தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கை
பேராசிரியர் முனைவர் மு. முருகேசன் அவர்களது கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள் என்ற நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
பார்வையற்றோர் பிறந்தது முதல் இந்த பார்வையுள்ள பொதுச் சமுதாயத்தில் எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது, எத்தனை எத்தனை வலிகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது போன்ற செய்திகளை அனுபவ ஆதாரங்களுடன் பட்டியலிட்டு எடுத்துரைத்துள்ளார் நூலின் ஆசிரியர்.
இந்த நூலினை படிக்கும் பொழுது ஒரு புத்தகத்தை படிக்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் தோன்றவில்லை. மாறாக பார்வையற்ற நண்பர்கள் கூடி அனுபவங்களை பகிர்ந்துக்கொண்ட உணர்வே மேலோங்கியது.
பொதுவாக இந்த சமூகம் பார்வையற்றோரைப் பார்த்து உங்களுக்கென்ன பார்வை இல்லை என்பதால் எல்லாம் எளிதாக கிடைத்துவிடுகிறது என்று கூறுவது வழக்கம். ஆனால், பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு என கல்வி கற்பதற்காக, கல்வி கற்கும் பாட புத்தகங்களை தங்களுக்கேற்ற வடிவில் உருவாக்குவதற்காக, தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, கல்வி தேர்ச்சி பெற்றபின் போட்டித் தேர்வுகளுக்காக, போட்டித் தேர்வுகளுக்கான தரவுகளைப் பெறுவதற்காக, பெற்ற தரவுகளை அனுகல் தன்மையுள்ளதாக மாற்றுவதற்காக, தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக, தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, சரியான பதிலி எழுத்தர் அமர்த்தப்படுவதற்காக, தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர்வதற்காக, சேர்ந்தபின் தங்கள் இருத்தலை உணர்த்துவதற்காக, பணிகளை மேற்கொள்வதற்காக, மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் தங்களை நிருபிப்பதற்காக, பணி நிறைவு பெறுவதற்காக, பயணம், காதல், திருமணம், உறவுமுறை, பிள்ளை வளர்ப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்றல், சமூக ஈடுபாடு என பல நிலைகளில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு, அடக்கப்படுதல், அலட்சியப்படுத்துதல், ஆதிக்கம் செலுத்துதல், இடர்விளைவித்தல், இட்டுக் கூறுதல், உதாசினப்படுத்துதல், உரிமை மறுத்தல், ஊழ்ப்பழி சுமத்துதல், ஊறு விளைவித்தல், எட்டிவைத்தல், ஏளனம் செய்தல், ஒடுக்கப்படுதல், ஒதுக்கப்படுதல், ஒருமையில் விளித்தல், கலகம் கற்பித்தல், புறக்கணித்தல் போன்ற பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை எதிர்கொண்டு அளவில்லா வலிகளையும் வேதனைகளையும் பார்வையற்ற ஒவ்வொருவரும் அனுபவித்து வருவதை இன்நூல் பலருடைய வாழ்வின் வழியே விளக்குகிறது. அதே நேரத்தில் பார்வையற்றோருக்கு இந்த காட்சி சமூகம் எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்துள்ளது என்பதையும் ஆங்காங்கே சுட்டியுள்ள குறிப்புகள் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது.
ஆசிரியர் தங்களது பார்வையற்ற சமூகம் வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை அடைந்துள்ளது என்பதை இந்த பொதுச் சமூகத்தில் தனது நூலினை குற்றப் பத்திரிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.
ஆசிரியர் குற்றம் என்று சுட்டும் ஒவ்வொன்றும் சட்டப்படியும் குற்றமாக கருதப்படுவதை ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2016 அத்தியாயம் 16 பிரிவு 92 உறுதிப்படுத்துகிறது.
92.1. பொதுவெளியில் ஊனமுற்ற நபர்களை எந்த இடத்திலும் வேண்டும் என்றே அவமதித்தல் அல்லது வேண்டும் என்றே அவமானப்படுத்தும் நோக்கத்துடன் மிரட்டுதல்.
92.2. ஊனமுற்ற நபரை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது பலவந்தப் படுத்துதல் அல்லது ஊனமுற்ற பெண்களை மானபங்கப்படுத்துதல்.
92.3. ஊனமுற்ற நபர்களை தங்களின் கீழ் வசப்படுத்தி அல்லது கட்டுப்படுத்தி வேண்டுமென்றே அல்லது தெரிந்தே உணவு அல்லது திரவபொருள் கொடுக்க மறுத்தல்.
92.4. ஊனமுற்ற குழந்தை அல்லது பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை மற்றும் அந்நிலையை பயன்படுத்தி பாலியல் ரீதியாக சுரண்டுதல்.
92.5. ஊனமுற்ற நபரை வேண்டுமென்றே காயப்படுத்துதல் அல்லது கால் அல்லது உணர்வு அல்லது ஆதரவு கருவிகளைச் சேதப்படுத்துதல் அல்லது பயன்பாட்டில் தலையிடுதல்.
போன்ற செயல்பாடுகளுக்கு ஆறு மாதத்திற்கு குறையாத ஆனால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்டத்தின்படி புகார் வழங்கினாலும் இந்த காட்சி சமூகத்தில் நீதி கிடைப்பதற்குள் அவை பல வகையில் திரிக்கப்பட்டு நீர்த்து போய்விடுகிறது.
எனவே இந்த புத்தகத்தை அதாவது இந்த குற்றப் பத்திரிக்கையை படிக்கும் ஒவ்வொரு பார்வையுள்ளவரும் பார்வையற்றவரும் தங்கள் மனதளவில் உணர்ந்தால் மட்டுமே சம உரிமை, சம வாய்ப்பு, முழு பங்கேற்பு சாத்தியமாகும்.
பேராசிரியர் முனைவர் முருகேசன் அவர்களைத் தொடர்புக்கொள்ள
9962445442
நன்றி.
சேதுபாண்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக