வெள்ளி, 16 ஜனவரி, 2026

பனித்துளி அளவேனும் ரௌத்திரம் பழகுங்களேன்!

சென்னை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பன்முக மேடை பதிப்பகத்தில் கவிஞர் முனைவர் உ. மகேந்திரன் அவர்கள், தனது "அனல் வீசும் பனித்துளிகள்" என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். "ரௌத்திரம் பழகு" என்ற முண்டாசுக் கவிஞனின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, தன் வரிகளால் வரையறைகளை மீறுபவர்களின் முகத்திரையைக் கிழித்தெறியும் இவரின் சமூக அக்கறையை வார்த்தைகளால் வரையறுத்திட இயலாது.

இவருடைய கவிதைத் தொகுப்பின் தொடக்கத்தில், பிஞ்சு மழலையின் கொஞ்சு மொழியை, செல்லமதன் சேட்டையை, அதன் தொடுதலில் உணர்த்திய நேசத்தை, தன்னைப் பண்படுத்திய பாசத்தை என மழலையின் மகத்துவத்தைக் கூறி நம்மை மகிழச் செய்கிறார். அடுத்த நிலையில் நட்பின் இலக்கணத்தை, அவர்கள் ஊட்டியில் அடித்த லூட்டியை எனப் பார்வையற்ற நண்பர்களுடனான மலைவாழ் அனுபவங்களைக் கூறி நம்மை மலைக்கச் செய்கிறார்.

இப்படித் தொடக்கத்தில் அன்பு, பாசம், நேசம் என நம் மனதை இதமாக்கி, தன் வரிகளுக்குள் நம்மை ஈர்த்துப் பயணிக்கச் செய்த கவிஞர், மெல்ல மெல்ல நமக்குள் சமுதாயத்தில் புரையோடிக்கிடக்கும் கொடூரங்களான ஒடுக்கப்படுதல், ஒதுக்கப்படுதல், அடக்கப்படுதல், ஆதிக்கம் செலுத்துதல், உதாசீனப்படுத்துதல், உரிமை மறுத்தல், புறக்கணித்தல், துரோகம் இழைத்தல் என்கிற அநீதிகளை எதிர்த்து, தவறைத் தட்டிக்கேட்கும் பொருட்டு "ரௌத்திரம் பழக" வேண்டியதன் அவசியத்தை நம் உள்ளத்தில் உறையும்படி உணர்த்தியுள்ளார்.


நூலின் அட்டைப் படம்

 

ஆசிரியர்களாம் எங்களை தெரியுமா என்ற கவிதையில்

மாணவர்களின் மனதில் பல ஆசையை புகுத்தி,

படிக்கும் எண்ணத்தை வெளியே துரத்தி,

சொல்லித் தருபவரை எதையும் சொல்லக்கூடாது என்று திருத்திய கொடுமைக்குத் தள்ளியது,

உங்களுக்கு ஒரு துளியேனும் வந்து சேர்ந்ததா?

அதிகாரிகள் என்கிற பெயரில், ஆளுக்கு ஒரு ஆணையிட,

அதை எங்கும் முறையிட முடியா நிலையில், தலை எங்கும் நறையிட்டு போய்,

உள்ளம் பாழ்பட்டு  போய் கிடக்கும் பிரஜைகளின் வேதனை உங்களின்  மனதினை அடைந்ததா?

வகுப்பெடுக்க முடியாமல், கணிப்பொறியில்  மாணவரின் குறிப்பை தலைக்கு நூறு  என பதிவேற்றி,

தொழில் திருப்தி இன்றி துயரத்தில் தவிக்கும் எங்களின் இடத்திலிருந்து எதையாவது உணர்ந்து கொள்ள முடிகிறதா?

திரை நடிகனிடம் தன் மூளையை அடகு வைத்த மாணவனை மீட்டிட, கண்டிப்பு காட்டிட முடியாமல், அதிகார வர்க்கத்தால் நிந்திப்பு பெறும் நிலையில் இருக்கும் எங்களை சிந்திக்க உங்களால் எப்பொழுதாவது மட்டுமே முடிகிறதா?

என ஆசிரியர்களை ஏளனம் செய்வோரிடம் தன் அறச் சீற்ற வினாக்களைத் தொடுத்து சிந்திக்க வைக்கும் பாங்கு பாராட்டிற்குறியது.

மாற்றுத் திறனாளிகளுக்கு நாநிலம் காணாத இட ஒதுக்கீட்டைக் கொடுத்து அவர்கள் உரிமைகளைக் காத்திடுவோம் என முழங்கியவர்கள்அரசியலில் இட ஒதுக்கீடு தருகிறோம் எனச் சொல்லி விளம்பரம் செய்து, அரசு பணி இட ஒதுக்கீட்டைப் பரித்திட்ட துரோகத்தை தன் அறச் சீற்றத்தால் பின்வறுமாரு  அடையாளப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

உடல் குறை கொண்ட ஏனையோரை,

வேலை ஏற்றம் காண வதை பட்ட  தன் மானத்தோரை,

எங்கெங்கும் மறுக்கப்பட்ட வேலையை மறியல் செய்து பெற்றுத் தந்த இருள் தேசத்தோரை,

படுமோசமாய் நசிக்கிடும் அரசு ஆணைக்கு,

வைத்த பெயரோ  ஒதுக்கீடு,

புரியவில்லை ஐயா இது எந்த மடையன் செய்த கணக்கீடு!

தள்ளாடிடும் தற்காலிக பணியும்,

விழியற்றவனுக்கு இன்று தள்ளாட்டம் காணுது,

துறைகள் எல்லாம் கணக்கிடுகிறோம்,

சிறப்பு தேர்வு நடத்தி ஆள் சேர்க்கும் ஆணை அதை விரைவில் விடுகிறோம்,

என்று அதிகார வர்க்கத்தின் அநியாயக்கார ஐ ஏ எஸ்  துரைகளும்

அவர்களை வைத்து சுட்ட அமைச்சரின் வடைகளும்,

இருள் நட்டு வெளிச்சம் பறித்தவனை வீதியில் வீசிய சதியை அன்றோ செய்தது!

என தொடரும் இருபத்துநான்கு என்னும் மத ஆணை என்ற கவிதையின் சில வரிகளே போதும் அரசு பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செய்திட்ட பச்சை துரோகத்தை உணர்த்திட!

ஆண் எனப்படுவது யாதெனின்?

 அவனுக்கு அது ஊட்டச்சத்து போல் ஊட்டப்பட்டு கொண்டே இருக்கிறது!

அது ஊட்டப்படும் விதத்தில் அவனுக்கு ஆண் எனப்படும் பதக்கம் சூட்டப்படுகிறது!

பதக்கம் சூட்டியவன் எதற்கும் துணிந்தவனாய் இருக்க,

மாண்புகளை மிதிக்கும் மகத்துவத்தை மானசீகமாய் அவன் துதிக்க,

வதைப்பதே வீரமென புத்தியில் நுழைப்பதை அவன் நுகர்ந்து கர்ஜிக்க,

அந்த அவமானத்தின் அரங்கேற்றம் அருவெறுக்க அன்றாடம் நடக்குது,

தாய் கொடிகளின் கருவறுப்பு ஐயோ தடுக்கப்படாமல் தொடருது!

எனத் தொடரும் கவிதையில் ஆணாதிக்கச் சிந்தனையைத் தோலுரித்துக் காட்டி, நாளுக்கு நாள் பிஞ்சுக் குழந்தைகள் முதல் முதிர்ந்த பெண்கள் வரை என எவரையும் விட்டுவைக்காத கொடூர புத்தி கொண்ட, காமவெறி கொண்ட மிருகங்களை விவரிக்கும் கவிஞரின் காத்திரமான வரிகளைப் படித்த எவரும், சாட்டையைக் கையில் எடுக்காமல் இருக்க முடியாது.

எளிய நடையில் அனைவரையும் கவரும் வகையில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கவிதையும் பல்வேறு வாழ்வியல் விழுமியங்களை எடுத்துரைத்து, காலந்தோறும் சமுதாயத்தில் பல்வேறு படிநிலைகளில் ஏற்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்பதை நம்மால் அறிய முடிகிறது. கவிதைகளைப் படிக்கும்போது பனித்துளி போன்ற இவரின் வரிகள் நம் உள்ளத்தில் அனலாக வீசுவதை நம்மால் மறுக்க இயலாது.

கவிதைகளில் பயணித்தவர்கள் பனித்துளி அளவேனும் "ரௌத்திரம் பழகுவது" உறுதி!

 அனல் வீசும் பனித்துளிகள் கவிதைத் தொகுப்பு தற்போது புத்தக திருவிழாவில் KVTC அரங்கு எண் 659, மதி நிலையம் அரங்கு எண் F14, உயிர் பதிப்பகம் அரங்கு எண் 107 போன்ற அரங்குகளில் விற்பனைக்கு உள்ளது.

பேராசிரியர் முனைவர் உ. மகேந்திரன் அவர்களைத் தொடர்புக்கொள்ள

9944505154

கவிஞரின் படைப்புகளை உடனுக்குடன் படித்திட

https://brighterfighter.blogspot.com/

நன்றி

சேதுபாண்டி 

திங்கள், 12 ஜனவரி, 2026

சென்னை புத்தக திருவிழா அரங்குகளும் பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகளும்

முழுமையாக படியுங்கள் தங்களின் பேராதரவை வழங்குங்கள்!

KVTC அரங்கு எண் 659.

பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகள் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு அரங்கு.

 

மதி நிலையம் அரங்கு எண் F14, உயிர் பதிப்பகம் அரங்கு எண் 107.

Everlasting Efforts: A Review of Services to the Blind 

Dr. K. radhabai.

கதிர்வீச்சு மற்றும் அணு ஆற்றல் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள்

ஜி.வைத்தியநாதன் & வி.ராஜகோபால் தமிழில் முனைவர் வரதராஜ்.

பார்வையற்றோரின் வாழ்வில் நிலையான வளர்ச்சிக்கான அழியா அஸ்திவாரங்கள்

முனைவர் K. ராதாபாய் தமிழில் முனைவர் வரதராஜ்.

அனல் வீசும் பனித் துளிகள்

முனைவர் உ. மகேந்திரன்.

 

தமிழ் மண் பதிப்பகம் அரங்கு எண் 514, 515

தேனூறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும் 

கோவை இளஞ்சூரியன் என்கிற திருக்குறள் பொன்னுசாமி

 

போதி வனம் பதிப்பகம் அரங்கு எண் 263, 264.

குரல்களின் ஊடாக இலக்கிய உலகையும் மனிதர்களையும் வாசிப்பவனின் சில உரையாடல்களும் மதிப்பீடுகளும்  

முனைவர் ஞானகுரு.

 

பாரதி புத்தகாலயம் அரங்கு எண் F43

கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள்

முனைவர் மு. முருகேசன்.

 

ஜீவா பதிப்பகம் அரங்கு எண் 172

பார்வையற்றோர் தன் மேம்பாடும் எதிர்நோக்கும் சவால்களும்

இந்தியாவில் பார்வையற்றோர்: கலை பண்பாடு களச்செயல்பாடுகள்

பார்வையற்றோர் நீங்கா நினைவுகளில் காரல்மார்க்ஸ் கண்ணன்

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம்.

தமிழ் வனம் பகுதி 1

தமிழ் வனம் பகுதி 2

அந்தகக்கவிப் பேரவை.

 

KVTC அரங்கு எண் 659-ல் உள்ள புத்தகங்களின் பட்டியல்

1. அந்தரத்தில் தொங்கும் நிலவு - சே.சரவணன்.

2. எங்கே எனது ஒளி - சே. சரவணன்.

3. வார்த்தைக்குள் சிக்காத இரவின் உயரம் - மு. ரமேஷ்.

4. தன்னடையாளங்களை எழுதி பார்த்தல் - மு. ரமேஷ்.

5. புத்தம் + திராவிடம் = சமூக நீதி - மு. ரமேஷ்.

6. தமிழ் சங்க மரபில் புத்த சங்க மரபு - மு. ரமேஷ்.

7. சங்க இலக்கியத்தில் நிலங்கள் குடிகள் வழிபாடுகள் - மு. ரமேஷ்.

8. சரித்திர விலாசம் - சுப்லாநாகராஜ்.

9. My First Impressions - காயத்திரி.

10. பூங்கொடி காதலி - சுப்லா நாகராஜன்.

11. பேசும் ஓவியம் - பா.மோகன்.

12. மணிமேகலைக் காப்பியம் வாசித்தலும் பகிர்தலும் - மு.ரமேஷ்.

13. சங்க இலக்கியத்தில் சமயங்களும் மெய்யியல் கூறுகளும் - மு. ரமேஷ்.

14. குடைக்குள் கொடை - பா.சுமதி.

15. அனல் வீசும் பனித்துளிகள் - உ. மகேந்திரன்.

16. நிசப்த அலைகள் - தாஹிரா.

17. முப்பாவில் முப்பால் - பா. மோகன்.

18. இருள் என்பது குறைந்த ஒளியே - அ. வெங்கடேஷ்.

19. மணிமேகலை காப்பியத்தில் பேரிடர் மேலாண்மை - மு. ரமேஷ்.

20. நாச்சியார் பிள்ளைத்தமிழ் - பா. மோகன்.

21. தேனூறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும் - இளஞ்சூரியன்.

22. சாஸ்தா பிறப்பு - சாரதா வேணுகோபால்.

23. திருக்குறளும் மணிமேகலையும் - மு. ரமேஷ்.

24. காத்திருப்பு - வே. சுகுமாரன்.

25. காட்டுவாத்துகள் - வே. சுகுமாரன்.

26. எங்கிருந்து வந்தாள் - வே. சுகுமாரன்.

27. நெருப்பு நிஜங்கள் - வே. சுகுமாரன்.

28. நியாயங்கள் காயப்படுவதா? - வே. சுகுமாரன்.

29. தொல் பனுவல்களும் பன்முக நோக்கும் - கு. பத்மநாபன்.

30. உயிர்க்காடு - கு. பத்மநாபன்.

31. காதல் மெய்ப்பட - அற்புதம்.

32. நெஞ்சில் நிறைந்தவை - அற்புதம்.

33. தனித்துவம் பேணிடாத் தமிழர் - அற்புதம்.

34. கதிர்வீச்சு மற்றும் அணு ஆற்றல் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள் - வரதராஜ்.

35. Everlasting Efforts: A Review of Services to the Blind - Dr. K. radhabai.

36. கூண்டில் ஏற்ற முடியாத குற்றவாளிகள் - மு. முருகேசன்.

37. புன்னகை அரும்புகள் - நா. ஆனந்தி

38. என் விழிக்கொரு தீபம் - நா. ஆனந்தி

39. பார்வையற்றோர் தன் மேம்பாடும் எதிர்நோக்கும் சவால்களும் - CSGAB.

40. இந்தியாவில் பார்வையற்றோர்: கலை பண்பாடு களச்செயல்பாடுகள் - CSGAB.

41. பார்வையற்றோர் நீங்கா நினைவுகளில் காரல்மார்க்ஸ் கண்ணன் - CSGAB.

42. தமிழ் வனம் பகுதி 1  - அந்தகக்கவிப் பேரவை.

43. தமிழ் வனம் பகுதி 2 - அந்தகக்கவிப் பேரவை.

 

KVTC அரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சில புத்தகங்கள் விற்பணைக்கு உள்ளன. எனவே, பொதுவாக விற்பனைக்காக உள்ள புத்தகங்களின் அரங்குகளை முதலில் குறிப்பிட்டுள்ளேன்.

புத்தகங்களை வாங்கி படித்து தங்களின் மேலான ஆதரவை வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி.

சேதுபாண்டி

 


வெள்ளி, 9 ஜனவரி, 2026

திருவாசகம் என்னும் தேனில் திருக்குறள் என்னும் கனிகள்!

கோவை இளஞ்சூரியன் என்கிற திருக்குறள் பொன்னுசாமி ஐயா அவர்களுடைய தேனூறும் திருவாசகமும் வான்புகழ் வள்ளுவமும் என்ற நூலினைப் படித்து, மலரில் தேனுண்ட வண்டுகள் மயங்கிக் கிடப்பது போல, மனமுருகி மயங்கி மகிழ்ந்து திளைத்தேன். திருவாசகம் என்னும் தேனில் திருக்குறள் என்னும் கனிகளைத் தோய்த்து நம்மைச் சுவைக்கச் செய்துள்ள பாங்கு போற்றுதற்குரியது.

தனது ஏழாவது வயதில் மஞ்சள் காமாலையால் கண் பார்வையை முழுமையாக இழந்த திருக்குறள் பொன்னுசாமி ஐயா அவர்கள், பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் உயர்நிலைக் கல்வியை முடித்துள்ளார். போதிய வழிகாட்டுதல் இன்மை, பொருளாதார வசதியின்மை போன்றவற்றால் இவரால் கல்லூரி கல்வியைத் தொடர இயலாமல் போனது. 


திருக்குறள் பொன்னுசாமி அவர்களின் புகைப்படம்


1981-ஆம் ஆண்டு ஓர் பஞ்சாலையில் பணிக்குச் சேர்ந்தவர் 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். ஏறக்குறைய கடந்த 45 ஆண்டுகளாக உடன் பணிபுரிந்த நண்பர்கள் சிலரின் உதவியுடனும், வானொலி உதவியுடனும், பிரெயில் புத்தகங்கள் மூலமாகவும் தானே முயன்று கற்று, உதடுகள் ஒட்டாத திருக்குறள் எத்தனை, திருவள்ளுவர் திருக்குறளில் எத்தனை இடங்களில் தேவர், கயவர், சான்றோர் போன்ற உயர்திணைகளையும்; யானை, புலி போன்ற விலங்குகளையும்; காகம், மயில் போன்ற பறவைகளையும் உவமையாகப் பயன்படுத்தியுள்ளார் என்பது குறித்து ஆழமான ஆய்வினை மேற்கொண்டு, கல்லூரி மாணவர்களிடையேயும், வானொலி போன்ற ஊடகங்களிலும் தொடர்ந்து ஆய்வுரை நிகழ்த்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் உரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படித் திருக்குறளில் ஆழங்கால்பட்ட இவர், திருவாசகத்தால் ஈர்க்கப்பட்டுத் திருவாசகத்தில் தனது ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கியதன் விளைவாக, மாணிக்கவாசகர் தன்னைத் தாழ்த்திப் பணிந்திடப் பல பாடல்களில் தன்னை 'நாயேன்' என்று குறிப்பிட்டுப் பாடியதைக் கண்டதும் அதையே ஓர் ஆய்வாக மேற்கொண்டுள்ளார். திருவாசகத்தில் எத்தனை இடங்களில் 'நாய்' என்ற சொல் வருகிறது என்று குறிப்பெடுத்து, அந்தப் பாடல்களைத் தொகுத்து வரிசைப்படுத்தி அதற்குப் பொருள் வழங்கி, 'நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகன்' என்ற பொருண்மையில் வடிவமைத்துள்ளார்.

·       நாயிற் கடையாய்க்  கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

·       தான் அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை

·       கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை

·       நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்

·       செய்வது அறியாச் சிறுநாயேன் செம்பொற் பாதமலர் காணாப்

இப்படி மாணிக்கவாசகர் தன்னை 'நாயேன்' என்று தாழ்த்திப் பணிந்து போற்றிப் பாடிய பாடல்களைத் தொகுத்துப் பொருளுடன் அறியத் தந்துள்ள ஆசிரியரின் முயற்சி போற்றுதற்குரியது. மேலும், திருக்குறளில் 'நாய்' என்ற சொல்லை வள்ளுவப் பேராசான் பயன்படுத்தியுள்ளாரா என்பதையும் ஆய்ந்து நமக்கு அறியத் தந்துள்ளார். திருவாசகத்தில் 'நாய்' என்ற சொல் இடம்பெறாத பதிகங்களில் உள்ள தெரிவு செய்த பாடல்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பொருளுரைத்துள்ள பாங்கு நம்மை வியக்கச் செய்கிறது.


நூலின் முகப்பு படம்

 

செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை

மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்

நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த

அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

 இப்பதிகத்தில் மாணிக்கவாசகர் தீவினைகளிலிருந்து விடுபட்டு, மெய்யுணர்வினை இறையருளால் பெற்று பிறப்பு அறுபட உதவியதாகக்கூறுகிறார்.

 திருக்குறளில் திருவள்ளுவர்ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டாம் ”, என்கிறார்.

 ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்

பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

 குறள் 357.

 

செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த

பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்

புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா

அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

 

மாணிக்கவாசகர் இங்கு “ பழுத்த மனத்தடியார் ” என்று மெய்யடியாரையும் தன்னை “ அழுக்கு மனத்தடியேன் ” என்றும் குறிப்பிட்டு,மனதில் அழுக்கான மாசு இருந்தால், தான் மெய்யடியாரோடு சேர இயலாத நிலையைத் தெரிவித்துள்ளார்.

 திருக்குறளில் திருவள்ளுவரும், " தன் மனதில் மாசு இல்லாமல் இருந்தால்தான், அறச்செயலைச் செய்திட இயலும் ”, என்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.

குறள் 34.

இப்படித் தேனூறும் திருவாசகத்தையும் வான்புகழ் வள்ளுவத்தையும் ஒருசேரச் சமைத்து விருந்து படைத்திட்ட ஆசிரியரின் ஆய்வுப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்! என்று சொல்லி வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

இந்த புத்தகம் சென்னை புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 514, 515 (தமிழ் மண் பதிப்பகம்) மற்றும் பார்வையற்ற படைப்பாளர்களின் படைப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் அரங்கு எண் 659-ல் கிடைக்கும்.

 

நூல் வெளியீட்டு விழா சிறப்புரை

நூலின் ஆசிரியர் திருக்குறள் பொன்னுசாமி அவர்களைத் தொடர்பு கொள்ள – 9655440080

நன்றி.

இவண்

சேதுபாண்டி