கணினி மயமாக்கப்பட்ட இன்றைய உலகில்
எங்கும் கணினி எதிலும் கணினி என்றாகிவிட்டது. உலகத்தையே தன்னுல் அடக்கியுள்ள கணினி,
பார்வையற்றோருக்கு கண்ணாகவே செயல்பட்டு வருகிறது என்று சொன்னால் மிகையாகாது. பார்வையற்றோருக்கு
கணினி கண்ணாக செயல்படுகிறதா, அது எப்படி, பார்வையற்றோர் எப்படி கணினி பயன்படுத்த
முடியும், அவர்களுக்கென்று தனியே கணினி எதாவது உள்ளதா என்ற பல்வேறு ஐயங்கள்
நம்மிடையே தோன்றுவது இயல்பு. பார்வையற்றோருக்கான கணினி என்று தனியே ஒன்றும் இல்லை.
அனைவராலும் பயன்படுத்தப்படும் கணினியில் மென்பொருள் ஒன்றை நிறுவினால் போதும். அந்த
மென்பொருளினை இயக்கியவுடன் அது திரையில் உள்ளதை வாசிக்க ஆயத்தமாகிவிடும். இனி அதன்
உதவியுடன் கணினியை விசைப்பலைகை மூலம் பார்க்காமலே இயக்கலாம். பார்வையற்றோர்
கணினியை இயக்க மௌசும் மானிட்டரும் தேவையில்லை. கீபோர்டும் ஸ்பீக்கரும் இருந்தாலே போதும்.
இனி பார்வையற்றோர் கணினியை இயக்க உதவும் திரைவாசிப்பு மென்பொருள் குறித்து
காண்போம்.
திரைவாசிப்பு மென்பொருள்
திரைவாசிப்பு
மென்பொருள் என்பது, திரையில் உள்ளவற்றை பார்க்காமலேயே கீபோர்ட் உதவியுடன் கணினியை
பயன்படுத்த உதவும் ஒரு மென்பொருளாகும். பார்வையற்றோர் கணினியை பயன்படுத்துவதற்கு
உதவும் திரைவாசிப்பு மென்பொருளினை பல நிறுவனங்கள் உருவாக்கிவருகின்றன. உதாரணமாக,
அமெரிக்காவில் உள்ள ஃபிரீடம் சைன்டிஃபிக் (freedom scientific) என்ற நிறுவனம் ஜாஸ் (JAWS) என்ற திரைவாசிப்பு மென்பொருளினை (screan
reading software) ஆங்கிலம் உள்ளிட்ட மேலை நாட்டு மொழிகளில் கணினியை
பயன்படுத்த, 1990 முதல் வெளியிட்டு வருவதனை குறிப்பிடலாம். இந்த மென்பொருளினை பெற, குறிப்பிட்ட தொகையினை அந்த
நிறுவனத்தில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் கணினியை பயன்படுத்த இஸ்பீக் (Espeak) என்ற மென்பொருள் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த திரு. ஜோனத்தான் டட்டிங்டன் (Jonathan Duddington) என்பவரால்
1995 முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த
மென்பொருளானது முற்றிலும் இலவசமாகும்.
இந்த மென்பொருளினை மற்ற திரைவாசிப்பு மென்பொருளில் இணைத்து மட்டுமே பயன்படுத்த முடியும். ஏனென்றால், இது
ஒரு ஒலிப்பான் (Speech
synthesizer) ஆகும்.
இஸ்பீக் மென்பொருளின் 1.30 வெளியீடு 31.12.2007 அன்று வெளியானது. இந்த
வெளியீட்டில் தான் முதன் முதலில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல
வெளியீடுகளில் தமிழ் பல்வேறு வளர்ச்சியுடன், வெளியானது. இலவசமென்பொருளான இஸ்பீக்
ஒலிப்பானை பயன்படுத்தி, என்விடிஏ (NVDA) என்ற இலவச மென்பொருள்
2006 ஆம் ஆண்டு முதல் என்வி ஆக்சஸ் என்ற நிறுவனத்தால் உறுவாக்கப்பட்டு,
பல்வேறு பயன்பாட்டுக்கு சிறந்த மென்பொருளாக தொடர்ந்து வெளியாகி வருகிறது. இது போன்ற
மென்பொருட்களை மேலும் பல நிறுவனங்கள்
உறுவாக்கி வருகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட மென்பொருட்களே பெரும்பாலானோரால்
பயன்படுத்தப்பட்டூவருகிறது. பார்வையற்றோருக்காக உறுவாக்கப்படும் இந்த
மென்பொருட்களில் பார்வையற்றோரின் பங்களிப்பு என்ன என்பதை இனி காண்போம்.
மென்பொருள் உறுவாக்கத்தில் பார்வையற்றோர்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள என்விடிஏ என்ற
மென்பொருளினை உருவாக்கிவருபவர்கள் திரு.
மைக் கரண் (Mr. Mike curren), திரு. ஜேம்ஸ் டே (Mr. James teh) என்பவர்களாவர். இவர்கள் இருவருமே பார்வையற்றவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கதாகும். இந்த என்விடிஏ (NVDA) மென்பொருளில் தமிழினை மேம்படுத்த உறுதுணையாக
இருந்துவருபவர் திரு. தினகர் அவர்கள் ஆவார். இவர் தெற்கு இரையில்வேவில், துணை
முதன்மை திட்ட அலுவலராக உள்ளார் இவரும் ஒரு பார்வையற்றவர். மேலும் இவர்,
மைக்ரோசாஃப்ட் இயங்குதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தமிழ் ஒருங்குறி விசைப்பலகை
முறையை அடிப்படையாக வைத்து வள்ளுவன் பார்வை என்ற விசைப்பலகை முறையை
உறுவாக்கியுள்ளார். இவருடைய இந்த விசைப்பலகை முறையை அடிப்படையாக கொண்டு,
எழில்த்தமிழ் என்ற விசைப்பலகையை முனைவர். சரவணன் என்பவர் உருவாக்கியுள்ளார்.
இவரும் ஒரு பார்வையற்றவர் ஆவார்.
பார்வையற்றோருக்கான கணினி படிப்புகள்
பார்வையற்றோருக்கான சிறப்பு கணினி பயிற்சி
திரைவாசிப்பு மென்பொருள் மூலம், பல்வேறுப்பட்ட நிறுவனங்களால் பல நிலைகளில்
வழங்கப்பட்டு வருகிறது. மைக்ரோசாஃப்ட் ஆஃபிஸ், சி, சி ப்லஸ், ஜாவா போன்ற
பயிற்சிகளை குறிப்பிடலாம். மேலும், பார்வையுள்ளவர்கள் பயிலும் கணினி படிப்புகளான,
பி.எஸ்சி, பிசிஏ, கணினி தொழில்நுட்பவியல், முதுநிலை கணினியியல் போன்ற படிப்புக்களை
தற்போது பார்வையற்றோர் பயின்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கணினி பயிற்சி வழங்கப்படும் நிறுவனங்கள்
பார்வையற்றோருக்கான சிறப்பு கணினி
பயிற்சியினை பல்வேறு நிறுவனங்கள் வழங்கிவருகின்றன. தேசிய பார்வையற்றோர் நிறுவனம்,
தென்மண்டல மையம், பூவிருந்தவள்ளி, தேசிய பார்வையற்றோர் சங்கம், மாதவரம்,
மாநிலக்கல்லூரி, வர்த் ட்ரஸ்ட் அசோக் பில்லர், இந்திய பார்வையற்றோர் சங்கம் மதுரை
உள்ளிட்ட பல நிறுவனங்கள் இலவசமாக கணினி பயிற்சி வழங்கிவருகின்றன. மேலும்,
பார்வையற்றோர் பயிலும் சிறப்பு பள்ளிகளிலும் கணினி பயிற்சி வழங்கப்படுகிறது.
பார்வையற்றோர் கல்வி மேம்பாட்டில் கணினி
பார்வையற்றோர் ஒரு தகவலை ஒரு
புத்தகத்திலிருந்து பெற வேண்டுமானால், பார்வையுள்ளவர்களை சார்ந்தே பெற முடிந்தது.
ஆனால், இப்பொழுது கணினியே அந்த வேலையை செய்துவிடுகிறது. பார்வையற்ற ஒருவர் ஒரு
புத்தகத்தை படிக்க வேண்டுமானால், படிக்க வேண்டிய பக்கத்தை திறந்து கணினியுடன்
இணைக்கப்பட்டூள்ள ஸ்கேனரின் மீது வைத்தால் போதும் அது படித்துக்காட்டிவிடும்.
தங்களது பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களை இணையத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். கட்டுரைகள்,
தேர்வுகள் போன்றவற்றை கணினி மூலமாகவே தட்டச்சு செய்து வழங்கிடலாம்.
இனைய உலகில் பார்வையற்றோர்
பார்வையற்றோர் இணையத்திலிருந்து தகவல்களை
எடுத்து பயன்பெறுவதோடு நின்றுவிடவில்லை. அவர்கள் தங்கள் கருத்துக்களையும்,
படைப்புக்களையும் அனைவரோடும் பகிர்ந்துக்கொள்ளும் வகையில், தங்களுக்கென்று
வலைதளங்கள், வலைப்பூக்கள், மின்மடல் குழுமங்கள் போன்றவற்றை உருவாக்கி நடத்தி
வருகின்றனர். சமீபத்தில் பார்வையற்றோர்களால், பார்வையற்றோர்களுக்காக
உருவாக்கப்பட்ட இணையத்தென்றல்.காம் (inaiathendral.com)
என்ற வலைதளத்தை குறிப்பிடலாம். இதில், முக்கிய
நிகழ்வுகள், மென்பொருட்கள், அரசு ஆணைகள், ஒலிபுத்தகங்கள், மின் புத்தகங்கள்,
முக்கிய வலைதளங்கள் மற்றும் குழுமங்கள், நாளிதழ்கள் மற்றும் வார மாத இதழ்கள்,
பிரபலங்களின் மேற்கோல்கள் போன்றவை பகிரப்பட்டுள்ளன. பார்வையற்றோருக்கான முதல் மின்
அஞ்சல் குழுமம் வள்ளுவன் பார்வை (valluvanpaarvai@googlegroups.com)
ஆகும். இது
பார்வையற்றோர் தங்களது கருத்துக்களையும் படைப்புக்களையும் தமிழிலேயே பகிர்ந்துக்கொள்ளும்
பொருட்டு நடத்தப்படுகிறது. இதுபோன்ற பல மின் குழுமங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும்
நடத்தப்பட்டுவருகிறது.
பார்வையற்றோர் பணிபுரியும் துறைகள்
பார்வையற்றோர் தாங்கள் பணிபுரியும்
துறைகளில், கணினி உதவியுடன் பார்வையுள்ளவர்களுக்கு நிகராக திறம்பட
செயலாற்றிவருகின்றனர். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், தனியார்
நிறுவனங்கள் என அனைத்திலும் பார்வையற்றோர் சிறப்பாக பணிபுரிந்துவருவது
குறிப்பிடத்தக்கதாகும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மூலம்
பார்வையற்றோருக்கு கணினியெ கண் என்பது புலனாகிறது. அரசு வழங்கும் நலத்திட்டங்களில்
பார்வையற்றோருக்கு இலவச கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கினால் அனைத்து
பார்வையற்றோரும் கண்ணொளி பெறுவது உறுதி.
“கணினி கற்போம் கண்ணொளி பெறுவோம்”
தமிழ்நாடு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் 2013 ஆம் ஆண்டு நடைப்பெற்ற 33 வது ஆண்டு விழா மலரில் சே. பாண்டியராஜ் எழுதிய கட்டுரை.
தமிழ்நாடு பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் 2013 ஆம் ஆண்டு நடைப்பெற்ற 33 வது ஆண்டு விழா மலரில் சே. பாண்டியராஜ் எழுதிய கட்டுரை.