ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

உறவுகள் மேம்பட...



உறவுகள் மேம்பட...
நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விடுங்கள்
எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாண்டு (Diplomacy) விட்டுக்கொடுங்கள் (Compromise)
சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (Tolerance)
நான் சொன்னதே சரி செய்ததே சரி என்று (Adamant argument) வாதாடாமல் குறுகிய மனப்பான்மை (Narrow mindness) விட்டொழியுங்கள்
மற்றவர்களை விட நம்மை எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (Superiority complex)
அளவுக்கதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள் (Over expectation)
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்மந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்
கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்
நமது கருத்துக்களில் உடும்புப்பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள் (Flexibility)
மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளை ஒரு போதும் தவறாக புரிந்துக்கொள்ளாதீர்கள் (Misunderstanding)
மற்றவர்களுக்குரிய மரியாதைக் காட்டவும் இனிய இதமான சொற்களை பயன்படுத்த தவறாதீர்கள் (Courtesy)
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லக்கூட நேரம் இல்லாதது போல் நடந்துக்கொள்ளாதீர்கள்
பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்
பிரச்சணைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திராமல் தாமாகவே பேச்சை துவக்க முன் வாருங்கள்
(வேதாத்திரி மகரிஷி)

திங்கள், 1 செப்டம்பர், 2014

வாரம் ஒரு செயல்பாடு! பங்கேற்போம் பயன்பெறுவோம்!



வாரம் ஒரு செயல்பாடு! பங்கேற்போம் பயன்பெறுவோம்!
பெருந்தகையீர் வணக்கம்,
கடந்த ஒன்பது ஆண்டுகளாக பார்வையற்றோருக்காக வாசிப்பகம் நடத்துதல், கணினி பயிலரங்கங்கள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல் என பல செயல்பாடுகளை பார்வையற்றோருக்காக செய்து வரும் பிரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் மற்றும் லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் அமைப்பு தற்போது மாணவர்களது வேண்டுகோளுக்கினங்க வாரம் ஒரு செயல்பாட்டினை நடத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 10.00 முதல் 12.30  வரை வாசிப்பு நேரத்தின் போதே அதில் கலந்துக்கொள்ளாத மாணவர்களுக்காக ஸ்போக்கன் இங்லிஸ், கணினி தொடர்பான கலந்துரையாடல், தமிழ் மன்றம் போன்றவை நடைபெற உள்ளது.
மாதத்தின் ஒன்று மற்றும் மூன்றாவது வாரம் ஸ்போக்கன் இங்லிஸ்காகவும், இரண்டாவது வாரம் கணினி தொடர்பான கலந்துரையாடலுக்காகவும், நான்காவது வாரம் தமிழ் மன்றத்திற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளின் முதல் நிகழ்வாக வரும் ஏழாம் தேதி ஸ்போக்கன் இங்லிஸ் வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வகுப்புகள் அனைத்திலும் துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 9444287463 என்ற எண்ணில் திருமதி. பத்மாவதி ஆனந்த் அம்மா அவர்களை தொடர்புக்கொள்ளவும்.
இந்த மின்னஞ்சல் தொடர்பான மறுமொழிகள் இருப்பின் pandiyaraj18@gmail.com என்ற எனது தனி மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.....

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி பேசுகிறதாமே!



தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி பேசுகிறதாமே!


பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரியில் காலெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு மடிக்கணினி வழங்கி ஊக்கப்படுத்துகிறது. இந்த மடிக்கணினியை பலரும் பல விதங்களில்  பயன்படுத்துகின்றனர். சிலர் அதனை பத்திரமாக பூட்டி வைக்கின்றனர், சிலர் விற்றுவிடுகின்றனர், சிலர் செய்வதறியாது வியந்து நோக்குகின்றனர், சிலர் அதனை முறையாக பயன்படுத்துகின்றனர்.  இதில் பார்வையற்றோருடைய நிலை என்ன என்பதை சற்று சிந்திப்போம். அரசு மடிக்கணினியை வழங்க தொடங்கிய காலம் அது. பள்ளிக் கல்வியை முடிக்கும் நேரத்தில் அனைவருக்கும் எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டது. அப்போது ஒருவர், மடிக்கணினி பெற்ற பார்வையற்ற ஒருவரை பார்த்து, இத போயி உனக்கு கொடுக்குறாங்களே இத வச்சிக்கிட்டு நீ என்ன செய்ய போற? ஏதோ கையில எதையோ கொடுத்த மாதிரில இருக்கு, என்று ஏளனம் செய்து நகைத்ததாக கேள்வியுற்றேன். நாளடைவில் அந்த நகைப்பிற்குரியவர் யார் என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்று நம்புகிறேன். பாருங்கள் சமூகத்தின் பார்வையில் நாம் எப்படி பார்க்கப்படுகிறோம் என்பதை! இந்த நிலை தற்போது குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்று மாலை எங்கள் ஊரில் வசிக்கும் என்னுடைய தங்கை ஒருவருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. அதை ஆன் செய்ததும் பேச தொடங்கிவிட்டதாம். அவர்கள் ஏற்கனவே என்னுடைய மடிக்கணினியை பார்த்திருப்பதால், இது சிறப்பு மென்பொருளான என்.வி.டி.ஏ என்பதை அறிந்து,  என்னுடைய தம்பி தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு அதனை பற்றிக் கேட்டான், நானும் ஏதோ எனக்கு தெரிந்ததை தெரிவித்தேன். இந்த நேரத்தில் ஒரு சிறுக்குறிப்பு, இந்த தம்பியும் தங்கையும் எனக்கு ஏற்படும் கணினி ஐயங்களை அவ்வப்போது தீர்த்து வைப்பவர்கள். இந்த மென்பொருளை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? ஒரு ஆங்கில வார்த்தைக்கு சரியான உச்சரிப்பு தெரியவில்லை என்றால் உடனே அந்த மென்பொருளை இயக்கிவிட்டு, உரிய சொற்களை தட்டச்சு செய்து உச்சரிப்பை அறிந்துக்கொள்கின்றனர். இதனால் நம்முடைய என்.வி.டி.ஏ மென்பொருள் அவர்களுக்கும் பயன்படுகிறது, அதே நேரத்தில் நம்மை பற்றிய ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது எனலாம்.
இந்த என்.வி.டி.ஏ மென்பொருள் அரசு வழங்கும் மடிக்கணினிக்குள் எப்படி வந்தது தெரியுமா நண்பர்களே? அவ்வளவு சுலபமாக வந்துவிடவில்லை! பல முறை பல அதிகாரிகளை சந்தித்து, அவர்களுக்கு இந்த மென்பொருளை பற்றி எடுத்துரைத்து, இந்த  மென்பொருளால் மடிக்கணினிக்கு எவ்வது பாதிப்புமில்லை என்பதை உணர்த்தி, பார்வையற்ற ஒருவரை அதிகாரிகளுக்கு முன் அழைத்து சென்று அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை விளக்கி, பல நிலைகளில் அலைந்து திரிந்து ஒரு வழியாக ஒப்புதல் பெற்று, இன்று அரசு மாணவர்களுக்கு  வழங்கும் அத்தனை மடிக்கணினியிலும் என்.வி.டி.ஏ மென்பொருள் நிறுவி வழங்க   காரணம், தொழில்நுட்பத்தை நம் வாழ்வோடு இணைக்க இரவும் பகலும் உழைத்து வரும் அகேட் இன்ஃபோடெக் இயக்குநர். திருமிகு. எஸ். சங்கர் ஐயா அவர்கள் உள்ளிட்ட பெரியவர்கள் தான் என்பதை மகிழ்ச்சியுடனும்  நன்றியுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்!  அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
எனக்கு இன்னும் இது தொடர்பாக சில ஆசைகள் இருக்கின்றன. பார்வையற்ற ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே கணினி கற்பிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் எந்த சூழலிலும் பிரெயில் மறக்கடிக்கப்படக்கூடாது. நாளடைவில் தேர்வுகளை கணினி மூலமாகவே எதிர்க்கொள்ள வேண்டும். பார்வையற்ற அனைவரிடமும் வெண்கோள் இருப்பது போல, மடிக்கணினி இருக்க வேண்டும். நம்முடைய மூத்த ஆசிரியர் அமல்ராஜ் ஐயா அவர்கள், பிரெயிலும் வெண்கோளும் நமக்கு இரண்டு கண்கள் என்று  அடிக்கடி சொல்வார்கள். தற்போது நமக்கு கணினி ஒரு மூன்றாவது கண் எனலாம். இந்த ஞானக்கண்ணினை அரசே அனைவருக்கும் இலவசமாக வழங்குமானால் பார்வையற்ற அனைவரும் பார்வை பெற்றதற்கு சமம். சமுதாயத்தில் ஒரு புரட்சியே  உருவாகும்! பெரியோர்களும், தன்னார்வளர்களும், பார்வையற்றோருக்கான அமைப்புகளுமே இதற்காக தொடர்ந்து செயல்பட்டு செயல்படுத்த வேண்டும்.
நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அடியேனின் தாழ்மையான வேண்டுகோள். முடிந்த வரை அனைவரும் என்.வி.டி.ஏ மென்பொருளை முழுமையாக பயன்படுத்துங்கள். அதில் உள்ள நிறைகுறைகளை என்.வி.டி.ஏ தளத்திலோ அல்லது திருமிகு. தினகர் ஐயா அவர்களது மின்னஞ்சலுக்கோ எழுதுங்கள். நாம் இப்படி செய்வதன் மூலம் நம்முடைய பயன்பாட்டிற்காக, நம்மவரால், நமக்காக இலவசமாக உருவாக்கப்படும் மென்பொருள் மெம்மேலும் வளர்ச்சியடையும். மேலும், பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கினால் மேலும் சிறப்புறும். நான் இந்த மென்பொருளை இந்த அளவிற்கு வளியுறுத்துகிறேன் என்றால், அதற்கு காரணம் அந்த அளவிற்கு இந்த மென்பொருளால் நான் பயனடைந்துள்ளேன் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 2010 க்கு  முன்பு ஜாஸ் மூலம் கணினியை பயன்படுத்தினேன். அதற்கு பிறகு என்.வி.டி.ஏ மூலம் கணினியை பயன்படுத்தி, அதனை படுத்தியெடுக்கிறேன் என்று சொன்னால் மிகையாகாது!  அந்த அளவிற்கு இந்த மென்பொருள் எனக்கு உறுதுநையாக இருக்கிறது. மேலும், இதில் முழுமையான தமிழ் இடைமுகப்பு வசதி உள்ளது. அதாவது, இந்த மென்பொருள் தொடர்பான அனைத்து செயல்பாட்டையும் தமிழிலேயே பயன்படுத்தலாம். இதில் கூடுதலாக தேவைக்கேற்ப எலக்குவன்ஸ் போன்ற ஒலிப்பான்களையும் இணைத்து பயன்படுத்த இயலும். இதில் இல்லாத சில பயன்பாடுகளை பெற கூட்டுறுப்புகள் கிடைக்கின்றன. அதனை நிறுவி அதற்குரிய பயன்பாட்டை பெற முடியும். எனவே அனைத்து பார்வையற்றோரும் இந்த மென்பொருள் மூலம் கணினியைப் பயன்படுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்.வி.டி.ஏ மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திருமிகு.ஜேம்ஸ் டே மற்றும் திருமிகு. மைக் கரண் அவர்களுக்கும், அதனை மேம்படுத்தும் பணியில் தமிழகத்திலிருந்து முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் திருமிகு. தி.தே. தினகர் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!  மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூவருமே பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் கேள்விப்பட்ட செய்தியை மட்டுமே பகிர்கிறேன், பிழைகள் இருப்பின் மன்னியுங்கள்.
நன்றி.....

ஞாயிறு, 13 ஜூலை, 2014

லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் (LIONS CLUB OF GOLDEN VISION)



லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன்
(LIONS CLUB OF GOLDEN VISION)
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?.
(குறள் 211)
என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மழையைப்போல் கைம்மாறு கருதாமல் உதவுகின்ற ஒரு மாபெரும் அமைப்பு தான் இந்த லயன்ஸ் க்லப் என்று சொன்னால் மிகையாகாது. தற்போது இந்த லயன்ஸ் க்லபில் பார்வை மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு, லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் என்ற  ஒரு க்லப் உருவாக்கப்பட்டுள்ளது.

லயன்ஸ் க்லப்

          1917 ஆம் ஆண்டு மெல்வின் ஜோன்ஸ் என்பவர் ஏழை மக்களுக்கு உதவும் நோக்குடன் இந்த அமைப்பை அமெரிக்காவில் தோற்றுவித்தார். தற்போது இந்த அமைப்பு 1.35 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு, 209 நாடுகளில் தனது சேவையை விரிவுப்படுத்தியுள்ளது. 1956 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள மும்பை நகரில் பண்டோல் என்பவரால் முதன் முதலில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 1957 ஆம் ஆண்டு சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 1925 ஆம் ஆண்டு நடைப்பெற்ற அரிமா சங்க பன்னாட்டு கூட்டத்தில் ஹெலன்கெல்லர்  கலந்துக்கொண்டு உரையாற்றியுள்ளார். அவர் தனது உரையில் “நீங்கள் எத்தனையோ சேவைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட செயல்பட்டு வருகிறீர்கள். இன்று முதல் பார்வைத் திறன் காக்கவும், பார்வையற்றோருடைய முன்னேற்றத்திற்கு உதவவும் வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்று முதல் இவ்வமைப்பு பார்வைத் திறன் காத்தல், பார்வையற்றோருடைய முன்னேற்றத்திற்கு உதவுதல் என்பதை தனது முதல் பணியாக சிறம் மேற்கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சேவையில் தங்களை பெருமளவில் ஈடுபடுத்தி பல பார்வையற்றோருக்கு உதவி வரும் ஒரு கிலை அமைப்பு தான் லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் ஆகும்.

லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ்

          இந்த அமைப்பு சென்னை விள்ளிவாக்கத்தில் இயங்கிவருகிறது. இது ஒரு அனைத்து மகளிர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வமைப்பு ஏழை மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், உடல் நலம்குன்றியவர்களுக்கும் பல வகையில் உதவி வருகின்றது. இந்த அமைப்பு பார்வையற்றோருடைய முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. கல்வி கட்டணம் செலுத்துதல், புத்தகங்கள் அளித்தல், தனிப்பட்ட திறமைகை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்த பயிற்றுவித்தல் போன்ற பல சேவைகளை செய்துள்ளது. கடந்த மே மாதம் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, பிரேரனா ஹெல்ப் லைன் ஃபௌன்டேஷன் என்ற அமைப்புடன் இணைந்து  பார்வையற்றோருக்கான 5 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அளவிற்கு இவ்வமைப்பு பார்வையற்றோருக்காக செயல்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் லயன். திருமதி. பத்மாவதி ஆனந்த் அவர்கள் ஆவார். மேலும் அவர் மூலமாக லயன். திருமதி. ராதாராணி அவர்கள், லயன். திருமதி. வசுமதிவாசன் அவர்கள் உள்ளிட்ட பலரும் பார்வையற்றோருக்காக முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.

லயன். திருமதி. பத்மாவதி ஆனந்த்

          லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் அமைப்பில் தலைவர் முதல் பல பொறுப்புகளை ஏற்று செயல்பட்டவர். வருடம் முழுவதும் அதாவது 365 நாளும், நாளுக்கொன்றாக சேவை புரிந்து 400 திட்டங்களுக்கு மேல் செயல்படுத்தியவர்.  கல்வி பயிலும் பார்வையற்றோருக்கும், பயின்று பணியில் உள்ள பலருக்கும் இவர் வாசிப்பாளராக இருந்து பல சேவைகளை செய்துவருகிறார். இவர் எங்களின் தாய்  என்று நாங்கள் சொன்னதை விட, இவர்கள் எனது தத்து பிள்ளைகள் என்று அனைத்து இடங்களிலும் மகிழ்வுடன் அறிவித்தவர். அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அவ்வண்ணமே நடந்துக்கொள்வார்கள். இவர்கள் வாசிப்பதை கேட்டால் படிக்க விருப்பம் இல்லாதவருக்கும் படிக்கும் ஆர்வம் ஏற்படும். இவர்களது மிகுதியான ஆர்வத்தாலும், விடா முயற்சியாலும் தோன்றியதே லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் அமைப்பு ஆகும்.

லயல்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன்  தோன்றிய வரலாறு

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
Men who learning gain have eyes, men say;
Blockheads' faces pairs of sores display.
(குறள் 393J
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்.  கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.  (கலைஞர் உரை)
          திருமதி. பத்மாவதி ஆனந்த் அம்மா அவர்கள் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு பார்வையற்ற இளைஞர்களைக் கொண்டு லியோ க்லப் ஒன்றை தொடங்க ஆசைப்பட்டார்கள். ஆனால் அது சில காரணங்களால் இயலாமல் போனது. கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13, 14, 15 ஆகிய நாட்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகளால் பார்வையற்றோருக்கான 3 நாள் சிறப்பு கணினி பயிலரங்கம் நடைபெற்றது. அப்பயிலரங்கத்துடைய நிறைவு விழாவிற்கு, இன்றைய லையன்ஸ் க்லப் ஆளுநர் திருமிகு. லயன். வி.எஸ்.பி. சுந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். அன்றைய தினம் அவர் பார்வையற்றோருடைய கல்வி தகுதி, பணி விவரம் ஆகியவற்றை கேல்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியும் வியப்பும்ம் அடைந்தார். பிறகு அந்த விழாவிலேயே பத்மா அம்மா அவர்களிடம் இவர்கள் இவ்வளவு திறமைசாளிகளாக இருக்கின்றார்களே நாம் ஏன் இவர்களைக் கொண்டு ஒரு க்லப் தொடங்கக்கூடாது? என்ற கேள்வியை முன்வைத்தார். அப்போதைக்கு அவர்கள் அவரிடம் சம்மதம் தெரிவித்தனர். பிறகு பார்வையற்ற சில நண்பர்களிடமும், கோல்டன் ரோசஸ் உறுப்பினர்களிடமும் கலந்து ஆலோசித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பல தடைகள் ஏற்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் வெற்றிகரமாக  13.07.2014 அன்று  லயன்ஸ் க்லப் ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில், தாய்ச் சங்கமான லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் ரோசஸ் அரவணைப்பில்,  லயன்ஸ் க்லப் ஆஃப் கோல்டன் விஷன் அமைப்பு  தோற்றுவிக்கப்பட்டது.

கோல்டன் விஷன் அங்கத்தினர்

          பார்வையற்றவர்களைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைப்பில், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், வங்கி பணியாளர்கள், இரயில்வே பணியாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசில் பணி புரியும் இதர பணியாளர்கள் இதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மொத்த உறுப்பினர்கள் 26 பேர் ஆவர். திரு. ர. ராஜா அவர்கள் தலைவராகவும், முனைவர். க. வேலு அவர்கள் முதல் துணை தலைவர்  மற்றும் தாளாளராகவும், திரு. சத்தியசீலன் அவர்கள் இரண்டாவது துணை தலைவராகவும், பேராசிரியர். சாந்தி அவர்கள் செயலாளராகவும், ஆசிரியர். சுரேஷ் அவர்கள் துணை செயலாளராகவும், திரு. பத்மநாபன் அவர்கள் பொருளாளராகவும், ஆசிரியர். சரஸ்வதி அவர்கள் துணை பொருளாளராகவும் பொறுப்பேற்றனர். மேலும், ஆசிரியர். இரா. பாரதிராஜா அவர்கள் உள்ளிட்ட சிலர் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டனர்.

கோல்டன் விஷன் திட்டங்கள்

          இவ்வமைப்பு பொறுப்பேற்ற உடன் பார்வையற்றோருக்கு விழியாக இருக்கும் வெண்கோளினை பத்து மாணவர்களுக்கு வழங்கியது. பிறகு கல்வி பயிலும் ஒரு மாணவருக்கு நண்கொடையாக ரூபாய் 500 வழங்கப்பட்டது. தலைவர் தனது உரையில் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். தென் இந்திய அளவில் பார்வையற்றவர்களுக்காக  கிரிக்கெட், வாலிபால், செஸ் போன்ற போட்டிகளை நடத்த உள்ளதாக அறிவித்தார். சேவைகளை கடமையாகவும், அஞ்சாமல் துணிவுடனும் செயல்படுவோம் என்று உறுதியுடன் கூறினார்.

மேற்கோள்கள்

http://www.lionsclubs.org
13.07.2014 மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற லயன்ஸ் க்லப் கூட்டங்களில் பெறப்பட்ட செய்தி.
மதுரை திட்டம் நூலகத்தின் திருக்குறள் உரை.
இதில் ஏதேனும் பிழை இருப்பின் மன்னியுங்கள்
நன்றி.....