செவ்வாய், 5 ஜனவரி, 2016

பார்வையற்றோர் வாழ்வில் 2015



பார்வையற்றோர் வாழ்வில் 2015

ரா. பாலகணேசன்,   அருப்புக்கோட்டை
  பார்வையற்றோர் வாழ்வில் 2015-இன் பங்களிப்பு எப்படி இருந்தது?
சுருக்கமான பின்னோட்டமாய் இக்கட்டுரை.

தமிழகம்

  *10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் முதல் 10 இடங்களைப் பெறும்  பார்வையற்றோர் குறித்த தகவல்களை அரசே தனது அறிவிக்கையில் வழங்கத் தொடங்கியது இந்த ஆண்டில்தான்.
  *கடந்த மார்ச் மாதம் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள்  சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. பல அரசியல் கட்சிகளும்,  சமூக அமைப்புகளும் போராட்டத்தை ஆதரித்தன. இருந்தபோதிலும், திடமான தீர்வு  இன்றியே போராட்டம் முடிவடைந்தது.
  *பார்வையற்றோருக்கான முதல் கல்வியியல் கல்லூரி சென்னை நேத்ரோதயா  நிறுவனத்தின் சார்பில் செயல்படத் தொடங்கியது.
  *தமிழகத்திலேயே முதல் முறையாக, தம் கல்லூரியில் பயிலும் பார்வையுள்ள மாணவர்களுக்கு பார்வையற்றோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்,சென்னை மாதனாங்குப்பம் பகுதியில் உள்ள சோகா இகேதா கலை மற்றும் அறிவியல் மகளிர்க் கல்லூரி, தேசிய பார்வையற்றோர் சங்கத்துடன் (NAB tamilnadu) இணைந்து பார்வையற்றோருக்கான தொழில்நுட்பக் கல்விக்கான சான்றிதழ் படிப்பைத் தொடங்கியது.
  *தமிழகத்தைச் சேர்ந்த பெனோசெபைன் என்ற பார்வையற்ற பெண் முதல்  பார்வையற்ற அதிகாரியாக இந்திய வெளியுறவுத் துறையில்  பொறுப்பேற்றுக்கொண்டார்.
  *கோயம்புத்தூரைச் சேர்ந்த சபரி வெங்கட் என்ற பார்வையற்ற சிறுவன் சிறந்த  மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருது பெற்றார். இவர் சிறந்த பேச்சாளர்,  பலகுரல் வித்தகர்.
  *தஞ்சாவூர், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் உள்ள பார்வையற்றோர்  பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக மாணவர்கள் போராட்டம்  நடத்தினர். இதன் விளைவாக, சிறப்புப் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை  நிரப்பும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  *’பிரெயில் மஞ்சரிஎன்ற புதிய பிரெயில் இதழை மதுரை IAB பிரெயில்  அச்சகம் தொடங்கியுள்ளது.. அடுத்த ஆண்டில் பிரெயில் பார்வைஎன்ற  பெயரிலான இதழை மத்திய அரசு நிறுவனமான NIVH தென்மண்டல மையம்  வெளியிடவிருக்கிறது.
  *தமிழக வெள்ளப் பெருக்கு பார்வையற்றோரையும் வெகுவாக பாதித்தது. சென்னை  சிறுமலர் பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி மாணவிகள் வெள்ளத்தின்போது  கடும் அவதிக்கு உள்ளாகினர். இசையமைப்பாளர் இளையராஜா இவர்களுக்கு உதவிய  செய்திகள் சமூக வலை தளங்களில் பாராட்டு பெற்றன.    பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் வெள்ளத்தில்  முற்றும் முழுதாகச் சேதமடைந்தது. சங்கத்தின் ஆவணங்கள், உபகரணங்கள்  முதலியவை பெருமளவில் அழிந்துவிட்டன.

இந்தியா

  *மத்திய அரசின் அதிகார எல்லைக்கு உட்பட்ட வகையில் இன்னும் 14327  மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக மத்திய  இணையமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்காலக்  கூட்டத்தொடரில் இத்தகவலை  அவர் வழங்கினார்.
  * நாடெங்கும் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் ஒரே வகையான  நவீன அடையாள அட்டை வழங்கப்படும் எந மத்திய அரசு அறிவித்தது.
  *ஏப்ரல் 2017-க்குள் இந்திய அரசின் அனைத்து அலுவலகங்களும், பொதுத் துறை  நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கேற்ற வகையில் அமைக்கப்படும்  என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
  *பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு தொட்டுணரும் வரைபடங்களுடன்கூடிய  பிரெயில் புத்தகங்களை வழங்கும் திட்டத்தை NCERT தொடங்கியது.
  *சுற்றுலாத் தளங்கள் பார்வையற்றோருக்கு ஏற்றாற்போல் அமைக்கப்படவேண்டும்  என்ற இலக்கில், முதல்கட்டமாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சுற்றுலாத்  தலங்களில் பிரெயில் விவரணைகள் இந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  *ரயிலில் படுக்கை வசதி கேட்டு முன்பதிவு செய்யும்  மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ்ப் படுக்கையும், அவர்களது உதவியாளர்களுக்கு  நடுப் படுக்கையும் கட்டாயம் வழங்கப்படவேண்டும் என இந்திய ரயில்வே ஆணை  பிறப்பித்துள்ளது.
    *மைசூர் ரயில் நிலையம் மாற்றுத்திறனாளிகளுக்கேற்ற முதல் ரயில்  நிலையமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  *பார்வையற்றோர் தங்கள் சிக்கல்களையும், ஐயங்களையும் போக்கிக்கொள்ளும்  வண்ணம் இலவசத் தொலைபேசி ஆலோசனைச் சேவை இந்த ஆண்டில் தொடங்கப்பட்டது.  மத்திய அரசின் உதவியுடன் eyeway நிறுவனத்தால் நடத்தப்படும் இச்சேவையில்  பார்வையற்றவர்கள் எந்த இந்திய மொழியிலும் தங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.
தொலைபேசி எண்: 1800-300-20469.

நீதி

  *மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை உறுதியாக அமல்படுத்தவேண்டும்  என்ற நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இந்திய ரயில்வே, BSNL, நெய்வேலி  நிலக்கரி நிறுவனம் முதலியவை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு  வேலைவாய்ப்பு அறிவிப்புகளை விடுத்துள்ளன.
  *ஆசிரியர் பயிற்றுநர்கலாகப் பார்வையற்றவர்களை நியமிப்பது தொடர்பான  வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது கருத்துரையை வழங்கிய பள்ளிக்  கல்வித் துறை செயலர் திருமதி. சபிதா, ‘ பார்வையற்றவர்கலைச்  சராசரியானவர்களாகக் கருதமுடியாது; எனவே இப்பணியில் அவர்களை  நியமிக்கமுடியாதுஎன்று கூறிய கருத்துகளை நீதிமன்றம் கண்டித்தது.  சபிதாவின் இக்கருத்து பரவலாக கண்டனத்துக்குளானது.
  * பாண்டியன் கிராம வங்கியின் வேலை வாய்ப்பு அறிவிப்பில்  பார்வையற்றோருக்கான இடங்கள் குறித்த தகவல் இல்லாமல் இருந்ததை நீதிமன்றம் கண்டித்தது. டெல்லியைத் தலைமையகமாகக் கொண்ட AICB தொடுத்த வழக்கில் வங்கி  பார்வையற்றோருக்கான வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
  *2008-ஆம் ஆண்டு பெரம்பலூரில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமில்  செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சை காரணமாக 66 பேர் பார்வையிழந்தனர். இது  தொடர்பான வழக்கில், தொடர்புடைய மருத்துவர்களுக்கும், மருத்துவமனை  நிர்வாகிகளுக்கும் ஓராண்டு சிறை தண்டனை அளித்து திருச்சி நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. தவறான சிகிச்சைக்கு எதிராக இந்திய அளவில் முதல்முறையாக  வழங்கப்பட்ட தீர்ப்பு இது.
  *சுரேந்திரமோகன் என்ற தமிழகப் பார்வையற்ற வழக்கறிஞருக்கு நீதிபதி பணி  தரப்படவேண்டும் என்ற தீர்ப்பும் இந்த ஆண்டில்தான் வெளியானது.
  *மதுரை அரசு மருத்துவமனையில் தங்கள் குழந்தையைத் தொலைத்த  முத்துமாணிக்கம், மாரீஸ்வரி இணையருக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு  நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ரூ. 3 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

அறிவியல் தொழில்நுட்பம்

   பார்வையற்றவர்களுக்குப் பார்வை தரும் பொருட்டும், தற்போதைய நிலையில்  தொழில்நுட்ப உதவி வழங்குவது குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  *பார்வையற்றோர் தானாக பணிபுரியும் வண்ணம் கட்டுமானக் கருவியைக்  கண்டறிந்தார் மதுரையைச் சேர்ந்த மனோகரன். இக்கருவியைப் பயன்படுத்துவது  குறித்து பல பார்வையற்றோருக்குப் பயிற்சியளித்துவருவதாக இவர்  தெரிவித்தார். உடலுழைப்பில் ஈடுபட விரும்பும் பார்வையற்றோருக்கு இது ஒரு  வரம்.
  *மீயொலி --முப்பரிமாண அச்சுக்கருவி (ultrasound 3d printer)இந்த ஆண்டு  கண்டுபிடிக்கப்பட்டது. பார்வையற்றோரால் காணமுடியாத பிம்பங்களுக்கு  (images) வடிவம் கொடுக்க இது உதவும். சான்றாக, பிரேசில் நாட்டில் கருவில்  இருக்கும் தன் குழந்தையின் உருவை ஒரு பார்வையற்ற தாய் தொட்டுணர்ந்த  செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்தியது.
  கூகுல் நிறுவனம் தயாரித்த OCR-ல் தமிழ் இடம்பெற்றிருப்பது, கர்நாடக  மாநிலத்தில் தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளுக்கான திரைவாசிப்பானின்  உருவாக்கம் ஆகியவை கணினி பயன்படுத்தும் தமிழ் பார்வையற்றோருக்குப்  பயன்படுபவை.
   கூகுல் நிறுவனம் தயாரித்த ஓட்டுநர் தேவையில்லாத காரை ஏற்றுக்கொள்வது  குறித்து பல நாடுகள் பரிசீலித்துவருகின்றன.
  இவை தவிர பார்வையற்றோர் கணினி, அலைபேசி ஆகியவற்றை எளிமையாகக் கையாள,  அவற்றின் மூலம் பல தகவல்களை விரைவாக அறிந்துகொள்ள பல்வேறு செயலிகள்  வெளியாகிவருகின்றன.

ஊடகம்

  *’கண்ணு தெரியலைண்ணா உலகத்தச் சுத்திப்பார்க்க முடியாதா தாத்தா?’ என்று  ஒரு பெண் கேட்பதாக வடிவமைக்கப்பட்ட VIP சூட்கேஸுக்கான விளம்பரம் இந்த  ஆண்டு வெளியாகி தன்னம்பிக்கையை வளர்த்தது.
  *ஸ்ரீராம் என்ற 10 வயதுச் சிறுவன் லோட்டஸ்நிய்யூஸ் தொலைக்காட்சியின்  சிறப்புச் செய்திவாசிப்பாளராக பணியமர்த்தப்பட்டார். பார்வையற்றோர்  கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு இம்முயற்சி எடுக்கப்பட்டதாக தொலைக்காட்சி  நிர்வாகம் கூறியது. சனிக்கிழமைதோறும் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகும் அகக்கண்என்ற அரைமணிநேர நிகழ்ச்சியில் பிரெயில் முறையைப் பயன்படுத்தி  செய்தி வாசிக்கிறார் ஸ்ரீராம்.
  *விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன்  பாட்டாலும், பலகுரல் வித்தையாலும் அனைவரது மனதிலும் இடம்பிடித்தார்  இர்வின் விக்டோரியா என்ற பார்வையற்றவர். முதன்மையான 10 (Top 10)  போட்டியாளர்களுள் ஒருவராக வந்த முதல் பார்வையற்றவர் இவர்.
  *பார்வையற்றவர்களைத் தலைமைப் பாத்திரங்களாகக் கொண்டு மெல்லத் திறந்தது  கதவுஎன்ற நாடகத் தொடரை z தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பிவருகிறது.  திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடர்  பார்வையற்றோர் வாழ்க்கை, அவர்கள் கல்வி பெறும் நிறுவனம் சார்ந்த அரசியல்  முதலியவற்றை அடிப்படைக் கதையாகக் கொண்டுள்ளது.

விளையாட்டு

  வழக்கம் போலவே இந்த ஆண்டும் பார்வையற்றோருக்கென பல விளையாட்டுப்  போட்டிகள் நடத்தப்பட்டன.
  *டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான பார்வையற்றோர் கிரிக்கெட்  போட்டியை Dd sports தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. இத்தகைய  போட்டிகலை நேரடியாக ஒளிபரப்புவது இதுவே முதல்முறை.
  *அடுத்த ஆண்டில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை  கிரிக்கெட் போட்டிகளில் பாதுகாப்புக் காரணங்களால் தங்களால்  கலந்துகொள்ளமுடியாது என பாகிஸ்தான் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி  அறிவித்தது துரதிஷ்டவசமானது.

இறப்புகள்

  *இந்திய நாடாளுமன்றத்தின் முதல் பார்வையற்ற உறுப்பினரான சதன் குப்தா  இந்த ஆண்டு காலமானார். வயது 98. மேற்குவங்கத்தைச் சேர்ந்த இவர்  பொதுவுடைமை இயக்க ஆர்வலர்.
  *பார்வையற்ற ஹிந்தி திரையுலக இசையமைப்பாளர் ரவீந்திர ஜெய்ன் இந்த ஆண்டு  காலமானார். இவர் பாடலாசிரியராகவும், பாடகராகவும் புகழ் பெற்றவர்.  தெனிந்தியப் பாடகர் K.J. ஜேசுதாஸ் அவர்களை ஹிந்தி திரையுலகிற்கு  அறிமுகப்படுத்தியவர் இவர்.
  *பழம்பெரும் தமிழ் பக்திப் பாடகர் பித்துக்குலி முருகதாஸ் காலமானார்.  இவர் ஒரு கண் பார்வையை இழந்தவர்.

எதிர்பார்ப்பு

  ஐநா வடிவமைத்துத் தந்த UNCRPD-யை அடிப்படயாகக் கொண்ட  மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டம் அடுத்த ஆண்டாவது நிறைவேற்றப்படும்  என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு மாற்றுத்திறனாளியிடமும் இருக்கிறது.

  (குறிப்பு: கட்டுரையில் புள்ளிவிவரக் குறைபாடுகள் இருப்பின், வேறு  விஷயங்கள் விடுபட்டிருப்பின் பதிவர்கள் தெரிவிக்க வேண்டுகிறேன். பதிவுகள்  அவசியம்தானே!)
கட்டுரை முழுமை பெற உதவிய கவிஞர் சுகுமாரன், பொன். சக்திவேல், பொன்.  குமரவேல், J. யோகேஷ், அலகாபாத் வங்கிப் பணியாளர் முத்துச்செல்வி, சென்னை பேரா. பாண்டியராஜ் ஆகியோருக்கு என் நன்றிகள்.