறேன் எனக்கு வேண்டியதை நீங்கள் எனக்கு செய்ய வேண்டும் என்று கூறியவரிடம் என்ன சார் செய்யனும் என்று அந்த பெண் கேட்டதற்கு அந்த மனிதர் நீங்க என்னோட உடலுறவில் என்று கேட்டுள்ளார் என்ற தொடரைப் படித்த நமக்கு இந்த காட்சி சமுதாயத்தின் மீது வரும் கோபத்திற்கு அளவே இல்லை. இந்த அனுபவத்தை பகிர்ந்த அந்த வெண்பாவும் திரு. விரல்மொழியரும் திருமணம் செய்துக்கொண்டதை வாசிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த பார்வையற்ற இணையர் திருக்குறள் போல் பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ வாழ்த்தி இந்த நூலினை அனைவரும் அவசியம் வாங்கி படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சூரியனை போலீஸ் மாமா கண்டுபிடித்தாலும் சரி, அல்லது தன் மறைவை அகற்றிக்கொண்டு சூரியனாக உதித்து வந்தாலும் சரி, எப்படியானாலும் இருளில் இருந்து சூரியன் வெளிப்படும் நாளில் பார்வையற்றோரின் விடியல் தொடங்கும்.

இந்த புத்தகத்தை படிக்க விருப்பமுள்ளவர்கள் பதிப்பகத்தையோ அல்லது நூலின் ஆசிரியரையோ தொடர்புக்கொண்டு ரூபாய் 230 செலுத்தி புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

எழுத்தாளர் சரவணன் அவர்களைத் தொடர்புக்கொள்ள

8680855285

நன்றி.

சேதுபாண்டி 

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கை

தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கை


பேராசிரியர் முனைவர் மு. முருகேசன் அவர்களது கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள் என்ற நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

பார்வையற்றோர் பிறந்தது முதல் இந்த பார்வையுள்ள பொதுச் சமுதாயத்தில் எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது, எத்தனை எத்தனை வலிகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது போன்ற செய்திகளை அனுபவ     ஆதாரங்களுடன் பட்டியலிட்டு எடுத்துரைத்துள்ளார் நூலின் ஆசிரியர்.

இந்த நூலினை படிக்கும் பொழுது ஒரு புத்தகத்தை படிக்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் தோன்றவில்லை. மாறாக பார்வையற்ற நண்பர்கள் கூடி அனுபவங்களை பகிர்ந்துக்கொண்ட உணர்வே மேலோங்கியது. 


    
    

பொதுவாக இந்த சமூகம் பார்வையற்றோரைப் பார்த்து உங்களுக்கென்ன பார்வை இல்லை என்பதால் எல்லாம் எளிதாக கிடைத்துவிடுகிறது என்று கூறுவது வழக்கம். ஆனால், பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு என கல்வி கற்பதற்காக, கல்வி கற்கும் பாட புத்தகங்களை தங்களுக்கேற்ற வடிவில் உருவாக்குவதற்காக, தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, கல்வி தேர்ச்சி பெற்றபின் போட்டித் தேர்வுகளுக்காக, போட்டித் தேர்வுகளுக்கான தரவுகளைப் பெறுவதற்காக, பெற்ற தரவுகளை அனுகல் தன்மையுள்ளதாக மாற்றுவதற்காக, தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக, தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, சரியான பதிலி எழுத்தர் அமர்த்தப்படுவதற்காக, தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர்வதற்காக, சேர்ந்தபின் தங்கள் இருத்தலை உணர்த்துவதற்காக, பணிகளை மேற்கொள்வதற்காக, மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் தங்களை நிருபிப்பதற்காக, பணி நிறைவு பெறுவதற்காக, பயணம், காதல், திருமணம், உறவுமுறை, பிள்ளை வளர்ப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்றல், சமூக ஈடுபாடு  என பல நிலைகளில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு, அடக்கப்படுதல், அலட்சியப்படுத்துதல், ஆதிக்கம் செலுத்துதல், இடர்விளைவித்தல், இட்டுக் கூறுதல், உதாசினப்படுத்துதல், உரிமை மறுத்தல், ஊழ்ப்பழி சுமத்துதல், ஊறு விளைவித்தல், எட்டிவைத்தல், ஏளனம் செய்தல், ஒடுக்கப்படுதல், ஒதுக்கப்படுதல், ஒருமையில் விளித்தல், கலகம் கற்பித்தல், புறக்கணித்தல் போன்ற பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை எதிர்கொண்டு அளவில்லா வலிகளையும் வேதனைகளையும் பார்வையற்ற ஒவ்வொருவரும் அனுபவித்து வருவதை இன்நூல் பலருடைய வாழ்வின் வழியே விளக்குகிறது. அதே நேரத்தில் பார்வையற்றோருக்கு இந்த காட்சி சமூகம் எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்துள்ளது என்பதையும் ஆங்காங்கே சுட்டியுள்ள குறிப்புகள் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. 

ஆசிரியர் தங்களது பார்வையற்ற சமூகம் வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை அடைந்துள்ளது என்பதை இந்த பொதுச் சமூகத்தில் தனது நூலினை குற்றப் பத்திரிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.

ஆசிரியர் குற்றம் என்று சுட்டும் ஒவ்வொன்றும் சட்டப்படியும் குற்றமாக கருதப்படுவதை ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2016 அத்தியாயம் 16 பிரிவு 92 உறுதிப்படுத்துகிறது.

92.1. பொதுவெளியில் ஊனமுற்ற நபர்களை எந்த இடத்திலும் வேண்டும் என்றே அவமதித்தல் அல்லது வேண்டும் என்றே அவமானப்படுத்தும் நோக்கத்துடன் மிரட்டுதல்.

92.2. ஊனமுற்ற நபரை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது பலவந்தப் படுத்துதல் அல்லது ஊனமுற்ற பெண்களை மானபங்கப்படுத்துதல்.

92.3. ஊனமுற்ற நபர்களை தங்களின் கீழ் வசப்படுத்தி அல்லது கட்டுப்படுத்தி வேண்டுமென்றே அல்லது தெரிந்தே உணவு அல்லது திரவபொருள் கொடுக்க மறுத்தல்.

92.4. ஊனமுற்ற குழந்தை அல்லது பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை மற்றும் அந்நிலையை பயன்படுத்தி பாலியல் ரீதியாக சுரண்டுதல்.

92.5. ஊனமுற்ற நபரை வேண்டுமென்றே காயப்படுத்துதல் அல்லது கால் அல்லது உணர்வு அல்லது ஆதரவு கருவிகளைச் சேதப்படுத்துதல் அல்லது பயன்பாட்டில் தலையிடுதல்.

போன்ற செயல்பாடுகளுக்கு ஆறு மாதத்திற்கு குறையாத ஆனால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சட்டத்தின்படி புகார் வழங்கினாலும் இந்த காட்சி சமூகத்தில் நீதி கிடைப்பதற்குள் அவை பல வகையில் திரிக்கப்பட்டு நீர்த்து போய்விடுகிறது. 

எனவே இந்த புத்தகத்தை அதாவது இந்த குற்றப் பத்திரிக்கையை படிக்கும் ஒவ்வொரு பார்வையுள்ளவரும் பார்வையற்றவரும் தங்கள் மனதளவில் உணர்ந்தால் மட்டுமே சம உரிமை, சம வாய்ப்பு, முழு பங்கேற்பு சாத்தியமாகும்.

பேராசிரியர் முனைவர் முருகேசன் அவர்களைத் தொடர்புக்கொள்ள

9962445442

நன்றி.

சேதுபாண்டி

 

ஞாயிறு, 17 அக்டோபர், 2021

வங்கிப் பணிக்காக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு!

வேலைவாய்ப்பு அறிவிப்பு


வங்கிப் பணிக்காக காத்திருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு.

IBPS (Institute of Banking Personnel Selection) தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் க்லார்க் பணிக்கான தேர்வினை அறிவித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டில் உள்ள  பார்வையற்ற பட்டதாரிகளுக்கு 9 பணியிடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு முதல் வங்கி க்லார்க் பணிக்கான தேர்வினை தமிழிலேயே எழுதலாம்.

பார்வையற்றோருக்கான வயது வரம்பு தளர்வு விவரம்:

பொதுப்பிரிவு 10 ஆண்டுகள்.

OBC பிரிவு 13 ஆண்டுகள்.

SC/ST பிரிவு 15 ஆண்டுகள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.10.2021

https://ibpsonline.ibps.in/crpcl11jun21/

பார்வையற்ற பட்டதாரி பணி நாடுனர்களுக்கு வாழ்த்துக்கள்