புதன், 12 நவம்பர், 2014

என்.வி.டி.ஏ வரவால் TNPSC குரூப் 2 ஆன்லைன் தேர்வில் சம வாய்ப்பு பெற்ற பார்வையற்றவர்



என்.வி.டி.ஏ வரவால் TNPSC குரூப் 2  ஆன்லைன் தேர்வில் சம வாய்ப்பு பெற்ற பார்வையற்றவர்

          தமிழக அரசு நடத்திய TNPSC குரூப் 2 பணியாளர்களுக்கான இரண்டாம் நிலை ஆன்லைன் தேர்வில் என்.வி.டி.ஏ மென்பொருளைப் பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்க்கொண்டார் பார்வையற்றவரான திரு. க.சுதன் அவர்கள்!

TNPSC குரூப் 2 தேர்வு

 தமிழக அரசால் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குரூப் 2 பணியாளர்களுக்கான முதல் நிலைத் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரண்டாம் நிலைத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

என்.வி.டி.ஏ (NVDA)

 பார்வையற்றோர் கணினியைப் பயன்படுத்த உதவும் ஒரு சிறப்பு மென்பொருள் NVDAஆகும். இது ஒரு இலவச மென்பொருள். கணினியில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளைப் பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

ஆன்லைன் தேர்வு

TNPSC குரூப் 2 இரண்டாம் நிலைத் தேர்வில் பார்வையற்ற நபரான திரு. க.சுதன் அவர்கள் பங்கேற்றார். இவர் தேர்வு மையத்திற்கு சென்றதும் தங்களுக்கு கணினியைப் பயன்படுத்தி தேர்வை எதிர்க்கொள்ள முடியுமா அல்லது  உதவியாளர் வேண்டுமா என்று தேர்வு அதிகாரி கேட்டுள்ளார். அவர் அப்படிக் கேட்டதும் இவருக்கு மிகுந்த மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்பட்டுள்ளது! உடனே அவர் அதிகாரியை நோக்கி, ஐயா என்னால் கணினியைப் பயன்படுத்த முடியும் என்று கூறியதும், அவருக்கென ஒதுக்கப்பட்ட தனி அறைக்கு அழைத்து சென்று, என்.வி.டி.ஏ நிறுவப்பட்ட கணினியின் அருகே அமரச் செய்து, தேர்வு முறையையும், கணினியில் எதிர்கொள்ள வேண்டிய விதிமுறைகளையும் விளக்கிக் கூறியுள்ளார். மொத்த வினாக்களின் எண்ணிக்கை 150. ஒவ்வொரு வினாவிற்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். விடைகள் ஒவ்வொன்றும் தெரிவுப் பெட்டிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும். உரிய விடையில் வைத்துக்கொண்டு இடைவெளியை (Space bar) அழுத்தினால் மட்டும் போதும் விடைத் தெரிவாகிவிடும். இப்படி அவர் கூறிய சில நிமிடங்களில் தேர்வு தொடங்கியது. இவரும் கட்டளை விசைகளைப் பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் அனைத்து வினாக்களையும் திரைவாசிப்பு மென்பொருள் மூலம் படித்து பார்த்து விடைகளைக் குறித்து வெற்றிகரமாக தேர்வை எதிர்க்கொண்டுள்ளார். வழக்கம்போல் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் தேர்வின் அவசியமும் பயனும்

 இன்றைய சூழலில் ஒருவர் ஒரு தேர்வில் பெறும் வெற்றி தோல்வியே அவருடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது எனலாம். அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறும் தேர்வினை பார்வையற்றோர் இது நாள் வரை உதவியாளரை நம்பியே எதிர்க்கொண்டு வருகின்றனர். இப்படி உதவியாளரை வைத்து எழுதுவதால் சில நன்மைகள் இருக்கின்றன என்றாலும், பெருமளவில் சிக்கல்களையே எதிர்க்கொள்ளும் நிலை ஏற்படுகிறது எனலாம். இப்படி ஏற்படும் சிக்கல்களால் பல நேரங்களில் மன உளைச்சலுக்காளாகி தவறான முடிவுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை நிலை பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
§  வேறொருவரிடம் விடையை சொல்லும் போது இருக்கும் தயக்க நிலையிலிருந்து விடுபடலாம்
§  உதவியாளர் நாம் சொன்ன விடையை சரியாக தான் குறித்திருப்பாரா என்ற ஐயம் இருக்காது
§  தாங்களாகவே தேர்வை எதிர்க்கொள்ளும் போது கூடுதல் நம்பிக்கை பிறக்கும்
§  விடைகளைச் சொல்லும்போது சில உதவியாளர்கள் இதுவா சரியான விடை என்று வினவுதல் உள்ளிட்ட இடையீடுகள் தவிர்க்கப்படும்
§  அனைத்து தகுதித் தேர்வுகளும், போட்டித் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பட்சத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.
§  பார்வையற்றோரிடையே கணினி பயன்பாடு அதிகரிக்கும்
§  இயலாமை என்ற நிலையால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்
இனி வரும் காலங்களில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளும், தகுதித் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட வழிவகைச் செய்ய வேண்டும். அந்த தேர்வுகளில் பார்வையற்றோர் பயன்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்துத்தரப்பட வேண்டும். ஆன்லைன் தேர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் பார்வையற்றோர் வாழ்வில் புதியதொரு மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி!
நன்றி.....