செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி பேசுகிறதாமே!



தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி பேசுகிறதாமே!


பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரியில் காலெடுத்து வைக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு மடிக்கணினி வழங்கி ஊக்கப்படுத்துகிறது. இந்த மடிக்கணினியை பலரும் பல விதங்களில்  பயன்படுத்துகின்றனர். சிலர் அதனை பத்திரமாக பூட்டி வைக்கின்றனர், சிலர் விற்றுவிடுகின்றனர், சிலர் செய்வதறியாது வியந்து நோக்குகின்றனர், சிலர் அதனை முறையாக பயன்படுத்துகின்றனர்.  இதில் பார்வையற்றோருடைய நிலை என்ன என்பதை சற்று சிந்திப்போம். அரசு மடிக்கணினியை வழங்க தொடங்கிய காலம் அது. பள்ளிக் கல்வியை முடிக்கும் நேரத்தில் அனைவருக்கும் எவ்வித வேறுபாடுமின்றி அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்பட்டது. அப்போது ஒருவர், மடிக்கணினி பெற்ற பார்வையற்ற ஒருவரை பார்த்து, இத போயி உனக்கு கொடுக்குறாங்களே இத வச்சிக்கிட்டு நீ என்ன செய்ய போற? ஏதோ கையில எதையோ கொடுத்த மாதிரில இருக்கு, என்று ஏளனம் செய்து நகைத்ததாக கேள்வியுற்றேன். நாளடைவில் அந்த நகைப்பிற்குரியவர் யார் என்பதை காலம் அவர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்று நம்புகிறேன். பாருங்கள் சமூகத்தின் பார்வையில் நாம் எப்படி பார்க்கப்படுகிறோம் என்பதை! இந்த நிலை தற்போது குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்று மாலை எங்கள் ஊரில் வசிக்கும் என்னுடைய தங்கை ஒருவருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. அதை ஆன் செய்ததும் பேச தொடங்கிவிட்டதாம். அவர்கள் ஏற்கனவே என்னுடைய மடிக்கணினியை பார்த்திருப்பதால், இது சிறப்பு மென்பொருளான என்.வி.டி.ஏ என்பதை அறிந்து,  என்னுடைய தம்பி தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு அதனை பற்றிக் கேட்டான், நானும் ஏதோ எனக்கு தெரிந்ததை தெரிவித்தேன். இந்த நேரத்தில் ஒரு சிறுக்குறிப்பு, இந்த தம்பியும் தங்கையும் எனக்கு ஏற்படும் கணினி ஐயங்களை அவ்வப்போது தீர்த்து வைப்பவர்கள். இந்த மென்பொருளை அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? ஒரு ஆங்கில வார்த்தைக்கு சரியான உச்சரிப்பு தெரியவில்லை என்றால் உடனே அந்த மென்பொருளை இயக்கிவிட்டு, உரிய சொற்களை தட்டச்சு செய்து உச்சரிப்பை அறிந்துக்கொள்கின்றனர். இதனால் நம்முடைய என்.வி.டி.ஏ மென்பொருள் அவர்களுக்கும் பயன்படுகிறது, அதே நேரத்தில் நம்மை பற்றிய ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது எனலாம்.
இந்த என்.வி.டி.ஏ மென்பொருள் அரசு வழங்கும் மடிக்கணினிக்குள் எப்படி வந்தது தெரியுமா நண்பர்களே? அவ்வளவு சுலபமாக வந்துவிடவில்லை! பல முறை பல அதிகாரிகளை சந்தித்து, அவர்களுக்கு இந்த மென்பொருளை பற்றி எடுத்துரைத்து, இந்த  மென்பொருளால் மடிக்கணினிக்கு எவ்வது பாதிப்புமில்லை என்பதை உணர்த்தி, பார்வையற்ற ஒருவரை அதிகாரிகளுக்கு முன் அழைத்து சென்று அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை விளக்கி, பல நிலைகளில் அலைந்து திரிந்து ஒரு வழியாக ஒப்புதல் பெற்று, இன்று அரசு மாணவர்களுக்கு  வழங்கும் அத்தனை மடிக்கணினியிலும் என்.வி.டி.ஏ மென்பொருள் நிறுவி வழங்க   காரணம், தொழில்நுட்பத்தை நம் வாழ்வோடு இணைக்க இரவும் பகலும் உழைத்து வரும் அகேட் இன்ஃபோடெக் இயக்குநர். திருமிகு. எஸ். சங்கர் ஐயா அவர்கள் உள்ளிட்ட பெரியவர்கள் தான் என்பதை மகிழ்ச்சியுடனும்  நன்றியுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்!  அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
எனக்கு இன்னும் இது தொடர்பாக சில ஆசைகள் இருக்கின்றன. பார்வையற்ற ஒவ்வொரு மாணவருக்கும் அவர்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே கணினி கற்பிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் எந்த சூழலிலும் பிரெயில் மறக்கடிக்கப்படக்கூடாது. நாளடைவில் தேர்வுகளை கணினி மூலமாகவே எதிர்க்கொள்ள வேண்டும். பார்வையற்ற அனைவரிடமும் வெண்கோள் இருப்பது போல, மடிக்கணினி இருக்க வேண்டும். நம்முடைய மூத்த ஆசிரியர் அமல்ராஜ் ஐயா அவர்கள், பிரெயிலும் வெண்கோளும் நமக்கு இரண்டு கண்கள் என்று  அடிக்கடி சொல்வார்கள். தற்போது நமக்கு கணினி ஒரு மூன்றாவது கண் எனலாம். இந்த ஞானக்கண்ணினை அரசே அனைவருக்கும் இலவசமாக வழங்குமானால் பார்வையற்ற அனைவரும் பார்வை பெற்றதற்கு சமம். சமுதாயத்தில் ஒரு புரட்சியே  உருவாகும்! பெரியோர்களும், தன்னார்வளர்களும், பார்வையற்றோருக்கான அமைப்புகளுமே இதற்காக தொடர்ந்து செயல்பட்டு செயல்படுத்த வேண்டும்.
நண்பர்களே உங்கள் அனைவருக்கும் அடியேனின் தாழ்மையான வேண்டுகோள். முடிந்த வரை அனைவரும் என்.வி.டி.ஏ மென்பொருளை முழுமையாக பயன்படுத்துங்கள். அதில் உள்ள நிறைகுறைகளை என்.வி.டி.ஏ தளத்திலோ அல்லது திருமிகு. தினகர் ஐயா அவர்களது மின்னஞ்சலுக்கோ எழுதுங்கள். நாம் இப்படி செய்வதன் மூலம் நம்முடைய பயன்பாட்டிற்காக, நம்மவரால், நமக்காக இலவசமாக உருவாக்கப்படும் மென்பொருள் மெம்மேலும் வளர்ச்சியடையும். மேலும், பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கினால் மேலும் சிறப்புறும். நான் இந்த மென்பொருளை இந்த அளவிற்கு வளியுறுத்துகிறேன் என்றால், அதற்கு காரணம் அந்த அளவிற்கு இந்த மென்பொருளால் நான் பயனடைந்துள்ளேன் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 2010 க்கு  முன்பு ஜாஸ் மூலம் கணினியை பயன்படுத்தினேன். அதற்கு பிறகு என்.வி.டி.ஏ மூலம் கணினியை பயன்படுத்தி, அதனை படுத்தியெடுக்கிறேன் என்று சொன்னால் மிகையாகாது!  அந்த அளவிற்கு இந்த மென்பொருள் எனக்கு உறுதுநையாக இருக்கிறது. மேலும், இதில் முழுமையான தமிழ் இடைமுகப்பு வசதி உள்ளது. அதாவது, இந்த மென்பொருள் தொடர்பான அனைத்து செயல்பாட்டையும் தமிழிலேயே பயன்படுத்தலாம். இதில் கூடுதலாக தேவைக்கேற்ப எலக்குவன்ஸ் போன்ற ஒலிப்பான்களையும் இணைத்து பயன்படுத்த இயலும். இதில் இல்லாத சில பயன்பாடுகளை பெற கூட்டுறுப்புகள் கிடைக்கின்றன. அதனை நிறுவி அதற்குரிய பயன்பாட்டை பெற முடியும். எனவே அனைத்து பார்வையற்றோரும் இந்த மென்பொருள் மூலம் கணினியைப் பயன்படுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்.வி.டி.ஏ மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திருமிகு.ஜேம்ஸ் டே மற்றும் திருமிகு. மைக் கரண் அவர்களுக்கும், அதனை மேம்படுத்தும் பணியில் தமிழகத்திலிருந்து முழு ஈடுப்பாட்டுடன் செயல்பட்டு வரும் திருமிகு. தி.தே. தினகர் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்!  மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூவருமே பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் கேள்விப்பட்ட செய்தியை மட்டுமே பகிர்கிறேன், பிழைகள் இருப்பின் மன்னியுங்கள்.
நன்றி.....