வியாழன், 16 ஜனவரி, 2025

சூரியனை போலீஸ் மாமா எப்பம்மா கண்டுபிடிப்பாரு?

சூரியனை போலீஸ் மாமா எப்பம்மா கண்டுபிடிப்பாரு?

இந்த புத்தகத் திருவிழாவில் பேராசிரியர் சரவணன் அவர்களுடைய எங்கே எனது ஒளி என்ற சிறுகதை தொகுப்பினை வானவில் புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இவருடைய சிறுகதை ஒன்றை பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் ஆண்டு மலரில் படித்து வியந்து மகிழ்ந்திருக்கிறேன். எனவே, இவருடைய சிறுகதை புத்தகத்தை உடனே படித்துவிட வேண்டும் என்ற ஆவலில் வாங்கி படிக்க தொடங்கினேன். ஒரு பார்வையற்றவன் தடையின்றி பயணிக்க ஒரு வழிகாட்டிக் கோல் எப்படி உதவுமோ அப்படி இவருடைய எழுத்து நடை என்னை உத்வேகத்துடன் இந்த புத்தகத்தில் பயணிக்க செய்தது.

இந்த சமுதாயத்தால் பலவகையில் புறக்கணிக்கப்படும் ஒரு பார்வையற்றவனை அந்த நாளில் அவனுக்கு நடந்த ஒரு நிகழ்வு அதிகப்படியாக பாதித்திருந்தது.. இந்த நிலையில் கோயிலுக்கு செல்ல நினைத்த அவன் பல தடைகளைக் கடந்து கோயிலுக்குள் செல்கிறான். அங்கிருந்த ஒருவர் அறிவுறுத்தியபடி, ஒரு கையில் கயிறையும், மறு கையில் வழிகாட்டிக் கோலையும் பிடித்தவனாய் தீபாராதனையை ஏற்றுக்கொண்டிருந்த காமாட்சியை வணங்கினான். அதன் பிறகு என்ன நடந்தது, அவன் கோயிலுக்கு வருவதற்கு முன்பு அந்த நாளில் அவனுக்கு என்ன நடந்தது என்பதை நான் சொல்வதைக் காட்டிலும் கதையைப் படிக்கும்போது உங்களால் உணர்வுப்பூர்வமாக உணர முடியும்.  காமாட்சி அம்மன் கோயிலில் கறுகிய நிலையில் பிணமாக கிடந்த உடலை அப்புறப்படுத்த உதவிக் கேட்ட பணியாலரைக் கண்டுக் கொள்ளாமல் அனைவரும் அருகில் செல்ல அஞ்சி அறுவருப்புடன் நின்றுகொண்டிருந்த நேரத்தில், தனது வழிகாட்டிக் கோலை மடித்து வைத்துக் கொண்டு அந்த உடலை அந்த பணியாலருடன் தன் கைகளால் தூக்கிக் கொண்டு போனதன் மூலம் முதல் கதையிலேயே தனது சவுக்கைச் சுழற்றியிருக்கிறார் ஆசிரியர்.

மார்ச் மாதம் பேய்களின் மாதம் நீங்க எல்லோரும் ஜெபம் செய்தால் பேயிடம் இருந்து கர்த்தர் நம்மை காப்பாற்றுவார் என்று மூட நம்பிக்கையை விதைக்கும் ஆசிரியர், அதனைக் கேட்டு பேயின் அச்சத்தில் இருக்கும் தங்கராசுவிற்கு, அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துரைக்கும் கருணாநிதி, கருணாநிதியின் பேச்சை ஏற்காத தங்கராசுவிடம் பேய் ஆடிய ஆட்டம் என அடுத்த கதை படித்த போது நானும் கொஞ்சம் ஆடித்தான் போனேன்.

ஸ்டிக்கை பயன்படுத்த வெட்கப்படும் பார்வையற்ற பேராசிரியர் அரசு பேருந்தில் ஒரு பெண்ணிடம் வாங்கிய அறையின் மூலம் பார்வையற்றவருக்கு ஸ்டிக் எந்த அளவிற்கு அவசியம் என்பதையும், ஸ்டிக்கை தன் கண்களாக போற்றும் ஒரு பார்வையற்றவர் அதனைப் பயன்படுத்தும் போது ஒரு அரசன் குதிரையின் மீது அமர்ந்தபடி அதன் கடிவாளத்தைப் பிடித்தபடி பயணம் செய்யும்போது அந்த அரசனுக்கு எப்படியான உணர்வு ஏற்படுமோ அந்த ஒரு உணர்வும் பெருமிதமும் ஏற்படுவதாக கூறுவதன் மூலம் பார்வையற்றோரின் தற்சார்பும் சுயமறியாதையும் காக்கப்பட வெண்கோல் எந்த அளவிற்கு அவசியம் என்று உணர்த்தியிருப்பதை படித்து மகிழ்ந்தேன்.

பிள்ளை இல்லாத தம்பதியர் பிள்ளையைத் தத்து எடுக்க முடிவு செய்து காப்பகம் சென்ற போது அவர்களுடைய பொருளாதார நிலையால் அவர்களுக்கு பார்வையற்ற குழந்தையை பரிந்துரை செய்தது, தங்கள் நிலையை உணர்ந்து அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதன் விளைவாக அவர்கள் எதிர்கொண்ட வேதனைகள் எத்தகையது என்பதையும், தத்தெடுப்பதற்கு முன்பு அவர்களுடைய வேதனை எத்தகையது என்பதையும்  மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர். மற்றொரு கதையில் பார்வையில்லாமல் பிறந்த குழந்தையை கொல்லத்துடிக்கும் தன் தாயிடம் இருந்தும் மஞ்சள் காமாலை நோயிடமிருந்தும் தன் பிள்ளையைக் காக்கத் துடிக்கும் வருமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் தாயின் போராட்டத்தை அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார்.

கண் தானம் செய்வதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ள கதையில், விளையாடிய குழந்தையின் முகத்தில் பட்ட சிமெண்ட் பிள்ளையின் கண்களை காயப்படுத்தி பார்வையை இழக்கும் அளவிற்கு பாதிக்கிறது. இதனை அறியாத அந்த குழந்தை எனக்கு ஏம்மா எல்லாம் இருட்டா தெரியிது என்று கேட்க, தங்களுக்குள் அழுதுக்கொண்டிருந்த பெற்றோர் தன் பிள்ளையிடம் எதைச் சொல்லி சமாலிப்பது என்று எண்ணியபடி, சூரியனை யாரோ திருடிக்கிட்டு போயிட்டாங்கம்மா போலீஸ் மாமா சீக்கிறமா சூரியனைக் கண்டுப்பிடிச்சி கொண்டு வந்துடுவாரு என்று சொல்லியதிலிருந்து அந்த குழந்தை தினம்தினம் போலீஸ் மாமா எப்பம்மா சூரியனைக் கண்டுப்பிடிப்பாரு என்று கேட்பதைக் கேட்ட அந்த பெற்றோரின் கண்ணீரோடு நமது கண்ணீரும் கலப்பதைத் தடுக்க இயலாது.

இன்றளவும் கழிவறை இல்லாத கிராமங்கள் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. இந்தச் சூழலில் காலைக் கடன்களை முடிக்க பொதுவாக பெண்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை பல கதைகள் மூலமும், அனுபவ பகிர்வுகளின்ன் மூலம்ும் அறிந்திருப்போம். ஆனால், ஒரு பார்வையற்ற பெண்ணின் நிலை குறித்து யாரும் சிந்தித்திருக்க மாட்டோம். ஏன் இந்த கதையில் அந்த பெண்ணின் தாய்கூட உணர்ந்திருக்கவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த பெண்ணிற்கு விடுமுறையில் விடுதியில் இருந்து வீட்டிற்கு போக மனமில்லை என்று தொடங்கும் கதையின் மூலம் கழிவறையின் அவசியத்தை கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று கூறுவதைவிட கழிவறை இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது என்று கூறி படிப்பவர் உள்ளத்தில் உறையச்செெய்திருக்கிறார்.

கோடம்பாக்கம் மேம்பாலத்திற்கு அருகில் என்ற கதையில் பார்வையற்றோரின் பலகால போராட்ட உணர்வைக் குறித்தும், போராடுவதன் அவசியம் குறித்தும், அரசின் போக்கு, காவல்துறையின் ஒடுக்குமுறை, ஊடகங்களின் உலகம் என அனைத்தையும் அடுக்கடுக்காக எடுத்துரைத்துள்ளார். பார்வையற்றோரின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் போலீசிடம் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவனின் தாய், சார் அவன இந்த ராத்திரி நேரத்துல தொந்தரவு செய்யாதிங்க சார், அவனோட அப்பா போன வாரம்தான் செத்துபோனாரு. அவருக்கு கொள்ளிய போட்டுட்டு உடனே அவசர வேலையிருக்குனு சொல்லி கிளம்பி வந்துட்டான் சார் என்று சொல்லி அழுத போது அந்த போலீசுடன் சேர்த்து படிக்கும் நம் கண்களிலும் நீர் ததும்பியது.

திரு. விரல்மொழியர் என்பவருக்கு சிறந்த படைப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படுகிறது. அந்த விழாவில் பார்வையற்றோர் புத்தகங்களைப் படிப்பதற்காக எத்தகைய போராட்டங்களைச் சந்திக்கிறோம் என்பதை மிகச் சிறப்பாக குறிப்பிடுகிறார். படித்து காட்டச் சொல்லி கேட்கும் பார்வையற்ற பெண்ணிடம், உங்களுக்கு வேண்டியதை நான் செய்கிறேன் எனக்கு வேண்டியதை நீங்கள் எனக்கு செய்ய வேண்டும் என்று கூறியவரிடம் என்ன சார் செய்யனும் என்று அந்த பெண் கேட்டதற்கு அந்த மனிதர் நீங்க என்னோட உடலுறவில் என்று கேட்டுள்ளார் என்ற தொடரைப் படித்த நமக்கு இந்த காட்சி சமுதாயத்தின் மீது வரும் கோபத்திற்கு அளவே இல்லை. இந்த அனுபவத்தை பகிர்ந்த அந்த வெண்பாவும் திரு. விரல்மொழியரும் திருமணம் செய்துக்கொண்டதை வாசிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த பார்வையற்ற இணையர் திருக்குறள் போல் பேரோடும் புகழோடும் பல்லாண்டு வாழ வாழ்த்தி இந்த நூலினை அனைவரும் அவசியம் வாங்கி படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சூரியனை போலீஸ் மாமா கண்டுபிடித்தாலும் சரி, அல்லது தன் மறைவை அகற்றிக்கொண்டு சூரியனாக உதித்து வந்தாலும் சரி, எப்படியானாலும் இருளில் இருந்து சூரியன் வெளிப்படும் நாளில் பார்வையற்றோரின் விடியல் தொடங்கும்.

இந்த புத்தகத்தை படிக்க விருப்பமுள்ளவர்கள் பதிப்பகத்தையோ அல்லது நூலின் ஆசிரியரையோ தொடர்புக்கொண்டு ரூபாய் 230 செலுத்தி புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

எழுத்தாளர் சரவணன் அவர்களைத் தொடர்புக்கொள்ள

8680855285

நன்றி.

சேதுபாண்டி 

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கை

தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கை


பேராசிரியர் முனைவர் மு. முருகேசன் அவர்களது கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள் என்ற நூலினை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

பார்வையற்றோர் பிறந்தது முதல் இந்த பார்வையுள்ள பொதுச் சமுதாயத்தில் எப்படியெல்லாம் போராட வேண்டியுள்ளது, எத்தனை எத்தனை வலிகளைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது போன்ற செய்திகளை அனுபவ     ஆதாரங்களுடன் பட்டியலிட்டு எடுத்துரைத்துள்ளார் நூலின் ஆசிரியர்.

இந்த நூலினை படிக்கும் பொழுது ஒரு புத்தகத்தை படிக்கிறோம் என்ற எண்ணம் சிறிதும் தோன்றவில்லை. மாறாக பார்வையற்ற நண்பர்கள் கூடி அனுபவங்களை பகிர்ந்துக்கொண்ட உணர்வே மேலோங்கியது. 


    
    

பொதுவாக இந்த சமூகம் பார்வையற்றோரைப் பார்த்து உங்களுக்கென்ன பார்வை இல்லை என்பதால் எல்லாம் எளிதாக கிடைத்துவிடுகிறது என்று கூறுவது வழக்கம். ஆனால், பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு என கல்வி கற்பதற்காக, கல்வி கற்கும் பாட புத்தகங்களை தங்களுக்கேற்ற வடிவில் உருவாக்குவதற்காக, தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, கல்வி தேர்ச்சி பெற்றபின் போட்டித் தேர்வுகளுக்காக, போட்டித் தேர்வுகளுக்கான தரவுகளைப் பெறுவதற்காக, பெற்ற தரவுகளை அனுகல் தன்மையுள்ளதாக மாற்றுவதற்காக, தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக, தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, சரியான பதிலி எழுத்தர் அமர்த்தப்படுவதற்காக, தேர்வில் வெற்றிப் பெற்று பணியில் சேர்வதற்காக, சேர்ந்தபின் தங்கள் இருத்தலை உணர்த்துவதற்காக, பணிகளை மேற்கொள்வதற்காக, மேலதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் தங்களை நிருபிப்பதற்காக, பணி நிறைவு பெறுவதற்காக, பயணம், காதல், திருமணம், உறவுமுறை, பிள்ளை வளர்ப்பு, குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்றல், சமூக ஈடுபாடு  என பல நிலைகளில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு, அடக்கப்படுதல், அலட்சியப்படுத்துதல், ஆதிக்கம் செலுத்துதல், இடர்விளைவித்தல், இட்டுக் கூறுதல், உதாசினப்படுத்துதல், உரிமை மறுத்தல், ஊழ்ப்பழி சுமத்துதல், ஊறு விளைவித்தல், எட்டிவைத்தல், ஏளனம் செய்தல், ஒடுக்கப்படுதல், ஒதுக்கப்படுதல், ஒருமையில் விளித்தல், கலகம் கற்பித்தல், புறக்கணித்தல் போன்ற பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை எதிர்கொண்டு அளவில்லா வலிகளையும் வேதனைகளையும் பார்வையற்ற ஒவ்வொருவரும் அனுபவித்து வருவதை இன்நூல் பலருடைய வாழ்வின் வழியே விளக்குகிறது. அதே நேரத்தில் பார்வையற்றோருக்கு இந்த காட்சி சமூகம் எப்படியெல்லாம் உறுதுணையாக இருந்துள்ளது என்பதையும் ஆங்காங்கே சுட்டியுள்ள குறிப்புகள் மூலம் அறிந்துக்கொள்ள முடிகிறது. 

ஆசிரியர் தங்களது பார்வையற்ற சமூகம் வாழ்வில் எத்தகைய பாதிப்புகளை அடைந்துள்ளது என்பதை இந்த பொதுச் சமூகத்தில் தனது நூலினை குற்றப் பத்திரிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.

ஆசிரியர் குற்றம் என்று சுட்டும் ஒவ்வொன்றும் சட்டப்படியும் குற்றமாக கருதப்படுவதை ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2016 அத்தியாயம் 16 பிரிவு 92 உறுதிப்படுத்துகிறது.

92.1. பொதுவெளியில் ஊனமுற்ற நபர்களை எந்த இடத்திலும் வேண்டும் என்றே அவமதித்தல் அல்லது வேண்டும் என்றே அவமானப்படுத்தும் நோக்கத்துடன் மிரட்டுதல்.

92.2. ஊனமுற்ற நபரை வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது பலவந்தப் படுத்துதல் அல்லது ஊனமுற்ற பெண்களை மானபங்கப்படுத்துதல்.

92.3. ஊனமுற்ற நபர்களை தங்களின் கீழ் வசப்படுத்தி அல்லது கட்டுப்படுத்தி வேண்டுமென்றே அல்லது தெரிந்தே உணவு அல்லது திரவபொருள் கொடுக்க மறுத்தல்.

92.4. ஊனமுற்ற குழந்தை அல்லது பெண்ணின் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலை மற்றும் அந்நிலையை பயன்படுத்தி பாலியல் ரீதியாக சுரண்டுதல்.

92.5. ஊனமுற்ற நபரை வேண்டுமென்றே காயப்படுத்துதல் அல்லது கால் அல்லது உணர்வு அல்லது ஆதரவு கருவிகளைச் சேதப்படுத்துதல் அல்லது பயன்பாட்டில் தலையிடுதல்.

போன்ற செயல்பாடுகளுக்கு ஆறு மாதத்திற்கு குறையாத ஆனால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சட்டத்தின்படி புகார் வழங்கினாலும் இந்த காட்சி சமூகத்தில் நீதி கிடைப்பதற்குள் அவை பல வகையில் திரிக்கப்பட்டு நீர்த்து போய்விடுகிறது. 

எனவே இந்த புத்தகத்தை அதாவது இந்த குற்றப் பத்திரிக்கையை படிக்கும் ஒவ்வொரு பார்வையுள்ளவரும் பார்வையற்றவரும் தங்கள் மனதளவில் உணர்ந்தால் மட்டுமே சம உரிமை, சம வாய்ப்பு, முழு பங்கேற்பு சாத்தியமாகும்.

பேராசிரியர் முனைவர் முருகேசன் அவர்களைத் தொடர்புக்கொள்ள

9962445442

நன்றி.

சேதுபாண்டி