வியாழன், 28 மே, 2020

ஐயையோ நான் குருடாயிட்டேன்!


நா இப்ப படிச்சி முடிச்ச புத்தகத்தைப் பத்தி எல்லாருக்கிட்டையும் சொல்லிடனும்னு மனசு துடிச்சிது. அதுனாலதான் இதை எழுதுறேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி வீரயுக நாயகன் வேள்பாரி என்ற நாவலைப் படிச்சிட்டிருந்தேன். இல்ல இல்ல அந்த நாவலில் மூழ்கிட்டிருந்தேனுனுதான் சொல்லனும். அந்த நேரத்துலதான் பேராசிரியர் முனைவர் சிவராமன் ஐயா தொலைப் பேசியில அழைச்சாரு. சொல்லுங்க சார் எப்படி இருக்கிங்கனு கேட்டுட்டு உடனே வேள்பாரி நூல் பத்தி மகிழ்ச்சியோட சொல்ல தொடங்கிட்டேன். நானும் அந்த நாவல் பத்தி கேள்விப்பட்டேன் இப்ப படிச்சிக்கிட்டிருக்கிறத முடிச்சிட்டு அத படிக்கனும்னு சொன்னார். சரி சார், நீங்க இப்ப என்ன புத்தகம் படிக்கிறிங்கனு கேட்டேன். நா இப்ப ப்லைன்ட்நஸ் என்ற ஆங்கில நாவலைப்படிச்சு முடிச்சிட்டு அதே ஆசிரியர் எழுதிய சீயிங் என்ற நாவலைப்  படிச்சிக்கிட்டிருக்கேன்.  போர்த்துக்கீசியத்துல இருந்து மொழிப்பெயர்க்கப்பட்டது. இந்த ரெண்டு நாவலும்  ரொம்ப சுவாரசியமா இருக்குப்பா. அப்படியா சார், ப்லைன்ட்நஸ் நாவல்னா அது பார்வைத்தெரியாதவங்கள பத்தி பேசுதா சார்? அட ஆமாம்பா இந்த நாவல் தொடக்கத்துல கார் ஓட்டிக்கிட்டு வந்த ஒருத்தன் சிக்னல்ல நிக்கும்போது கண்ணுத் தெரியாம போயிட்றான். அவனுக்கு உதவ ஒருவன் வந்து அவன அவன் வீட்டுல கொண்டுபோய் விட்டுட்டு, திரும்பும்போது அவன் கார ஆட்டயப் போட்டுட்டு போறான். அவனுக்கும் கண்ணு தெரியாம போயிடுது. முதல்ல கண்ணுத் தெரியாம போனவ டாக்டர்கிட்ட போறான். தொடர்ச்சியா டாக்டருக்கும் கண்ணுத் தெரியாம போயிடுது. ஐயையோ! என்ன சார் இது அப்ப மொத்தமா எல்லாருக்கும் கண்ணுத் தெரியாம போயிடுமா சார். அப்படித்தான் கத போகுது. இந்த கத இப்ப கொரோனா சூழலுக்கு பொருத்தமான கதையா இருக்கு. நிச்சயமா நாம இத சிந்திக்கனும். அந்தகக்கவிப் பேரவையில நா இந்த நூல அறிமுகப்படுத்துறேன் எல்லாருக்கும் இது தெரியனும். நிச்சயமா சார். இந்த கூட்டம் முடிஞ்சிடட்டும் அடுத்தக் கூட்டத்துல நீங்க இந்த புத்தகத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தனும்னு கேட்டுக்கிட்டேன். சரிப்பா நிச்சயமாக பண்ணிடலாம்.
அவர்க்கிட்ட பேசி முடிச்ச சில நாட்களுல விரல்மொழியர் மின்னிதழின் வாட்ஸப் குழுமத்துல பாரதி புத்தகாலயம் வெளியிட்ட பார்வை தொலைத்தவர்கள் என்ற புத்தகம் குறித்த செய்திய யாரோ பதிவிட்டிருந்தாங்க. அடடா ப்லைன்ட்நஸ் புத்தகம் பார்வை தொலைத்தவர்கள் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகம் இருக்குனு அறிஞ்சதும் மனசு நிஜமாகவே மகிழ்ச்சியா இருந்துச்சு. அந்த புத்தகத்த ஒரு நண்பர்க்கிட்ட கேட்டேன் அவரும் உடனே குடுத்தார். படிக்க ஆரம்பிச்சேன்.
பார்வை தொலைத்தவர்கள் யோசே சரமாகோ என்ற போர்த்துகீசிய நாவலை ப்லைன்ட்நஸ் என்ற ஆங்கில மொழிப்பெயர்ப்பில் இருந்து சங்கரநாராயணன் என்பவர் தமிழில மொழிப்பெயர்த்திருக்காறுனு தெரிஞ்சிக்க முடிஞ்சுது. அதுமட்டுமில்லாம 1998ஆவது வருஷம் இதுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் குடுத்துருக்காங்கனு தெரிஞ்சிது. கதைய சிவராமன் சார் ஏற்கனவே ஓரளவு சொல்லி இருந்ததால நா சில எதிர்பார்ப்போடு கதைய படிக்க ஆரம்பிச்சேன். ஆனா நா யூகிச்சமாரி அந்த கத போகல. பலவித சூச்சுமங்கள அது சொல்லி போனுச்சு. குருடு என்ற தொத்து நோய் பரவத்தொடங்குது. அது மிகத்தீவிரமா பரவுது. நோய் குறித்து தொடக்க நிலயிலயே அறிந்த அரசு குருடான நோயாலிகளைத் தனிமைப்படுத்த திட்டமிடுது. தீவிர ஆலோசனைக்கு அப்பரம் தனிமைப்படுத்த நீண்டநாள் பயன்பாட்டுல இல்லாத ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிய தேர்ந்தெடுத்து அதுல நோயாலிகள தனிமைப்படுத்துது. நோய் தொத்து இருக்கும்னு கண்டறியப்பட்ட அறிகுறிக்காரங்களையும் அங்கயே வேர வார்டுல தனிமைப்படுத்துது. குருடானவங்க கண்களுக்கு எல்லாமே ஒரு வெண்மைப் படலமா தெரியுது. அதுனால அந்த நோயிக்கு வெண்மை நோயினு பெயரிடப்படுது. தனிமைப் படுத்தப்பட்ட பைத்தியக்கார ஆஸ்பத்திரி பாதுகாப்புக்கு ராணுவத்த நியமிக்கிது. ஆஸ்பத்திரிக்குள்ள இருந்து யாராவது வெளிய வந்தா சுட்டுப்போட உத்தரவு கொடுக்கப்படுது. உணவு கொடுக்க உத்தரவு கொடுக்கப்படுது. நாளடைவுள உணவு போதுமான அளவு இல்ல. குறிப்பிட்ட நாளுக்கு அப்புரம் உணவு வருவதே நின்னுப்போயிடுது. உள்ள பயன்படுத்தி குப்பையான பொருள்கள உள்ளயே கொளுத்திடனும்னு உத்தரவு கொடுக்கப்படுது. யாராவது செத்துப்போனா உள்ளயே புதைச்சிடனும்னு சொல்லப்படுது. இந்த உத்தரவுகளெல்லாம் ஒவ்வொரு நாளும் நினைவூட்டப்படுது. இதெல்லாம் வெண்மை நோயால பாதிக்கப்பட்டு திடீரென குருடான கூட்டம் செய்ய வேண்டியிருக்குங்குறத நினச்சிக்கூட பாக்க முடியாது.
அந்த ஆஸ்பத்திரி நீண்டநாலா பயன்படுத்தப்படாததுநாள எந்த அடிப்படை வசதியும் சரியா இல்ல. உள்ள வந்து யாரும் சரிசெய்து தரவும் வாய்ப்பு இல்ல. இப்படியாக கதை நகருது. தனிமைப் படுத்தப்படும் குருடான நோயாளிகளோட எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகுது. ஆஸ்பத்திரியே போதும்போதுனு அலருர அளவுக்கு நோயாளிகள் வந்து சேந்தாங்க. அந்த ஆஸ்பத்திரி குருடான மனிதர்களைவிட மனித கழிவுகளாலையும், துர்நாற்றத்தாலையும் நிறஞ்சி இருந்துதுனு சொல்லலாம். இந்த கதையோட இறுதியில நாட்டிலுள்ள எள்ளாருக்கும் கண் தெரியாம போயிடும். இறுதி அத்யாயங்களுல இந்த நோய் தானாக சரியாகி கண் தெரிஞ்சிடும். நாடே குருடான நிலையில நோய் தொற்றால பாதிக்கப்பட்ட ஒரு கண் டாக்டரின் மனைவி மட்டும் குருடாக மாட்டாங்க.
வெண்மை நோயால தாக்கப்பட்டு புதிதாக குருடான குருட்டுக் கூட்டம் எப்படி வாழ்க்கைய எதிர்கொள்ளுது, குருட்டுக்கூட்டத்தில் தோன்றிய திருட்டுக்குருட்டுக் கூட்டத்திலிருந்து தங்கள காத்துக்க எப்படி போராடுது, உணவுக்காக, நீருக்காக எப்படியெல்லாம் அலஞ்சு திரிய வேண்டியிருக்கு உள்ளிட்ட நிறைய பிரச்சனைகளை கதை சொல்லி போகுது. குருடனே குருடனுக்கு ஆப்பு வைக்கிறான், குருட்டு கம்னாட்டி கம்யுனிட்டி என்ற தொடர்களை கதைக்கு இடையில பாக்கும்போது எனக்கு கொஞ்சம் மனசு வலிக்கதான் செஞ்சுது. சில சூழ்நிலைகள் ரசிக்கத்தக்கதாகவும் இருந்துச்சு. இந்த நாவலுல பல இடங்கள படிக்கும்போது மனசுக்குள்ள ஏதோ கடபாறைய வச்சு இடிக்கிறாமாதிரி வலி ஏற்பட்டுச்சு. நா முன்னாடியே படிச்சிருந்த வீரயுக நாயகன் வேள்பாரியும், இப்போது படிச்சு முடிச்சிருக்குற பார்வை தொலைத்தவர்கள் என்ற இந்த நாவலும் ஏதோ ஒரு கோட்டில் பயணித்து ஏறக்குறைய ஒத்துப்போகுறமாதிரி ஒரு கொள்கைய வலியுறுத்துவதாக உணருறேன். எல்லோரும் இந்த நூலை அவசியம் படிக்கனும்னு கேட்டுக்குறேன். இதுல ஏதாச்சும் பிழை இருந்துச்சுனா பொருத்துக்குங்க. படிச்சத பகிர்ந்துக்கனும்னு தோனுச்சு அதுனால உடனே எழுதிட்டேன்.
யோசே சரமாகோ எழுதிய ப்லைன்ட்நஸ் உள்ளிட்ட நான்கு நாவல்களைப் படித்து முடித்துள்ள பேராசிரியர் சிவராமன் சார் 27 மே 2020 அன்று புதிய பனுவல் ஆய்வு வட்டம் ஜூம் அரங்கில் அது குறித்து கட்டுரைப் படிக்கிறார். கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடுவோம்.
நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக