அறிவு பசியோடு அலைந்து திரியும்
அனைவருக்கும் அடைக்கலம் தரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கி மூன்று ஆண்டுகள்
நிறைவடைந்துள்ளன. 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள், அறிஞர் அண்ணாவின் 102
ஆவது பிறந்த நாள் அன்று, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களால், அனைவரும்
பயன்படுத்தும் வகையில் இன் நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
ஒன்பது தளங்களைக் கொண்ட இந்த நூலகம், சொந்த
நூல்கள் பயன்படுத்தும் பிரிவு; மெய்ப்புல அறைகூவலர் பிரிவு; நாளிதழ்கள் பிரிவு;
குழந்தைகள் பிரிவு; தமிழ் நூல்கள் பிரிவு, ஆங்கில நூல்கள் பிரிவு என
பகுக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகளில் அனைத்து துறைகள் சார்ந்த புத்தகங்களும் அழகாக
தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நூலகம், உலகின் முக்கிய மின் நூலகங்களோடு
இணைக்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும். கணினி மயமாக்கப்பட்ட இந்த நூலகம் பல
சிறப்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
மெய்ப்புல அறைகூவலர் பிரிவில் இரண்டாயிரத்திற்கும்
மேற்பட்ட பார்வையற்றவர்கள் உறுப்பினராக உள்ளனர். பார்வையற்றோர் பயன்பெறும் வகையில்
பல பிரெயில் புத்தகங்களும், ஒலி புத்தகங்களும், மின் புத்தகங்களும் சேகரித்து
வைக்கப்பட்டுள்ளன. மேலும், பார்வையற்றோர் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பயன்
பெறும் வகையில், brailleacl@googlegroups.com
என்ற மின் மடல் குழுமம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுமத்தில்,
பார்வையற்றோருக்கான செய்திகள் மற்றும் சலுகைகள், தினமணி மற்றும் இந்து நாளிதழ்,
வார மாத இதழ்கள், பார்வையற்றோருக்கான வேலை வாய்ப்பு தகவல்கள், கல்வி தொடர்பான
தகவல்கள் போன்றவை பகிரப்படுகின்றன. மேலும்
பார்வையற்றோர் பலர் இதில் இணைந்து தங்களுக்குரிய அறிவார்ந்த ஐயங்களை பகிர்ந்து
விவாதித்து பயன்பெற்று வருகின்றனர். மேலும், நூலக அலுவலர்கள் மற்றும் இப்பிரிவில்
பணி புரியும் நூலகர்கள், வேலைவாய்ப்பிற்காகவும், மேல்படிப்பிற்காகவும்
நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் பார்வையற்றோருக்காக ஆன்லைனில்
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தருதல், தேர்விற்கான தகவல்களையும் புத்தகங்களையும்
இணையத்திலிருந்து பெற்றுத் தருதல் போன்ற சிறந்த சேவைகளை செய்து வருகின்றனர்.
இந்த நூலகத்தின் காவலர்களும் மற்ற
பணியாளர்களும், பார்வையற்றோர் நூலகத்திற்கு வருவதை பார்த்த உடனேயே விரைந்து வந்து
அழைத்து செல்கின்றனர். இந்த நூலகத்தின்
அனைத்து பிரிவு நூலகர்களுமே பார்வையற்றோருக்கு சிறந்த வாசிப்பாளர்களாகவும் நல்ல
உதவியாளர்களாகவும் இருந்து சேவை செய்து வருகின்றனர். இந்த மெய்ப்புல அறைகூவலர் பிரிவு
இந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் அகேட் இன்ஃபோடெக்
நிறுவனத்தின் இயக்குனர் திரு. சங்கர் ஐயா ஆவார். அவரது பங்கு மிகவும்
குறிப்பிடத்தக்கதாகும். இவர் தானாகவே முன் வந்து பல உதவிகளை செய்து வருகிறார். நானும்
எனது நண்பர் திரு. சுதன் அவர்களும் முதல் முதலில் இந்த நூலகத்திற்கு வந்தபோது,
எங்களை இன் முகத்தோடு வரவேற்று நூலகத்தின் சிறப்பினையும் அங்கு உள்ள வசதிகளையும்
எடுத்துரைத்தவர் இவர்தான். இந்த நேரத்தில் அவருக்கும், அனைத்து நூலகர்களுக்கும்,
நூலக அலுவலகர்களுக்கும், மற்ற பணியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலே நூலகத்தின் பெயரை குறிப்பிடும் போது
அருள் மிகு என்று குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக அறுள்மிகு என்ற சொல் தெய்வங்களை
குறிப்பிடும் போதும், ஆலய பெயர்களை குறிப்பிடும் போதுமே பயன்படுத்தப்படுவது
வழக்கம். ஒரு முறை சொல்வேந்தர் திரு. சுகி. சிவம் ஐயா அவர்கள் அன்பிற்கும்
அருளிற்கும் உள்ள வேறுபாட்டை பின் வருமாறு விளக்கினார். அன்பு என்பது பல நிலைகளில்
வேறுபடும், அது ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டது. ஆனால் அருள் என்பது
அப்படியல்ல. அது ஓர் அறிவு உயிர் முதல் அனைத்தின் மீதும் ஒரே மாதிரியாக கருணை காட்டுவது
என்று கூறினார். அதுபோல எந்த வித வேறுபாடும் இன்றி அறிவு தேடல் உள்ள அனைவருக்கும் பயனளிக்கும்
நூலகத்தை அருள்மிகு என்று சுட்டுவது சரியாக இருக்கும் என்பதாலேயே அருல்மிகு அண்ணா
நூற்றாண்டு நூலகம் என்று குறிப்பிட்டேன். என்னை பொருத்த வரை அறிவு பசியைத்
தீர்க்கும் நூலகமும், இறைவன் குடியிருக்கும் ஆலயமும் ஒன்றே ஆகும். அறிவு பசியை
அல்லது மனதில் உள்ள அழுக்கை நீக்கும் ஒவ்வொரு சிறந்த புத்தகங்களுமே
தெய்வங்களாகும். அதனை நன்றாக பராமரித்து வரும் நூலகர்களே அர்ச்சகர்கள். தினந்தோறும்
ஆலயம் செல்வது போல கூடுமான வரை நூலகம் செல்வோம்.
நன்றி...