திங்கள், 21 மார்ச், 2016

தம் வாசிப்பாளருக்கு பாராட்டு விழா நடத்திய பார்வையற்ற பேராசிரியர்!


தம் வாசிப்பாளருக்கு பாராட்டு விழா நடத்திய பார்வையற்ற பேராசிரியர்!

வைணவ கல்லூரியின் கணித பேராசிரியர், பை கணித மன்றத்தின் நிறுவனர் ரா.சிவராமன் என்கிற ராம்ஜி அவர்கள் எழுதிய கட்டுரைகள்,  அவர் விருது பெற்றது தொடர்பாக தமிழ் இந்து தினமணி போன்ற நாளிதழ்களில் வெளியான கட்டுரைகள் என பல்வேறு செய்திகள் நம் குழுமத்தில் பகிரப்பட்டு, அனைவரும் படித்திருக்கிறோம். அத்தகு சிறப்பு மிகுந்த பேராசிரியருக்கு தற்போது சமூகத்தில் உள்ள கடைநிலை மக்களுக்கும் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இந்திய அரசு தேசிய விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

பல விருதுகளுக்கு சொந்தக்காரரான  இவருக்கு தற்போது தேசிய விருது கிடைத்திருப்பது இவரால் பயனடைந்து வாழ்வில் உயர்ந்துள்ள பல பார்வையற்றவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக பார்வையற்றவர்களுக்கு விழியாக இருந்து வழிக்காட்டி வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது. இவர் குடும்பமே பார்வையற்றோருக்காக பாடங்களைப் படித்துக்காட்டி சேவைப்புரிந்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது. இப்படி சேவைப்புரிந்து வரும் இவரால் வழிக்காட்டப்பட்டு இன்று பேராசிரியராக உயர்ந்துள்ள மாநிலக்கல்லூரி பேராசிரியர் கெ. குமார் ஐயா அவர்கள் இவருக்காக இன்று எக்மோரில் உள்ள ஜீவன் ஜோதியில் பாராட்டு விழா நடத்தி ஐயாவை சிறப்பித்தார்கள்.

இவ்விழாவில் மாநிலக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் அர. ஜெயச்சந்திரன்  அவர்கள், பேராசிரியர். உத்திராபதி அவர்கள், பேராசிரியர். வேலு அவர்கள், பேராசிரியர். பழனி அவர்கள், பேராசிரியர். பசுபதி அவர்கள், திருவாரூர் அரசுக்கல்லூரி பேராசிரியர். செந்தில் அவர்கள், காரைக்குடி அரசுக்கல்லூரி பேராசிரியர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள், பொன்னேரி அரசுக்கல்லூரி பேராசிரியர். திவாகர் அவர்கள், பேராசிரியர் நாகராஜன் அவர்கள், மேலும் பல ஆசிரியர்கள் ஆய்வாளர்கள்  என பலர் பங்கேற்று ஐயா அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்.

இறுதியில் ஏற்புரை வழங்கிய பேராசிரியர் சிவராமன் அவர்கள் நான் விருதுப் பெற்றதற்கு எங்கும் கிடைக்காத அளவிற்கு மகிழ்ச்சியும் அங்கீகாரமும் இங்கு கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் பார்வையற்றோர் எளிதில் கணிதத்தைப் புரிந்துக்கொள்ளும் வகையில் சிறந்த முறையில் ஒரு நூல் எழுதத் திட்டமிட்டுள்ளதாகவும் அது என் சமுதாயக் கடமை என்றும் ஆர்வமுடன் குறிப்பிட்டார்.  ஆய்வாளர். டேவிட்  அவர்கள் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. இவ்விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பளித்த  விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் குமார் ஐயா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர் விருது பெற்றது தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான செய்தி பின்வருமாறு....

அறிவியல் விழிப்புணர்வு :3 பேருக்கு தேசிய விருது

By சென்னை

First Published : 12 March 2016 03:44 AM IST

அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா புதுதில்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில், 11 பேருக்கு விருதுகளையும், ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளையும் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் வழங்கினார்.

அதில், தமிழகத்தைச் சேர்ந்த சென்னை து.கோ. வைணவக் கல்லூரியில் கணித பேராசிரியர், பை கணித மன்றத்தின் நிறுவனர் ரா.சிவராமன், ராஜபாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் கணேசன், திருசெங்கோடு கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியின் பேராசிரியரான வெ.ராஜேந்திரன் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

இதில், சிவராமனின் பல கணித நூல்கள், தமிழக அரசின் சிறந்த அறிவியல் புத்தகப் பரிசை தொடர்ச்சியாக 2 முறையும், திருப்பூர் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்டவைகளை பெற்றுள்ளது. மேலும், கணிதத்தின் மேன்மையை வெளிப்படுத்தும் வகையில் சொற்பொழிவுகள், பயிலரங்கத்தையும் நடத்தியுள்ளார்.

http://www.dinamani.com/tamilnadu/2016/03/12/

உலக மகளிர் தின விழாவில் தமிழக ஆளுநரிடம் விருது பெற்ற பார்வையற்ற பெண்!


உலக மகளிர் தின விழாவில் தமிழக ஆளுநரிடம் விருது பெற்ற பார்வையற்ற பெண்!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சக்தி மண்டல் சகயோக் சார்பில் மகளிர் தினம் சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் மார்ச் 8ஆம் தேதி நடைபெற்றது. இவ்விழாவில்  பல்துறை பெண்களுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். இவ்விழாவில் பார்வையற்ற சமூகத்திற்காக பல ஆண்டுகளாக தம் பங்களிப்பைச் செவ்வனே செய்துவரும் பார்வையற்ற பெண் செல்வி. முத்துச்செல்வி  அவர்களுக்கு சிறந்த  சமூக சேவகருக்கான விருது வழங்கப்பட்டது.

இவர், பார்வையற்றோருக்கான உரிமை, பாதுகாப்பு, இட ஒதுக்கீடு என்ர பிரச்சணைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். பெண்ணுரிமை, பெண் முன்னேற்றம் போன்றவற்றில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளாக அகிலஇந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பின் செயலாலராக செயலாற்றி வருகிறார். இவர் மெம்மேலும் பல சாதணைகள் புரிய எல்லாம் வள்ள இறைவன் அருள்புரியட்டும். வாழ்த்துகள்!

நன்றி...