ஞாயிறு, 26 அக்டோபர், 2014

சூரிய வணக்கத்தில் பிரகாசித்த சுவர்ணலட்சுமி!சூரிய வணக்கத்தில் பிரகாசித்த சுவர்ணலட்சுமி!

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று ஐ.நா வில் அசத்திய பார்வையற்ற பெண் சுவர்ணலட்சுமியைக் குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். பல இடங்களில் தன்னுடைய அறிவார்ந்த பேச்சால் அசத்தி வரும் அவரைப் பற்றிய அறிமுகத்தை, பார்வையற்றோரால் தொடங்கப்பட்ட முதல் தமிழ் மின் குழுமமான வள்ளுவன் பார்வை மின் குழுமத்தின் நெறியாளர் திருமிகு. வெங்கடேசன் அவர்கள் ஒரு வலைத்தளத்தில் இடம் பெற்ற தெரிவின் மூலம் பகிர்ந்துக்கொண்டார். அதன் விளைவாக கடந்த டிசம்பர் மாதம் பிரேரனா மற்றும் லயன்ஸ் க்லப் மூலம் பார்வையற்றோருக்காக நடத்தப்பட்ட மூன்று நாள் கணினி பயிலரங்கின் நிறைவு விழாவில் விருந்தினராக கலந்துக்கொண்டார். அந்த விழாவில் அவருக்கு லிட்டில் ஃபீனிக்ஸ் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவில் தான் நான் அவரை முதல் முறையாக சந்தித்தேன். என்ன ஒரு தெளிவான உணர்வுப்பூர்வமான பேச்சு! அவருடைய உரையை கேட்ட அனைவரும் வியந்து பாராட்டினர்! அவரைப்பற்றிய அறிமுகத் தெரிவை கீழே பகிர்ந்துள்ளேன்.
கடந்த வெள்ளிக் கிழமை அன்று சன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூரிய வணக்கத்தின் விருந்தினராக செல்வி. சுவர்ணலட்சுமி கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவருடைய பேச்சு மேலும் பக்குவப்பட்டதாக இருந்தது. தற்போது அவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவ்வளவு சின்ன வயதில், இத்தனை அறிவும் ஆற்றலும் பெற்று விளங்கும் குழந்தையை பார்க்கும் போது  மிகுந்த மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்படுகிறது!
நிகழ்ச்சியை யுட்யூபில் காண, பகிர்வின் இருதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பினைச் சொடுக்கவும்.

ஐ.நாவில் அசத்திய பார்வையற்ற சென்னை மாணவி!!


சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுவர்ணலட்சுமி அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் இரண்டு முறை பேசி சாதனை படைத்துள்ளார்.
சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது. மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி. சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை.
இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால்
அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கையை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.
சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.
இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை. இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது.
தமிழகத்தில் மட்டும் 15000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.
குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.
இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை. ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தெரிவு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.
அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார்.
இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார். இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.
இந்நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.
இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.
இதுகுறித்து சுவர்ணலட்சுமி கூறுகையில், ஆரம்பத்தில் என்னிடம் பல விடயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன.
எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம் என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.
இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன்.
நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும் என்றும் பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் எனவும் கூறியுள்ளார்.

சன் தொலைக்காட்சி

நன்றி.....!

வியாழன், 23 அக்டோபர், 2014

கத்தி பார்வைகத்தி பார்வை
நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த ஓர் திரைப்படம் கத்தி. அந்த திரைப்படத்தின் மீதான எனது பார்வையை இங்கே எழுதியுள்ளேன்.

மேலை நாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிலைப்படுத்திக்கொள்வதற்காக செய்யும் முயற்சிகளும், அதற்காக விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதையும், நீராதாரங்களும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதையும், அதனால் பாதிக்கப்படும் விவசாயத்தையும், அதன் அவசியத்தையும், விவசாயிகளின் இன்றைய நிலையையும் அருமையாக காட்சிப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது.
தன்னுடைய விவசாய நிலத்தை பரிகொடுத்த ஒரு விவசாயி “எங்களோட அரிசிய உங்க தட்டுக்கு கொண்டுவர முடிஞ்ச எங்களால, எங்க கஷ்டத்த உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க முடியலனு” சொல்லும் வரிகள், விவசாய நிலம் அபகரிகப்பட்டதால் வெளிநாடு சென்று துப்புறவு பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஒரு தொழிலாளி “நம்மல பட்டிணி போட்டவங்களுக்கு நாம சோறு போடனுமுனு” தன்னுடைய வேதணையிலும் இறக்கத்துடன் பேசும் வரிகள் அரங்கில் இருந்த அனைவரையும் ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது எனலாம்.
அதிகார வர்கம் விவசாய நிலங்களை அபகரிக்க போட்டத் திட்டத்தை எதிர்த்து செய்த செயல்பாடுகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் ஊடகங்களிடம் கொண்டு சென்ற போது ஊடகத்தினர் காட்டிய அலட்சிய போக்கும், ஊடகங்களின் கவணம் தங்கள் கிராமத்தின் மீது திரும்ப வேண்டும் என்பதாலும், அதன் மூலம் தங்கள் கிராமத்தின் நிலை உலகிற்கு வெளிப்பட வேண்டும் என்பதாலும் மூத்த குடிமக்கள் ஆறு பேர் நூதன முறையில் மரணத்தை தேடிக்கொண்டதும், இந்த நிலத்தின் மீது ஏற்படும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் குளிர்பாணங்களை குடிப்பவர்கள் எங்கள் இரத்தத்தை குடிப்பதாக அர்த்தம் என்று கூறிவிட்டு இறந்ததும், அதன் பிறகு ஊடகங்கள் அந்த நிகழ்வில் நடந்துக்கொண்ட நிலையும் என அனைத்தும் சொல்லப்பட்ட விதம் அருமை!
படத்தில் சில காலங்களுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும்,  கதாநாயகன் மூத்தக்குடி மக்களை மதிக்க வேண்டும்என்பதை வலியுறுத்திய விதமும், முதியவர்களான, பெரியார், தெரேசா, காந்தி போன்றவர்களால் செய்யப்பட்ட சாதணைகளைச் சொல்லி முதியோர்களுக்குள் போராட்டத்திற்கான  வித்தை விதைத்து ஓர் உத்வேகத்தை ஏற்படுத்திய விதமும், விவசாயம் இல்லாததால் அயல்நாடுகளுக்கு சென்று ஒப்பந்த அடிப்படையில் தங்கள் கடவுச்சீட்டு முதல் தன்மானம் வரை அனைத்தையும் ஒப்படைத்து விட்டு குடும்ப வருமையை போக்குவதற்காக உழைக்கும் உழவர்கள் பற்றியும், அதிகாரவர்கத்தின் செயல்பாட்டிற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு நகரும் போது அவர்களால் செய்யப்பட்ட சதி வேலைகளும், தீர்ப்பு விவசாயிகளுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும், விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தவும், விவசாயிகளின் உணர்வுகளை காக்கவும், நீராதாரங்கள் நிலைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நகர வாசிகளுக்கு உணர்த்த எடுத்த முயற்சியும், அதனால் ஏற்பட்ட போராட்டங்களும், போராட்டங்களின் போக்கு, போராட்டத்திற்குரிய வலிமையையும், பரபரப்பை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் நிலைப்பாட்டையும் படம் பிடித்துக்காட்டி இருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.
கதாநாயகனுக்கு விருது வழங்கும் லயன்ஸ் க்லப் விழா படத்தில் ஓர் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் காட்டப்பட்டிருக்கும் நிகழ்வு லயன்ஸ் க்லப் என்றால் என்ன என்பதையும், அதன் பணி என்ன என்பதையும், லயன்ஸ் க்லப் அங்கத்தினரும், லயன்ஸ் க்லபால் உதவி பெறுவோரும் அறிந்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
நகைச்சுவை, கருத்துச்செரிவு, காதல், இனிமையான இசை என அனைவரையும் ரசிக்க வைத்த திரைப்படம். அவ்வப்போது தொடர்பில்லாத நிகழ்வுகளை வைத்திருப்பது கதையின் ஓட்டத்தை சற்று கட்டுப்படுத்தியது எனலாம்.  நீர்குழாய்க்குள் போராட்டத்தில் இருக்கும் போது கதாநாயகனுக்கு கதாநாயகி தன் தாத்தா மூலமாகவே மோதிரம் பரிசளித்து, இன்று நம்முடைய என்கேஜ்மன்ட் என்று சொல்வது போன்றவற்றை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். ஆனாலும் இப்படிப்பட்ட மாற்றங்கள் கதைக்கிடையே ரசிக்கப்படுவதால் அதுவும் ஒரு வகையில் வரவேற்கத்தக்கது.
விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் நிலத்தடி நீர் பாதுகாப்பின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் அமைந்திருக்கும் கத்தி ஓர் வித்தியாச முயற்சி!
நன்றி.......

செவ்வாய், 14 அக்டோபர், 2014

வழியிலும் வாழ்விலும் விவேகமுடன் செயல்படுவோம்!வழியிலும் வாழ்விலும் விவேகமுடன் செயல்படுவோம்!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் நாள் உலக வெண்கோள் தினம் (World Wite Cane Day) கொண்டாடப்படுகிறது. இந்த வெண்கோள் பார்வையற்றோருக்கு விழியாய் இருந்து வழிக்காட்டுகிறது என்று சொன்னால் மிகையாகாது. பார்வையற்றோரால் காலம் காலமாக பயன்படுத்தப்படும் வெண்கோளை முறையாக வடிவமைத்தவர் திரு. ரிச்சர்ட் ஈ ஹூவர் அவர்கள் ஆவார். வெண்கோள் வளர்ச்சியில் லயன்ஸ் க்லபினுடைய பங்கு குறிப்பிடத்தக்கது. 1930 முதல் லயன்ஸ் க்லப் அங்கத்தினர் இந்த வெண்கோளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்காக பணியாற்றி வருகின்றனர் என்பதை அவர்களது சைட் ஃபஸ்ட் என்ற திட்டத்தின் கீழ் அறிய முடிகிறது. 1964 ஆம் ஆண்டு, அன்றைய அமெரிக்க அதிபர், அக்டோபர் 15 ஆம் நாளினை உலக வெண்கோள் பாதுகாப்பு நாளாக அறிவித்தார். 2011 ஆம் ஆண்டு, இன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா, அக்டோபர் 15 ஆம் நாளினை அமெரிக்க பார்வையற்றோர் சம உரிமை நாளாக அறிவித்துள்ளார்.
இந்நாளில் தான் 1918 ஆம் ஆண்டு அனைவராலும் போற்றி வணங்கப்படும் சீர்டி சாயிபாபா அவர்கள் இறைவனடி சேர்ந்து இறைவனானார்.
இதே நாளில் தான் 1931 ஆம் ஆண்டு நம்முடைய இந்திய நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரும், இன்றைய இளைஞர்களின் இணையற்ற தலைவருமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் பிறந்தார்.
இத்தகு சிறப்பு மிக்க நன்நாளில் வழியிலும் வாழ்விலும் விவேகமுடன் செயல்பட உறுதிகொள்வோம்!
அனைவருக்கும் இனிய உலக வெண்கோள் தின நல் வாழ்த்துக்கள்!
நன்றி.....

புதன், 1 அக்டோபர், 2014

கற்க கற்க அறிவு ஊற்றாய் பெருகும்- சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்!கற்க கற்க அறிவு ஊற்றாய் பெருகும்- சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள்!

தாயே சரஸ்வதியே!
கற்க கற்க அறிவு ஊற்றாய் பெருகும்
என்பதை எங்களுக்கு உணர்த்திடவோ
நீ கற்கும் வண்ணம் காட்சி தருகிறாய்!
அன்னையே!
அறிவார்ந்தவரானாலும் அன்றாடம்
கற்க வேண்டும் என்பதை
உன் வடிவம் கண்டு உணர்ந்தோம்அதை
உன் மைந்தன் வள்ளுவன் சொல்ல அறிந்தோம்!
பட்டம் பல படித்தும்
அறிவின் குறைவால் அல்லும் பகலும் துடித்தோம்!
கற்கும் வரம் வேண்டி உன்னை
நித்தம் நித்தம் நினைந்தோம்
உன்னையே  தஞ்சமென அன்றாடம் பணிந்தோம்!
அருளே உருவாய் ஞானமே வடிவாய் காட்சி தரும் கலைவாணியே!
உன் திருநாளாம் இன்று உன் திருவடி நோக்கி விரைந்தோம்
உன்னையே சரண் அடைந்தோம்!
விரைவாய் வருவாய் நிறைவாய் அருள்வாய் சுகபாணியே!
  தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
  கற்றனைத் தூறும் அறிவு. (குறள் 396)
  மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல் மக்களின் கற்றக்    கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும். (மு.வ உரை)
Translation:
  In sandy soil, when deep you delve, you reach the springs below;
  The more you learn, the freer streams of wisdom flow.
Explanation:
  Water will flow from a well in the sand in proportion to the depth to which it
  is dug, and knowledge will flow from a man in proportion to his learning.
அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்!