வியாழன், 28 மே, 2020

சுலுந்தி


வர சித்திரமாசம் அம்மாவாச அந்னைக்கு மாடனுக்கும் வங்காரனுக்கும் கன்னிவாடி அரண்மன எல்லையில மல்யுத்தம் நடக்கப்போகுதுனு கிணிங்கிட்டி அடிச்சு அறிவிக்கப்படுது. அத கேட்ட ஒருத்தன் என்னப்பா கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்லேனு கேட்குறான். அவனும் சரி சொல்லுறேனு கிணிங்கிட்டிய நிறுத்திட்டு, நம்ம கன்னிவாடி அரண்மன நாவிதன் ராமன். அவன் செத்து ரொம்ப வருஷமாச்சு. அவனோட மகன்தா இந்த மாடன். இவன் யாருக்கும் செரைக்க மாட்டானாம். கத்திய முகத்துக்கு நேரா செரச்சாமாதிரி காட்டிட்டு கூலிய கேக்குறானாம். என்கூட யார வேணும்னாலும் மோத வரச்சொல்லுங்க. நா அவங்கக்கிட்ட தோத்தா செரைக்கிற வேலைய நா செய்வேன் இல்லனா தோத்தவங்க செரைக்கிற தொழில செய்யனும்னு அரண்மனையார் முன்னாடியே சவால்விட்டிருக்கான். இப்படியாக சுலுந்தி கதைத் தொடங்குது. இந்த மாடன் எதுக்காக இப்படி சவால்விடுறான், இறுதியில மல்யுத்தத்துல ஜெயிக்கப்போவது யாரு, நடந்தது என்ன ங்குறத  சொல்லி கதை முடியுது.
இந்த நாவலுக்கு பெயராக அமைந்திருக்குற சுலுந்திங்குற சொல் நாவலோட முக்கியத்துவத்த சொல்லக்கூடியதா இருக்கு. சுலுந்திங்குற குச்சில தீய கொளுத்துனா அனையாம நின்னு எரியும். அதுனால அந்த காலத்துல அடுப்பு கொளுத்துரதுல இருந்து கொல்லி வக்கிற வரைக்கும் இத பயன்படுத்தி வந்திருக்காங்க. அதுமட்டுமில்லாம நிலத்துல பள்ளமெடுப்பதுல இருந்து போராயுதம்குற வர எல்லா நிலையிலும் இந்த சுலுந்தி குச்சிய பயன்படுத்தி இருக்காங்க. இந்த குச்சிய போலவே அந்த காலத்துல நாவிதர்கள் பல நிலையில பல்வேறு காரணங்களுக்காக பல வகையில பயன்படுத்தப்பட்டிருக்காங்கங்குறது இந்த நாவல் மூலமா தெரிய வருது. நாவிதர்கள் சவரம் செய்வதற்கு மட்டுமில்லாம, பண்டுவம் பார்ப்பது முதல் அரண்மனைக்கு எதிரானவங்கள பழித்தீர்ப்பது வரைனு எல்லா நிலையிலும் பயன்படுத்தப்பட்டிருக்காங்க.
இந்த நாவலுல மாடனோட அப்பா ராமன் அரண்மன நாவிதனா இருக்கான். அவன் மிகப்பெரிய பண்டுவனா இருந்தான். அவன் குதிரை ஏற்றம், மல்யுத்தம், வேட்டையாடுதல், சமயல் என பல்துறை வித்தகனாக இருக்கான். இப்படி பல வித்தைகள கத்துருக்க ராமன் எப்படி நடத்தப்படுறாங்குறத ஆசிரியர் தெளிவா எடுத்துரச்சிருக்காறு. சித்தர வணங்கி பண்டுவம் கத்துக்கிட்ட ராமன் பேயுமில்ல பூதமுமில்லங்குற கருத்த சொல்லுறதா பதிவு செஞ்சி மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வச்சிருக்காறு. இந்த நாவலுல வரலாற்று செய்திகளுக்கும், மருத்துவ குறிப்புகளுக்கும், சொலவடைகளுக்கும் பஞ்சமே இல்ல. எல்லா நாவலபோல போகுற போக்குல படிச்சிட முடியாது. நா படிக்க தொடங்கும்போது ரொம்ப சுனக்கமா இருந்துச்சு. படிக்க படிக்க ஆசிரியரோட நடை, கதையோட ஓட்டம், செய்திகள் என எல்லாத்தயும் உள்வாங்க வாசிப்பு சூடுப்பிடிச்சுது. அதுநாள இத யாரும் ஒரு பொழுது போக்கு நாவலா நினச்சிட வேண்டாம். பல்துறை செய்திகள் இதுல கொட்டிக்கிடக்கு. நிச்சயமா ஆசிரியர் இதுக்காக பல ஆண்டுகள் உழச்சிருக்கனும். இத ஒரு சித்த மருத்துவ நூலுனு சொன்னா மிகையாகாது. இறுதியா இந்த நாவலுல இருந்து ஒரு விஷயத்த சொல்லி முடிச்சுடுறேன்.
பண்டுவனான நாவிதன் ராமன் தன்னோட வீட்டுல நெருப்புமூட்டி மருந்து தயாரிக்கிறான். திடீருனு மருந்துப் பொருட்கள் கவிழ்ந்து விழுந்து கலந்து நெடியேறி தீப்பிடிச்சுடுது. இதுல அரண்மனை நாவிதன் ராமன் இறந்துடுறான். ராமனோட மனைவியும் அரண்மனை மருத்துவச்சியுமான வல்லத்தாரைக்கு கண் தெரியாம போயிடுது.
·         கண் தெரியாத வல்லத்தாரை நிதானத்துலயே சமயல் செய்யுறா.
·         மன உளைச்சலால செய்வதறியாது யாசகம் கேட்டு வயித்த கழுவிக்கிறா.
·         மாடனுக்கும் வங்காரனுக்கும் மல்யுத்தம்னு கேள்விப்பட்டு சனங்க  போகுற திசை நோக்கி குரல் கேட்டு ஓடி விழுந்து எழுந்து முட்டி மோதி இடத்த அடையுறா.
·         மல்யுத்த இறுதியில செத்தான் மாடன் என்ற சனங்களோட குரல் கேட்டு கதறி அழுது சத்தமில்லாம கிடக்குற மகன தேடி அலையுறா. அப்ப மாடன்கிட்ட வளர்ந்த நாயி அவளோட சேலைய கவ்வி இழுத்துக்கிட்டுபோயி மாடன் கிட்ட விடுது.
·         கண் தெரியாத வல்லத்தாரை வழிகாட்டுதல் இல்லாம தன்னந்தனியா பழக்கத்துனால பாக்குறவங்க திகைத்து போறமாரி வேகவேகமா அரண்மனைய நோக்கி விரைந்து நடந்து போறா.
இப்படி கண் தெரியாத வல்லத்தாரய நாவலுல படைச்சிருக்க ஆசிரியருக்கு பாராட்டுக்கள். கண் தெரியல நாளும் புத்தியும் உணர்ச்சியும் மத்தவங்கள போலத்தானு பதிவு செஞ்சிருக்காறு. கண் தெரியலனாலும் சமைக்க முடியும். பார்வையற்றவங்க அடி எண்ணி நடப்பதா பலரும் நினைச்சிருக்குற நேரத்துல அவங்க பழக்கத்தால இயல்பாகத்தான் நடக்குறாங்கங்குறது பதிவு செய்யப்பட்டிருக்கு. வல்லத்தாரய நாய் கூட்டிக்கிட்டு போய் விடுதுங்குற சூழல் மேலை நாட்டுல பார்வையற்றோருக்கு வழிகாட்ட நாய்கள் பயன்படுத்தப்படுவத நினைவூட்டுது.
இப்படியாக பலதரப்பட்ட சிந்தனைகளையும், தரவுகளையும் தன்னகத்தே வைத்துள்ள சுலுந்தி ஒரு நாவலல்ல. இது ஒரு ஆய்வு புத்தகம். இத்தகய புத்தகத்தை படைத்து பல அறிய தகவல்களைச் சமுதாயத்திற்கு அறியத்தந்த ஆசிரியர் முத்துநாகு ஐயா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக