நெய்தலில் தொடங்கி முல்லையில் நிறைவடையும் “தளிர்களின் பயணம்” என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு, கடலைப் போல ஆழமாகவும் வனத்தைப் போலப் பரந்து விரிந்த குழந்தைகளின் மனத்தையும் அவர்களது அழகிய வாழ்வியலையும் அழகுபட எடுத்துரைக்கிறது. குடும்பத்தைக் காக்கத் தன் உயிரைப் பொருட்படுத்தாது நாள்தோறும் கடலுக்குள் செல்லும் தன் தந்தையின் நிலையை மாற்றத் துடிக்கும் மகளின் பாசம், தாயை இழந்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் மகனின் மனநிலை, ஆணாகப் பிறந்து தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த குழந்தையின் மனப்போராட்டம், குடிகாரத் தகப்பனை எதிர்கொள்ளும் தளிரின் நிலை, தன் பார்வையற்ற பெற்றோர் தடுமாறிய தருணத்தில் தவித்த பிள்ளை, தூய்மைப் பணியாளரின் மகனாகப் பிறந்து சமூக நீதிக்காகப் போராடத் துடிக்கும் குமரன், கரடியிடம் தன் உயிரைக் காத்துக் கலெக்டரிடம் தன் ஊரைக் காத்துப் பரம்பு நாட்டின் பாரிக்கு நிகராகப் போற்றப்பட்ட பெண் என கதைகளில் வரும் ஒவ்வொரு குழந்தையும் மனதில் நிறைந்து நம்மை நெகிழச் செய்கின்றனர். இயல்பான எளிய நடையில் செல்லக் குழந்தைகளின் செண்டிமெண்ட் முதல் அவர்களைக் கவர்ந்திருக்கும் கம்ப்யூட்டர் வரை உள்ள அத்தனையையும் அழகுபடத் தொகுத்து, அன்பு, பாசம், நேசம், பரிவு, இரக்கம், அறம், வீரம் என அனைத்தையும் கதைகளின் கருப்பொருளில் விதைத்து நம்மை வியக்க வைக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
நூலின் அட்டைப்படம்
கடல் காத்த தளிர் என்ற முதல் கதை தொடங்கி வனத்தளிரின் பெருமூச்சு என்ற இறுதி கதை வரை உள்ள ஒவ்வொரு கதையின் பொருத்தமான தலைப்பும் படிப்போரை ஈர்க்கிறது. சிறுவர் இலக்கியமாக வெளியிடப்பட்டுள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பு, வாழ்வியல் பாடங்களைப் பெரியோருக்கும் கற்பிக்கும் என்பதில் ஐயமில்லை.தனது முதல் படைப்பை அனைவரும் எளிதில் அணுகும் வகையில்
அச்சுப் பதிப்போடு பிரெய்ல் மற்றும் மின்புத்தகமாக வெளியிட்டு ஒரு புதிய புரட்சியை
ஏற்படுத்தியிருக்கும் நூலின் ஆசிரியர் தம்பி கார்த்திக் அவர்களுக்கு மனமார்ந்த
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
எழுத்தாளர் கார்த்திக் அவர்களைத் தொடர்புக்கொள்ள
9884207199
நூலினை அமேசான் கிண்டிலில் வாங்கி படிக்க
அச்சு மற்றும் பிரெயில் வடிவிலான புத்தகங்களைப் பெற
எழுத்தாளரைத் தொடர்புக்கொள்ளவும்.
நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக