வெள்ளி, 16 ஜனவரி, 2026

பனித்துளி அளவேனும் ரௌத்திரம் பழகுங்களேன்!

சென்னை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பன்முக மேடை பதிப்பகத்தில் கவிஞர் முனைவர் உ. மகேந்திரன் அவர்கள், தனது "அனல் வீசும் பனித்துளிகள்" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். "ரௌத்திரம் பழகு" என்ற முண்டாசுக் கவிஞனின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, தன் வரிகளால் வரையறைகளை மீறுபவர்களின் முகத்திரையைக் கிழித்தெறியும் இவரின் சமூக அக்கறையை வார்த்தைகளால் வரையறுத்திட இயலாது.

இவருடைய கவிதைத் தொகுப்பின் தொடக்கத்தில், பிஞ்சு மழலையின் கொஞ்சு மொழியை, செல்லமதன் சேட்டையை, அதன் தொடுதலில் உணர்த்திய நேசத்தை, தன்னைப் பண்படுத்திய பாசத்தை என மழலையின் மகத்துவத்தைக் கூறி நம்மை மகிழச் செய்கிறார். அடுத்த நிலையில் நட்பின் இலக்கணத்தை, அவர்கள் ஊட்டியில் அடித்த லூட்டியை எனப் பார்வையற்ற நண்பர்களுடனான மலைவாழ் அனுபவங்களைக் கூறி நம்மை மலைக்கச் செய்கிறார்.

இப்படித் தொடக்கத்தில் அன்பு, பாசம், நேசம் என நம் மனதை இதமாக்கி, தன் வரிகளுக்குள் நம்மை ஈர்த்துப் பயணிக்கச் செய்த கவிஞர், மெல்ல மெல்ல நமக்குள் சமுதாயத்தில் புரையோடிக்கிடக்கும் கொடூரங்களான ஒடுக்கப்படுதல், ஒதுக்கப்படுதல், அடக்கப்படுதல், ஆதிக்கம் செலுத்துதல், உதாசீனப்படுத்துதல், உரிமை மறுத்தல், புறக்கணித்தல், துரோகம் இழைத்தல் என்கிற அநீதிகளை எதிர்த்து, தவறைத் தட்டிக்கேட்கும் பொருட்டு "ரௌத்திரம் பழக" வேண்டியதன் அவசியத்தை நம் உள்ளத்தில் உறையும்படி உணர்த்தியுள்ளார்.

 

ஆசிரியர்களாம் எங்களை தெரியுமா என்ற கவிதையில்

மாணவர்களின் மனதில் பல ஆசையை புகுத்தி,

படிக்கும் எண்ணத்தை வெளியே துரத்தி,

சொல்லித் தருபவரை எதையும் சொல்லக்கூடாது என்று திருத்திய கொடுமைக்குத் தள்ளியது,

உங்களுக்கு ஒரு துளியேனும் வந்து சேர்ந்ததா?

அதிகாரிகள் என்கிற பெயரில், ஆளுக்கு ஒரு ஆணையிட,

அதை எங்கும் முறையிட முடியா நிலையில், தலை எங்கும் நறையிட்டு போய்,

உள்ளம் பாழ்பட்டு  போய் கிடக்கும் பிரஜைகளின் வேதனை உங்களின்  மனதினை அடைந்ததா?

வகுப்பெடுக்க முடியாமல், கணிப்பொறியில்  மாணவரின் குறிப்பை தலைக்கு நூறு  என பதிவேற்றி,

தொழில் திருப்தி இன்றி துயரத்தில் தவிக்கும் எங்களின் இடத்திலிருந்து எதையாவது உணர்ந்து கொள்ள முடிகிறதா?

திரை நடிகனிடம் தன் மூளையை அடகு வைத்த மாணவனை மீட்டிட, கண்டிப்பு காட்டிட முடியாமல், அதிகார வர்க்கத்தால் நிந்திப்பு பெறும் நிலையில் இருக்கும் எங்களை சிந்திக்க உங்களால் எப்பொழுதாவது மட்டுமே முடிகிறதா?

என ஆசிரியர்களை ஏளனம் செய்வோரிடம் தன் அறச் சீற்ற வினாக்களைத் தொடுத்து சிந்திக்க வைக்கும் பாங்கு பாராட்டிற்குறியது.

மாற்றுத் திறனாளிகளுக்கு நாநிலம் காணாத இட ஒதுக்கீட்டைக் கொடுத்து அவர்கள் உரிமைகளைக் காத்திடுவோம் என முழங்கியவர்கள்அரசியலில் இட ஒதுக்கீடு தருகிறோம் எனச் சொல்லி விளம்பரம் செய்து, அரசு பணி இட ஒதுக்கீட்டைப் பரித்திட்ட துரோகத்தை தன் அறச் சீற்றத்தால் பின்வறுமாரு  அடையாளப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

உடல் குறை கொண்ட ஏனையோரை,

வேலை ஏற்றம் காண வதை பட்ட  தன் மானத்தோரை,

எங்கெங்கும் மறுக்கப்பட்ட வேலையை மறியல் செய்து பெற்றுத் தந்த இருள் தேசத்தோரை,

படுமோசமாய் நசிக்கிடும் அரசு ஆணைக்கு,

வைத்த பெயரோ  ஒதுக்கீடு,

புரியவில்லை ஐயா இது எந்த மடையன் செய்த கணக்கீடு!

தள்ளாடிடும் தற்காலிக பணியும்,

விழியற்றவனுக்கு இன்று தள்ளாட்டம் காணுது,

துறைகள் எல்லாம் கணக்கிடுகிறோம்,

சிறப்பு தேர்வு நடத்தி ஆள் சேர்க்கும் ஆணை அதை விரைவில் விடுகிறோம்,

என்று அதிகார வர்க்கத்தின் அநியாயக்கார ஐ ஏ எஸ்  துரைகளும்

அவர்களை வைத்து சுட்ட அமைச்சரின் வடைகளும்,

இருள் நட்டு வெளிச்சம் பறித்தவனை வீதியில் வீசிய சதியை அன்றோ செய்தது!

என தொடரும் இருபத்துநான்கு என்னும் மத ஆணை என்ற கவிதையின் சில வரிகளே போதும் அரசு பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செய்திட்ட பச்சை துரோகத்தை உணர்த்திட!

ஆண் எனப்படுவது யாதெனின்?

 அவனுக்கு அது ஊட்டச்சத்து போல் ஊட்டப்பட்டு கொண்டே இருக்கிறது!

அது ஊட்டப்படும் விதத்தில் அவனுக்கு ஆண் எனப்படும் பதக்கம் சூட்டப்படுகிறது!

பதக்கம் சூட்டியவன் எதற்கும் துணிந்தவனாய் இருக்க,

மாண்புகளை மிதிக்கும் மகத்துவத்தை மானசீகமாய் அவன் துதிக்க,

வதைப்பதே வீரமென புத்தியில் நுழைப்பதை அவன் நுகர்ந்து கர்ஜிக்க,

அந்த அவமானத்தின் அரங்கேற்றம் அருவெறுக்க அன்றாடம் நடக்குது,

தாய் கொடிகளின் கருவறுப்பு ஐயோ தடுக்கப்படாமல் தொடருது!

எனத் தொடரும் கவிதையில் ஆணாதிக்கச் சிந்தனையைத் தோலுரித்துக் காட்டி, நாளுக்கு நாள் பிஞ்சுக் குழந்தைகள் முதல் முதிர்ந்த பெண்கள் வரை என எவரையும் விட்டுவைக்காத கொடூர புத்தி கொண்ட, காமவெறி கொண்ட மிருகங்களை விவரிக்கும் கவிஞரின் காத்திரமான வரிகளைப் படித்த எவரும், சாட்டையைக் கையில் எடுக்காமல் இருக்க முடியாது.

எளிய நடையில் அனைவரையும் கவரும் வகையில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கவிதையும் பல்வேறு வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைத்து, காலந்தோறும் சமுதாயத்தில் பல்வேறு படிநிலைகளில் ஏற்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்பதை நம்மால் அறிய முடிகிறது. கவிதைகளைப் படிக்கும்போது பனித்துளி போன்ற இவரின் வரிகள் நம் உள்ளத்தில் அனலாக வீசுவதை நம்மால் மறுக்க இயலாது.

கவிதைகளில் பயணித்தவர்கள் பனித்துளி அளவேனும் "ரௌத்திரம் பழகுவது" உறுதி!

 அனல் வீசும் பனித்துளிகள் கவிதைத் தொகுப்பு தற்போது புத்தக திருவிழாவில் KVTC அரங்கு எண் 659, மதி நிலையம் அரங்கு எண் F14, உயிர் பதிப்பகம் அரங்கு எண் 107 போன்ற அரங்குகளில் விற்பனைக்கு உள்ளது.

பேராசிரியர் முனைவர் உ. மகேந்திரன் அவர்களைத் தொடர்புக்கொள்ள

9944505154

கவிஞரின் படைப்புகளை உடனுக்குடன் படித்திட

https://brighterfighter.blogspot.com/

நன்றி

சேதுபாண்டி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக