வெள்ளி, 31 ஜனவரி, 2025

இந்தியர் அனைவரும் உடன் பிறந்தவர்கள் அந்த ஒருவரைத் தவிர!

இந்த புத்தக திருவிழாவில் எழுத்தாளர் நிர்மல் அவர்களின் மக்களாகிய நாம் என்ற புத்தகம் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக பார்வையற்றோர் உள்ளிட்ட ஊனமுற்றோர் படித்து மகிழ்ந்து கொண்டாடி தீர்த்த "சகாக்கள்: நிகரானவர்கள் ஆனால் வேறானவர்கள்" என்ற புத்தகத்தின் ஆசிரியர் நிர்மல் அவர்கள் தான் இந்த புத்தகத்தையும் எழுதியுள்ளார். 

மக்களாகிய நாம் என்ற பெயரைக் கேட்டதும் இந்த நூல் மக்களின் உரிமை, ஒழுக்கம் அல்லது சட்டம் என்று ஏதோ ஒன்றைக் குறித்ததாக இருக்கும் என்று யூகித்திருப்போம். நிச்சயமாக நம்முடைய யூகத்தின்படி இது ஒரு மக்களுக்கான புத்தகம் தான். ஆனால், வாழ்வியல் விதிமுறைகளையோ, ஒழுக்க நெறிமுறைகளையோ, சட்ட நுனுக்கங்களையோ இந்த புத்தகம் பேசவில்லை. இது அனைத்தையும்விட உயர்வான ஒரு பதத்தை நமக்குள் விதைக்க புத்தகத்திற்குள் நம்மை அழைத்து செல்லும் நூலின் ஆசிரியர், ஏறக்குறைய எப்போதும் நம்மால் சிந்திக்கப்படாத  இந்திய அரசியலமைப்பு சாசன முகவுரையை நமக்குள் விதைக்க முயற்சித்துள்ளார். ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சட்டங்கள், அவை உருவான விதம், கடவுள் தந்த சட்டம், பாம்பு தந்த சட்டம் என பல சுவாரசியமான செய்திகளைக் கூறி நம்மை வியற்பிக்குள்ளாக்குகிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக, பிறக்கும்போது நடக்கவும் பேசவும் இயலாத ஒருவன், தனது விடாமுயற்சியால் எப்படி ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி, சட்டத்திட்டங்களை வடிவமைத்தான் என்ற செய்தியை அறியும்போது உள்ளுக்குள் ஒரு உத்வேகம் பிறப்பதை உணர முடிகிறது. இப்படியாக உலகெங்கும் சட்டங்கள் பிறந்த வரலாற்றையும், அதற்கான முகவுரைகளின் சாராம்சத்தையும் படிக்க படிக்க நம்மால் புத்தகத்தைவிட்டு நீங்க இயலாது. முழுமையாக தனியார் மயமாக்கப்பட்ட நாடு எது, முழுமையாக அரசுடைமையாக்கப்பட்ட நாடு எது, முழுமையான பொதுவுடைமை நாடு எது, உலக நாடுகளின் அரசியல் சாசன முகவுரைக்கும், இந்திய நாட்டின் அரசியல் சாசன முகவுரைக்கும் எத்தகைய ஒற்றுமை வேற்றுமை உள்ளன, இந்திய அரசியலமைப்பின் உருவாக்கத்தின் போது இந்தியாவை அதுவரை ஆண்டுக்கொண்டிருந்த பிரிட்டீஷாரின் மனநிலை எப்படி இருந்தது, பல்வேறு சாதிகளும் மதங்களும் நிறைந்திருந்த நாட்டில் எப்படி ஒரு வலுவான கட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது, என்ற பல்வேறு அறிய தகவல்களை அடுக்கடுக்காக எடுத்துரைக்கும் நூலின் ஆசிரியரது உழைப்பு போற்றுதற்குரியது.

சமத்துவம், சகோதரத்துவம் போன்ற சொற்களின் ஆழத்தை ஆசிரியர் ஆய்ந்து அறிய முற்பட்ட போது எனக்கு என்னுடைய பள்ளி காலம் நினைவிற்கு வந்தது.

பள்ளிக்கூடத்தில் கொடி ஏற்றிய உடன் 

இந்தியா என் தாய் நாடு

இந்தியர் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள் 

என்ற உறுதி மொழி ஒவ்வொரு நாளும் மாணவ தலைவன் சொல்ல மற்ற மாணவர்கள் சொல்லுவது வழக்கம். அப்படி ஒருநாள் கூடுகை முடிந்த உடன், மாணவ தலைவனை சில மாணவர்கள் சூழ்ந்துக்கொண்டு, இந்தியர் அனைவரும் என்னுடன் பிறந்தவர்கள் என்று சொல்ட்ரியே நீ என்ன பாக்கிஸ்தான் பொண்ண கல்யாணம் பண்ணிக்குவியா? நீ அந்த வரியை சொல்லும்போதெல்லாம் நான் அந்த ஒருத்தியைத் தவிர என்று என் மனசுக்குள்ளேயே சொல்லிக்குவேன் தெரியுமா என்று கேட்டு அவனை ஓட்டியதை மறக்க இயலாது.

சகோதரத்துவத்தை வலுவாக உணர்த்த ஆசிரியரின் தேடலுக்கு அவருடைய தமிழாசிரியர் மூலம் விடைகிடைத்ததை அறியும் போது மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும் ஏற்பட்டது. நமது வள்ளுவரும், அவ்வையும் நமக்கு கற்பித்த அந்த ஒரு ஒப்பற்ற பதத்தை நாம் அறிந்துக்கொண்டால் இந்திய அரசியலமைப்பு சாசன முகவுரையின் முத்தாய்ப்பான கருத்தை உணர்ந்திடலாம்.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள், அதனை தொகுத்த விதம், எடுத்துரைத்திருக்கும் திறன் ஆகியவற்றைப் பார்க்கும்பொழுது ஆசிரியரின் அயராத உழைப்பு, தொடர்ச்சியான வாசிப்பு, தீவிர தேடல், ஆழ்ந்த ஆய்வு என அனைத்தும் புலப்படுகிறது. பல்வேறு அறிய தகவல்களை உள்ளடக்கிய இந்த புத்தகத்தை அனைவரும் தவராமல் வாங்கி வாசித்தால் ஓர் புதிய அனுபவம் கிடைப்பது நிச்சயம்.

நூலினை வாங்க

https://tinyurl.com/Makkalagiya-Naam


நன்றி

சேது பாண்டி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக