கடந்த ஆண்டு புத்தகத்திருவிழாவில் தனது சிறுகதைத்
தொகுப்பின் மூலம் எங்கே எனது ஒளி என்று சமூகத்திடம் தனது உரிமைக் குரலை எழுப்பிய
பேராசிரியர் சரவணன் அவர்கள், தற்போது அந்தரத்தில்
தொங்கும் நிலவு என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வியலை
வாசகரின் இதையத்தில் விதைக்க முற்பட்டு வென்றிருப்பதை கவிதைகளுக்குள் பயணிக்கும்
ஒவ்வொருவராலும் உணரமுடியும். வெண்நிலவு முதல் கடலலை வரையிலும், தேங்காய் முதல் தெருநாய் வரையிலும் என அனைத்தையும் உவமையாக, ுதாரணமாக பயன்படுத்தி,
அன்பு, ஆசை, இறக்கம், ஈதல், காதல், கருணை, பரிவு, பாசம், கோபம், துணிவு என பல்வேறு உணர்வு நிலைகளை நம் உள்ளத்துக்குள்
கடத்தி, நம்மை கவிதைக்குள்
கரைந்துப்போகச்செய்கிறார் கவிஞர். இவருடைய கவிதை வரிகளைப் மேலோட்டமாக படிக்கும்
பொழுது ஒரு பொருள் கிடைக்கிறது, மீண்டும் படித்தால்
மற்றொரு பொருள் புலனாகிறது, ஆழ்ந்து படித்தால்
அத்தனையும் பொய்யாகி தேடலைத் தூண்டி வரிகளினூடே வாழ்வை ரசிக்க பணிக்கச் செய்கிறது.
நூலின் அட்டைப்படம்
என்னைப் புரிந்து கொண்டதற்கு நன்றி என்ற கவிதையில்
ஈற்றெழுத்தின் வேறுபாடு காட்டி, அதிகாரத்தின்
அடையாளத்தையும், அடிமையின் அடையாளத்தையும்
உணர்த்தி, தப்பி பிழைப்பதன்
பதைபதைப்பயும், மன்னிப்பின்
மகத்துவத்தையும் அறிய செய்கிறார் ஆசிரியர்.
பொரியப் போட்டு மீனப் பிடிக்கிற இந்த காலத்தில் ஒருவேளைச்
சோற கண்ணுல காட்டிக் கல்வியைக் கொடுத்த காமராசரை என்னன்னு சொல்வது.
கல்விக்கடவுள் சரஸ்வதி என்று சொல்லிப் பழகிய உங்களுக்கு
கல்விக்கடவுள் காமராசர் என்று நான் சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்வது உங்களுக்குக்
கொஞ்சம் சிரமமாக இருக்கும்.
என்ற கவிதையின் மூலம் ஐயா காமராசர் அவர்கள் தமிழகத்தில்
ஏற்படுத்திய கல்விப் புரட்சியை புலப்படுத்தி, அவர் கடவுள் நிலைக்கு கொண்டாடப்பட வேண்டியதன் அவசியத்தை
உணர்த்தியுள்ளார் கவிஞர்.
உச்சிவெய்யில் வேளை வெளியே செல்லாதே என்று அம்மா
சொல்கிறாள்.
உச்சியில் இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதே என்று அப்பா
சொல்கிறார். இரண்டும் அபாயகரமானதுதான்.
தெரிந்தே துணிகிறேன் வாழவேண்டும் என்பதற்காக.
வாழ்வை வசப்படுத்த சில நேரங்களில் பெற்றோரின் அறிவுரையும்
மீறப்பட வேண்டியதே என்பதை உணர்த்தும் வகையில் வரையப்பட்டுள்ள
"எதிர்கொள்ளுதல்" என்ற இந்த கவிதை எழுத்தாளரின் துணிவிற்கு ஆகச்சிறந்த
எடுத்துக்காட்டு.
வர்ணித்தல் என்ற கவிதையில்
"சூரியனிடமிருந்து ஒளியைப்
பெற்று ஒளிவீசும் ஒரு கண்ணாடிதான் நிலவு என்பதை அறிந்தபின், தெளிவாகப் புரிந்தது உன்னைச் சார்ந்துதான் நான் இருக்க
வேண்டும் என்ற அடிமைத்தனத்தை நயமாக நீ எனக்கு கற்பித்துக் கொண்டு இருக்கிறாய்
என்று".
என்ற இந்த கவிதயைப் படித்ததும் அதிர்ந்து வியந்து
மகிழ்ந்தேன். இதன் மூலம் பெண்ணை நிலவாக வர்ணித்த சங்க கால புலவர்கள் முதல் இக்கால
கவிஞர்கள் வரை அனைவரையும் தனது அறச்சொல்லால் அறைந்து பாலின சமத்துவத்தை
பரைச்சாற்றியுள்ளார் பேராசிரியர். இப்படியாக கவிஞரின் ஒவ்வொரு கவிதையிலும் பல்வேறு
புதுமைகள் புதைந்து கிடப்பதை படிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் உணர முடியும்.
17 ஆகஸ்டு 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற பார்வையற்ற கல்லூரி
மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் 45-வது ஆண்டுவிழா மலரில்
இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள "பாவம் செய்தான் முன்பு" என
தொடங்கும் கவிதையை வழங்கியிருந்தார்
பேராசிரியர் சரவணன். அந்த ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆண்டு
மலரை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்திய சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு
நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், தனது சிறப்புரை தொடக்கத்தில் நான் இந்த புத்தகத்தைச் சற்று புரட்டி
பார்த்துக்கொண்டிருந்தேன். இதில் சரவணன் என்பவர் எழுதியுள்ள கவிதை என்னை மிகவும்
கவர்ந்தது. நான் அதை வாசிக்கிறேன் கேளுங்கள்
“பாவம் செய்தான் முன்பு மாற்றுத்திறனாளியாய்ப் பிறந்தான்
பின்பு.
பாவம் செய்தால் இதுதான் நிலைமை என்று பகர்ந்தாய் பலர்முன்
நின்று. உனது வயிறை வளர்க்க எங்களது பிறப்பை இழிவு செய்தாய்.
நீ சொன்ன பொய்களால் மனமுடைந்து மாண்டான் என் நண்பன்
ஒருத்தன். அவனது பாவப்பட்டச் சடலத்திற்கு எரியூட்ட யாருமில்லை.
கொஞ்சம் உன்னுடைய சொற்களைக் கொடு என் நண்பனின் சடலத்தை
எரித்து விடுகிறேன்”.
இப்படிப்பட்ட சொற்கள் எந்த அளவிற்கு கொடூரமானது. அவருக்குள்
எந்த அளவிற்கு வேதனை இருந்திருந்தால் இந்த வலி மிகுந்த வலிமையான வரிகள்
பிறந்திருக்கும் என்று கூறி தனது கருத்துக்களைப் பகிர்ந்து பாராட்டினார்.
இப்படி தரமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி, எழுத்தாளராக, பேச்சாளராக, கவிஞராக, சிறந்த ஆய்வாளராக
வளர்ந்து வரும் பேராசிரியர் சரவணன் அவர்கள் மெம்மேலும் பல சாதனைகளைப் புரிந்து, பல உயர்வுகளை அடைந்து வாழ்வில் வெற்றிவாகைச்சூட மனமார
வாழ்த்துகிறேன்.
இந்த புத்தகத்தை நண்பர்கள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புத்தகத்தை
வாங்க மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்வதற்கான
கவிஞர் சரவணன் அவர்களின் தொடர்பு எண்
8680855285
நன்றி.
இவண்
சேதுபாண்டி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக