வீரயுக நாயகன் வேள்பாரி
கொரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து செல்பேசி, கணினி என பொழுதுகள் கழிந்தன.
வாசிப்பு மிக பிடித்திருந்தாலும் எதை வாசிப்பது, நாவல்களை வாசித்தால் முழுமையாக
வாசித்து முடித்துவிட முடியுமா என்ற கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஏறக்குறைய
பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பு வாசிப்பை நேசித்து எப்பொழுதும் ஏதேனும் ஒரு
புத்தகத்தைப் படித்து அதன் சுவையை நண்பர்களுக்கு எடுத்து சொல்லும் நண்பர் தமிழ்
பட்டதாரி ஆசிரியர் ராமன் அவர்களோடு செல்பேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது வேள்பாரி
குறித்தும், கடந்த இரண்டு ஆண்டுகளில் புத்தகக்காட்சியில் அதன் விற்பணைக்
குறித்தும், இலக்கிய ஆர்வலர்கள், தமிழ்
ஆய்வாளர்கள், பேச்சாளர்கள், பல்துறை அறிஞர் பெருமக்கள் என அனைவரும் இன்நூலின்
பெருமையை வியந்து புகழ்ந்து வரும் விதம் போன்றவற்றை மிகுந்த ஆர்வத்துடன் எடுத்துரைத்தார்.
இப்படிப்பட்ட நூலினை நான் கேள்விப்பட்டேனா அல்லது கேட்டிருந்தும் கடந்து சென்றேனா
என்று தெரியவில்லை. உடனே அந்த நூலினை அவரிடமிருந்து வாங்கினேன். படிக்க தொடங்கிய
உடனேயே வரிகள் அதற்குள்ளே பயணிக்க இழுத்து சென்றது. படிக்க படிக்க அதிசயம்
ஆச்சரியம் என்று உள்ளத்தின் வார்த்தைகள் மேல் எழுந்தது. காலை, மாலை, இரவு என
வாசிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது. உணவு உண்ணும் பொழுதுகள் கூட கனவு போல் கடந்து
சென்றது. கனவிலும் வேள்பாரி நினைவென மலர்ந்தது. வாசித்த வரிகளும் வார்த்தைகளும்
உயிர்பெற்று பல பொருள்கள் தந்து சென்றன. சற்றே அசந்தால் தொடர் பிடிபடவில்லை.
பொருளறிய மீண்டும் பின்னோக்கி வரிகளுக்குள் வா என்று அழைத்தன தொடர்கள். படித்தேன்,
திகைத்தேன், சிரித்தேன், அழுதேன், வியந்தேன், நிறைந்தேன் மலைத்தேன், குடித்தேன்
திகட்டவில்லை. அப்பப்பா! வீரயுக நாயகன் வேள்பாரியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
பாரி என்பவனை வள்ளலாகவும், கபிலரின் நண்பனாகவும் மட்டுமே அறிந்த தமிழ்ச்
சமூகத்திற்கு பல்துறை வித்தகனாக படம்பிடித்துக் காட்டுகிறார் நூலின் ஆசிரியர்.
பரம்புநாடும் பச்சைமலையும் அதனைச் சுற்றியுள்ள குன்றுகளும், ஊர்களும் இயற்கை
வளங்களும் பல செய்தியைச் சொல்லி செல்கின்றன. அறிவுகளைப் பகுத்த தொல்காப்பியர்
பச்சைமலைத் தொடரைத் தொடர்ந்து ஆய்ந்து இயற்றியதுவோ ஒற்றறிவதுவே என்று
எண்ணத்தோன்றுகிறது. சங்க இலக்கியத்தின் சாறு பிழிந்து பருக பணித்திருக்கிறார் படைப்பாளர். கதையின் தொடக்கத்தில் இருந்து பாரி வருவான்
என்று சொல்லி அழைத்து செல்லும் ஆசிரியர் பாரியின் வரவிற்கு பிறகு பரம்பின் குரல்
ஒலிக்கும் என்று சொல்லி முன்னோக்கி அழைத்து செல்கிறார். கதைகளில் வரும் நத்தை
உள்ளிட்ட பூச்சிகள், பாம்பு வகைகள், ஆட்கொல்லி மரம், மங்கையர் மணம் முகர்ந்து
மலரும் மரம் உள்ளிட்ட மரங்கள், இராவெரிச்செடி,
காக்கா விரிச்சி போன்ற பறவைகள், விருந்தாகும் அறுவதாங்கோழி உள்ளிட்ட உயிரிணங்கள், தேவ
வாக்கு சொல்லும் விலங்கு உள்ளிட்ட விலங்குகள், திரையர்கள், காடர்கள் உள்ளிட்ட
வலிமை மிக்க மணிதர்கள், மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட போர்வை, மூலிகைகளைக்
கொண்டு வடிவமைக்கப்பட்ட வீரர்களுக்கான கவசங்கள், பூச்சிகளையும், யானைகளையும்,
காற்றையும் காற்றியையும் போருக்கு பயன்படுத்திய விதம், எரியும் பச்சைச் செடி,
அடைமழையிலும் அனையாத தீப்பந்தங்கள், பழையன், வாரிக்கையன், தேக்கன் போன்ற வயது
மூத்தவர்களின் செயல்பாடுகள், வானை மிஞ்சும் அறிவைக் கொண்ட பேராசான் திசைவேலர்,
பெரும்புலவர் கபிலர், முருகன் வள்ளி காதல், ஆதினி, மயிலா, அங்கவை, பொற்சுவை போன்ற
பெண்களின் அறிவுக்கூர்மை, நீலன், இறவாதான் உள்ளிட்ட வீரர்களின் துடிப்பு, தளபதிகளின்
தந்திரம், அமைச்சர்களின் செருக்கு, மூவேந்தர்களின் சூழ்ச்சி, பாரியின் மாட்சி என
அத்தனையும் வியக்க வைக்கிறது. இந்த நூலினைப் படிக்கும் போது கதைகளினூடே வந்த
இறைவழிபாடு சித்திரைத் திருநாளில் எங்கள் குலதெய்வ வழிபாட்டை நினைவுப் படுத்தி
சென்றது. ஈடு இணை இல்லா இந்நூல் அனைவராலும் படிக்கப்பட வேண்டிய இயற்கையின்
இரகசியம்.
இதனை எழுதிய சு.வெங்கடேசன் ஐயா அவர்கள் பல மணி நேர தூக்கத்தைத் துரந்து,
நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்து, ஆயிரக்கணக்கான நாட்களைக் கடந்து
உழைத்திருப்பது நூலில் புலனாகிறது. கண் பார்வையற்றோர் வாசிக்க உதவும் மென்பொருள்
துணைக்கொண்டு பார்வையற்ற நான் மனதில் பல காட்சிகளை உருவகப்படுத்தி வாசிக்க ஏதுவாக
இருந்தது எழுத்தாளரின் வரிகள். ஓவியர் ம.செ அவர்களின் ஓவியம் கதைகளின் நகர்வை
எத்தனைச் சிறப்பாக காட்சிப் படுத்தியிருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.
நூலினைப் படித்துக் கொண்டிருக்கும்போது செல்பேசி மூலமாக பேசிய முருகேசன்
ஐயா அவர்கள் படியுங்கள் உங்களுக்கு மெய்சிலிர்ப்புகளும், வியப்புகளும்
காத்திருக்கிறது என்று மேலும் ஆர்வத்தைத் தூண்டினார். தமிழ் முனைவர் பட்ட
ஆய்வாளர்கள் தம்பி தங்கை லட்சுமிநாராயணன் வத்சலா நாங்கள் படிக்க தொடங்கிவிட்டோம்
மிக அருமையாக இருக்கிறது நீங்கள் படியுங்கள் என்று மேலும் ஆர்வத்தைத் தூண்டினர்.
அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன். இந்த நூலினை வாசிக்க
வழங்கிய ராமன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியோடு
தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைவரும் விரைந்து படியுங்கள் பல விந்தைகளை உணருங்கள்.
நன்றி.
நான் படித்து முடித்துவிட்டேன் மிக்க நன்றி உங்களது பகிர்வுக்கு
பதிலளிநீக்கு