வெள்ளி, 26 ஜூன், 2026

செல்லக் குழந்தைகளின் செண்டிமெண்ட் முதல் கவர்ந்தீர்க்கும் கம்ப்யூட்டர் வரை!

 

நெய்தலில் தொடங்கி முல்லையில் நிறைவடையும் “தளிர்களின் பயணம்” என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பு, கடலைப் போல ஆழமாகவும் வனத்தைப் போலப் பரந்து விரிந்த குழந்தைகளின் மனத்தையும் அவர்களது அழகிய வாழ்வியலையும் அழகுபட எடுத்துரைக்கிறது. குடும்பத்தைக் காக்கத் தன் உயிரைப் பொருட்படுத்தாது நாள்தோறும் கடலுக்குள் செல்லும் தன் தந்தையின் நிலையை மாற்றத் துடிக்கும் மகளின் பாசம், தாயை இழந்து வாழ்வில் முன்னேறத் துடிக்கும் மகனின் மனநிலை, ஆணாகப் பிறந்து தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த குழந்தையின் மனப்போராட்டம், குடிகாரத் தகப்பனை எதிர்கொள்ளும் தளிரின் நிலை, தன் பார்வையற்ற பெற்றோர் தடுமாறிய தருணத்தில் தவித்த பிள்ளை, தூய்மைப் பணியாளரின் மகனாகப் பிறந்து சமூக நீதிக்காகப் போராடத் துடிக்கும் குமரன், கரடியிடம் தன் உயிரைக் காத்துக் கலெக்டரிடம் தன் ஊரைக் காத்துப் பரம்பு நாட்டின் பாரிக்கு நிகராகப் போற்றப்பட்ட பெண் என கதைகளில் வரும் ஒவ்வொரு குழந்தையும் மனதில் நிறைந்து நம்மை நெகிழச் செய்கின்றனர். இயல்பான எளிய நடையில் செல்லக் குழந்தைகளின் செண்டிமெண்ட் முதல் அவர்களைக் கவர்ந்திருக்கும் கம்ப்யூட்டர் வரை உள்ள அத்தனையையும் அழகுபடத் தொகுத்து, அன்பு, பாசம், நேசம், பரிவு, இரக்கம், அறம், வீரம் என அனைத்தையும் கதைகளின் கருப்பொருளில் விதைத்து நம்மை வியக்க வைக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

நூலின் அட்டைப்படம்

கடல் காத்த தளிர் என்ற முதல் கதை தொடங்கி வனத்தளிரின் பெருமூச்சு என்ற இறுதி கதை வரை உள்ள ஒவ்வொரு கதையின் பொருத்தமான தலைப்பும் படிப்போரை ஈர்க்கிறது. சிறுவர் இலக்கியமாக வெளியிடப்பட்டுள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பு, வாழ்வியல் பாடங்களைப் பெரியோருக்கும் கற்பிக்கும் என்பதில் ஐயமில்லை.

தனது முதல் படைப்பை அனைவரும் எளிதில் அணுகும் வகையில் அச்சுப் பதிப்போடு பிரெய்ல் மற்றும் மின்புத்தகமாக வெளியிட்டு ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் நூலின் ஆசிரியர் தம்பி கார்த்திக் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

எழுத்தாளர் கார்த்திக் அவர்களைத் தொடர்புக்கொள்ள

9884207199

நூலினை அமேசான் கிண்டிலில் வாங்கி படிக்க

தளிர்களின் பயணம்

அச்சு மற்றும் பிரெயில் வடிவிலான புத்தகங்களைப் பெற எழுத்தாளரைத் தொடர்புக்கொள்ளவும்.

நன்றி.

ஞாயிறு, 14 ஜூன், 2026

வேட்டைக்கருப்பின் சாட்டைச்சுழலுமா?

பராசக்தி படத்திற்கு பிறகு தற்போதுதான் ஒரு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அறநெறிகளைக் கற்காலம் முதல் கற்பித்து வரும் தமிழ்ச் சமூகத்தில், நீதிநெறி கதைகளுக்கு பஞ்சமில்லை. தப்பு செஞ்சா சாமி கண்ண குத்திடும் என்ற சிறுவர்களுக்கான வாக்கியம் முதல், தெய்வம் நின்று கொல்லும் என்ற பெரியோர்களுக்கான சொற்றொடர் வரை காலகாலமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். இப்படி சொல்லப்பட்டு வரும் தொடர்கள் மனிதருக்குள் நெறி பிறழாமல் வாழ்வதற்கான தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது கேள்விக்குறியே.


கருப்பு திரைப்படம் விளம்பரப்படம்


தற்போது திரையரங்குகளைத் தொடர்ந்து அமேசான் பிரைம் தளத்திலும் வெளியாகி அதிலும் குறிப்பாக அமேசான் பிரைமில் பார்வையற்றோருக்கான ஒலி விளக்கத்துடன் (audio description) வெளியாகியுள்ள கருப்பு திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாக உள்ள இன்றைய நீதிமன்றத்தின் நிலையைத் தோலுரித்து காட்டியுள்ளார் இயக்குநர். குற்றத்தை உரிய ஆதாரங்களுடனும் சாட்சிகளுடனும் நிரூபிக்க முயற்சித்தும் அவை அனைத்தையும் பண பலத்தாலும் அதிகாரத்தாலும் தவிடுபொடியாக்கி முறியடிக்கின்றனர். அனைத்து வாய்ப்பையும் இழந்து நிற்கதியான நிலையில் நீதிகேட்டு வேட்டைக் கருப்பிடம் வேண்ட, கருப்பசாமி தெய்வமாகவும், மனிதனாகவும் மாறிமாறி நீதிக்காக போராடுவதாக கதை விறுவிறுப்பாக நகர்கிறது. அந்த காலத்து மாயாஜால கதைகளைப்போல அமைக்கப்பட்ட காட்சிகள் சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும் இப்படிப்பட்ட மாயாஜால சாகச காட்சிகள் இன்றைய குழந்தைகளாலும் இளைஞர்களாலும் பெரிதும் விரும்பப்படுகிறது என்பதை நம்மால் மறுக்க இயலாது.

என் தலையில இவனுங்க மிளகாய் அரைச்சது பத்தாதா நான் வேற அவன் தலையில மிளகாய் அரைக்கணுமா அவனே இங்க நீதிக்கேட்டு வந்தவந்தான் போல என்ற வசனம் சிரிப்பினூடே நம்மைச் சிந்திக்க வைக்கிறது. கருப்பசாமியான சூர்யா வழக்கறிஞரான RJ பாலாஜியிடம் எல்லாத்துக்கும் தெய்வம் வரணும்னா மனுஷங்க நீங்க எதுக்குடா?, நேர்மைங்கிறதும் ஒரு அடிக்ஷன் தான் அதற்கு மனிதன் பழகிட்டா மாத்தவே முடியாது போன்ற வசனங்கள் இடம்பெறும் காட்சிகள் காண்போரை ரசிக்க வைக்கிறது.

இன்றைய நீதிமன்றத்தில் நீதிபெற வேண்டுமானால், மனிதனைவிட பெரும் சக்தி தேவைப்படுகிறது என்ற அவலநிலையின் கசப்பான உண்மையை உணர்த்த கருப்பின் சாட்டையை சுழற்றியுள்ளார் இயக்குநர்.

இந்த திரைப்படத்தைப் பார்க்கும்போது பார்வையற்றோருக்கான அமைப்புகளும், தனிநபர்களும் பணி வாய்ப்பு இட ஒதுக்கீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முறையாக விசாரணைக்கு வராதது, தொடர் முயற்சியின் விளைவாக விசாரணைக்கு வந்தபோதும் பார்வையற்றோர் சார்பான வழக்கறிஞர்களே வழக்கில் ஆஜராகாமல் தட்டிக்கழித்து வந்ததால், நீதிமன்றம் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாத காரணத்தைச் சுட்டிக்காட்டி வழக்கை முடித்து வைத்ததை அறிந்த அந்த வேதனையான தருணம் என் நினைவில் வந்து மனம் கொதித்து கலங்கி பார்வையற்றோருக்கான நீதியைப் பெற இப்படி ஒரு கருப்பு வருமா என்று ஏங்குகிறது.

நன்றி.